பாலா அழைப்பு! ஜீவா மறுப்பு!
போன பிறவியில் துணி துவைக்கும் கல்லாக பிறந்தவர்கள் மட்டுமே, அடுத்த பிறவியில் பாலா படத்தில் ஹீரோவாக நடிக்கிற தைரியத்தை பெற்றிருக்க முடியும். அடியென்றால் அடி… அப்படியொரு அடிக்கு தயாராக இருக்கிற ஒரு ஹீரோ கூட்டம், ‘பாலா பாலா’ என்று ராப்பகலாக மந்திரம் உச்சரித்து வந்த கதையெல்லாம் ஒரு ‘தாரை தப்பட்டை’யோடு பேக்கப் ஆகிவிட்டது!
ஜமக்காளம் கிழிய கிழிய வெளுத்த பாலாவும், தன் சாயம் வெளுத்துவிட்டதே என்பதை உணரும் கால கட்டம்தான் இது. ஏன்? விஷால், ஆர்யா, ஜெயம் ரவி என்று சிலரை லிஸ்ட் போட்டு குற்றப்பரம்பரை படத்திற்கு பிளான் போட்டாரல்லவா? இப்போது அதற்கான பைனான்சும் கிடைக்கவில்லை. மேற்படி பேட்ஸ்மேன்களும் கிரவுண்டுக்குள் என்ட்ரியாக தயாராக இல்லை. என்னதான் செய்வார் அவர்?
குற்றப்பரம்பரையை பிறகு பார்க்கலாம். அதற்கு முன்பு தனது ஸ்டைலில் இன்னொரு படத்தை இயக்கிவிடலாம் என்று நினைத்தாராம். தன் மீது ஆர்வமாக இருக்கும் ஹீரோக்களின் நஷ்ட லாபங்களை ஆராய்ந்தவர், ஜீவாவுக்கு அழைப்புவிட அந்தோ பரிதாபம். அவரும் தன் கூலிங் கிளாசை கழட்டி நிஜக் கண்ணோடு கவனிக்க ஆரம்பித்துவிட்டார் பாலாவை. “அமீரோட ‘ராம்’ படத்திலேயே நான் நல்ல நடிகன்னு நாட்டுக்கு நிரூபிச்சிட்டேன். அதுக்கு பிறகும் உங்க படத்தில் நடிச்சு நிரூபிக்கணுமா? நமக்கு வருஷக்கணக்குல ஒரே படத்தில் நடிக்கிற ஆசையெல்லாம் இல்லீங்க” என்று கூறிவிட்டாராம்.
எல்லா ஹீரோக்களின் மண்டைக்குள்ளும் ஒளி வெள்ளம் ஓவர் நைட்ல பாய்ஞ்சா மிஸ்டர் பாலா என்னதான் சார் பண்ணுவாரு?