பேபி- விமர்சனம்
‘தாயும் சேயும் நலம்’ என்று பழகிய வார்த்தையை கூட ‘தாயும் பேயும் நலம்’ என்று மாற்றிவிடும் போலிருக்கிறது இந்த பேபி! ஏனென்றால் கதை அப்படி! பிறந்த குழந்தையை அநாதையாக்கிவிட்டு ஸ்பாட்டிலேயே கண்மூடி விடும் ஒரு அம்மா பேய், தன் மகளை காண வருகிறது. வந்த இடத்தில் மகளுக்கு இடைஞ்சலாக இன்னொரு மகள். சொந்த மகள் மீதிருக்கும் பாசத்தில் மற்றொரு மகளுக்கு அந்த அம்மா பேய் கொடுக்கும் டார்ச்சரும் அந்த குடும்பம் படும் அவஸ்தையும்தான் படம்.
இனி பேய் கதைகள் வந்தால் பொது ஜனங்களிடம் துட்டு வசூலித்தாவது மொத்த கோடம்பாக்கத்திற்கும் சேர்த்து வரி கயிறு தடிமனுக்கு ஒரு தாயத்து தயார் செய்துவிட வேண்டியதுதான்! அந்தளவுக்கு அலர்ஜியாகிவிட்டார்கள் ரசிகர்கள். அப்படியொரு நேரத்தில்தான் இப்படியொரு படம்! அந்த எண்ணத்தை சற்றே ஒத்திப் போட வைக்கிற அளவுக்கு ஒசத்தியாக உருவாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் டி. சுரேஷ்.
பெங்களூரிலிருக்கும் ஒரு அபார்ட்மென்ட்டில்தான் முக்கால்வாசி படமும் நடக்கிறது. ஒரு லிப்ட்…. வீட்டுக்குள்ளிருந்து அதை அடைகிற தொலைவு…. ஒரு அழுக்கு பொம்மை… இவை மூன்றையும் வைத்துக் கொண்டு, அடிக்கடி திடுக் திடுக் ஆக்குகிறார்கள் ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளரும். சற்றே அயர்ந்து சாய்கிற நேரத்தில், பிறந்ததிலிருந்தே நீலி பிருங்காதி கூந்தல் தைலத்தை குடித்தே வளர்த்திருப்பார்களோ என்கிற அளவுக்கு கூந்தல் அடர்ந்த ஒரு பேயின் தோற்றம்! சர்வ நாடியும் தடதடக்கிறது நமக்கு. அட… நமக்கே இப்படியென்றால், படத்தில் ஒரு குழந்தை. அது படுகிற அவஸ்தை? கண்ணில் கலவரமே வந்துவிடுகிறது.
அதிதீ….ய்ய்ய்ய்… என்று தன் மகளை ஆசையோடு அழைக்கும் அந்த பேயை கண்டு முதலில் திடுக்கிடும் ஸ்ரீவர்ஷினி, அதற்கப்புறம் நாலைந்து காட்சிகளுக்குள் பரஸ்பர நட்பு வளையத்திற்குள் சென்றுவிடுகிறாள். தனியாக அமர்ந்து விளையாடுவதும், படம் வரையும்போதெல்லாம் தலைவிரி கோலமாக ஒரு குழந்தையை வரைவதுமாக தும்மினால் கூட மிரட்டல் மிரட்டல்! இந்த படத்தின் ஆகப்பெரிய சொத்துக்களே இரு குழந்தைகள்தான். முதலில் இந்த ஸ்ரீவர்ஷினி. அதற்கப்புறம் மனோஜ் ஷிராவுக்கு ஒரிஜனலாக பிறந்திருக்கும் சாதனா! தனி ஒருத்தியாக இருந்து அம்மாவின் அன்பை பெற்ற ஸ்ரீவர்ஷினி, இன்னொரு குழந்தையபன சாதன்யா வீட்டுக்கு வந்ததும் காட்டுகிற பொசசிவ்னஸ்… மிகவும் கவலை ஏற்படுத்துகிறது. சொந்த மகளுக்கு இப்படியொரு சோதனை என்றால் விடுமா பேய்? ஆரம்பிக்கிறது சேட்டையை. சாதன்யா முன் அவ்வப்போது தோன்றி மிரட்ட… அப்பாவை தேடி மொட்டைமாடிக்கு ஓடுகிறது குழந்தை. அங்கு? ‘பாவம்யா, விடுங்க’ என்று ரசிகர்கள் கதறுகிற நிலைமைக்கு தள்ளுகிறார் இயக்குனர்.
