பாலா தர்றது வலியில்ல… அனுபவம்! ஆனந்தப்படும் அதர்வா!
களவாணி, வாகை சூடவா மாதிரியான அடையாளம் காட்டும் படங்களை எடுத்த சற்குணம், ‘அப்புறம் எங்கேய்யா போனாரு?’ என்று ‘நய்யாண்டி’ பண்ணிய ஊருக்கு, ‘நான் இருக்கேன்ல?’ என்று வந்து நிற்கிறார் அவர். மறுபடியும் ஒரு தஞ்சாவூர் மண் வாசக் கதையோடு வந்திருக்கும் அவர், இந்த முறை நம்பியிருப்பது அதர்வாவையும், கயல் ஆனந்தியையும். ‘இந்த கதையை நானேதான் சொந்த பேனர்ல தயாரிக்கணும்னு இருந்தேன். கேமிராமேன் செழியனிடம், எங்க படத்துல வொர்க் பண்ணுங்க என்று கதையை சொன்னேன். அவர் பாலா சாரிடம் சொல்லியிருக்கிறார். நல்ல கதை… என்று செழியன் கொடுத்த குட் சர்டிபிகேட்டை நம்பி என்னை வரவழைத்த பாலா இன்டர்வெல் வரைக்கும் கதை கேட்டார்.
‘இந்த கதையில் யார் நடிச்சா பொருத்தமா இருக்கும்?’ என்றார். நான், ‘அதர்வா’ என்றேன். அதற்கப்புறம் செகன்ட் ஹாஃப் கேட்டவர், ‘இந்த படம் ஹிட்டாவும்’ என்றார். அதுதான் பெரிய பாராட்டு. ‘அதற்கப்புறம் நானே இந்த படத்தை தயாரிக்கிறேன்’ என்றார். ‘எனக்கும் மகிழ்ச்சி’ என்றார் சற்குணம்.
களவாணி பார்த்ததில் இருந்தே நான் அதே மாதிரி ஒரு சப்ஜெக்ட் கிடைக்குமா என்று தேடிக்கிட்டு இருந்தேன். பாலா சார் என்னை வரவழைச்சு நான் ஒரு பிராஜக்ட் சொல்றேன். உனக்கு சரியா இருக்கும். பண்ணு என்றார். நான் சரின்னு சொல்லிட்டேன். அப்புறம்தான் சற்குணம் சார் கதை சொன்னார். படு சுவாரஸ்யமான கமர்ஷியல் கதை. இதில் நான் சிங்கப்பூர்ல வேலை பார்த்துட்டு சொந்த ஊருக்கு வந்து அங்க என்ன பண்ணுறேன்னு கதை டிராவல் ஆகுது என்றார். ஒரு ஊரே ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் அதர்வாவும் நின்று முறைத்துக் கொள்வதுதான் படத்தின் பரபரப்பான சுச்சுவேஷன்.
கழுத்து வரைக்கும் கட்டை மொட்டையாய் வெட்டினாலும், பாலா மீதிருக்கும் கிரேஸ் போகாது போலிருக்கிறது அதர்வாவுக்கு. பாலா உங்களை ஆபிசுக்கு வரச்சொல்லி கூப்பிட்டப்போ, நம்ம தலையை மறுபடியும் நறுக்கப் போறாருன்னு அச்சம் வரலயா? என்றால், பகீர் ஆகிறார் பார்ட்டி. சார்… பாலா சார் நம்மளை செதுக்குவதை வலியா பார்க்கவே கூடாது. அது அனுபவம். பயிற்சி…. இனிமேலும் எத்தனை முறை கூப்பிட்டாலும் நான் அவர் படத்தில் நடித்துக் கொண்டேயிருப்பேன் என்றார்.
கதவிடுக்குல நசுங்கணும்னு பல்லிக்கு விதி இருந்தா அதை யாரால் காப்பாற்ற முடியும்? போங்க போங்க…