பிறந்த குழந்தை உயிரோடு இருக்கும்போது, எதற்காக இன்னொரு வளர்ப்புகுழந்தை? மிக சுருக்கமாக ஒரு பிளாஷ்பேக். அதை நச்சென்று புரிய வைத்துவிட்டு மீண்டும் மிரட்ட ஆரம்பித்துவிடுகிறார் டைரக்டர் சுரேஷ். ஒரு சந்தர்ப்பத்தில் அப்பா அம்மா இருவருக்குமே பேயின் திருவிளையாடல் புரிய வர, எப்படி அவற்றிலிருந்து தப்பித்தார்கள் என்பது கிளைமாக்ஸ்.
பாரதிராஜாவின் மகன் மனோஜ்தான் இப்படத்தில் வரும் அப்பா. ஒருபுறம் படம் வரைந்து கொண்டே, தன் மகள் செய்யும் வேலைகளை கவனித்துக் கொண்டேயிருக்கிறார். எங்கெல்லாம் பேய் வந்து மிரட்டுமோ, அதன் மீதெல்லாம் அந்த குழந்தை ஒரு பேப்பரை ஒட்டி ஒட்டி வைக்கிறது. கடைசியில் மனோஜுக்கு உண்மை தெரியவரும்போது, ‘இனியாவது அந்த குழந்தையை தனியா விடாதீங்கடா…’ என்று கத்த வேண்டும் போலிருக்கிறது. இவருக்கு மனைவியாக ஷிரா. எங்கோ பார்த்த மாதிரியிருக்கிறது. நடிப்பு சிறப்பு.
பேயாக வரும் அந்த பெண் அஞ்சலி ராவ், சாவதற்கு முன்பிலிருந்தே கூட பேய் போலவேதான் இருக்கிறார். என்ன ஒன்று? ஆஃப்டர் த டெத், முட்டைக்கண் இன்னும் பெரிசாகியிருக்கிறது. வழக்கமான பேய் படங்களுக்குரிய எல்லா லாஜிக்கையும் உடைத்தெறிந்த இயக்குனர், ஆவியென்றால் ஆவின் பால் கலர் வெண்மையில்தான் டிரஸ் பண்ணும் என்கிற விஷயத்தை மட்டும் மீறாமலிருந்தது ஏனோ?
‘குழந்தை உன் ஜாடையில் இல்லையே? எதுக்கும் டி.என்.ஏ டெஸ்ட் எடுத்துப்பாரேன்’ என்று எந்த தோழியாவது சொல்வாளா? அவள்தான் சொல்கிறாள் என்பதற்காக யாராவது டி.என்.ஏ டெஸ்ட் எடுப்பார்களா? ஒருவேளை மேல்தட்டு குடும்பங்களில் சகஜமோ என்னவோ?
மிக உயரமான டாப் ஆங்கிள் ஷாட்டிலிருந்தே நம்மை கிறங்கடிக்க ஆரம்பிக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜோன்ஸ் ஆனந்த். அவர் வைத்திருக்கும் ஒவ்வொரு கோணமும் அசத்தலோ அசத்தல். பேயே வராத காட்சிகளில் கூட, அது நம் பக்கத்து சீட்டில் இருப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது அவர் காட்டியிருக்கும் வித்தை. பாடல்களில் பெரிசாக அக்கறை காட்டாத இசையமைப்பாளர் சதீஷ்ஹாரிஷ், அதற்கும் சேர்த்து பின்னணி இசையில் மிரள வைக்கிறார்.
நீராவி எது? நிஜ ஆவி எதுன்னு தெரியாத அளவுக்கு வாரத்துக்கு பத்து ஆவிப்படம் வருது! இங்கு வெள்ளாவியில் வெளுத்த திரைக்கதையோடு வந்து ‘வெல்கம்’னு சொல்ல வச்சுட்டாரு அறிமுக இயக்குனர் டி.சுரேஷ். அவருக்கு உலக ஆவிகள் முன்னேற்ற கழகம் சார்பில் அநேக பாராட்டுகள் வந்தாலும் வரும்! எதுக்கும் இன்னைக்கு ராத்திரி லைட்டெல்லாம் ஆஃப் பண்ணி வச்சுட்டு வெயிட் பண்ணுங்க ப்ரோ!
-ஆர்.எஸ்.அந்தணன்