குடி… அலட்சியம்… ஷுட்டிங் வராமல் டிமிக்கி! ஜெய் மீது பலூன் தயாரிப்பாளர் புகார்!
யாராவது நடிக்க வாய்ப்பு தருவார்களா? என்று நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு திரியும் பலர், குறிப்பிட்ட நடிகராக இடம் பிடித்த பின் செய்கிற அமர்க்களம் இருக்கிறதே… அது அந்த ஹிட்லரின் ஆவிக்கே கூட பொறுக்காது! எப்படியோ தட்டுத் தடுமாறி 2 கோடி சம்பள அந்தஸ்தை எட்டிவிட்ட ஜெய்யின் அட்ராசிடியால் ஒரு படக்குழுவே பேதியாகிற நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
பலூன் என்ற படம் அண்மையில் திரைக்கு வந்ததை பலரும் அறிவார்கள். இழுத்துக்கோ புடிச்சுக்கோ என்று கலெக்ஷன் பார்த்துக் கொண்டிருக்கும் அப்படம் உருவான விதம், ரத்தக்கண்ணீர் நம்பர் 2.
நடிகர் ஜெய் பாதி நாட்கள் படப்பிடிப்புக்கே வர மாட்டாராம். வந்தாலும் புல் மப்பில் வந்து எப்படா ரூமுக்கு திரும்புவோம். மூக்கு முட்ட தண்ணியடிப்போம் என்கிற சிந்தனையோடுதான் நடிப்பாராம். கேரவேனுக்குள் புகுந்தார் என்றால், அவர் மீண்டும் வருவது என்பது சொர்க்க வாசல் கதவை திறக்கிற அளவுக்கு பிரசித்தம். தினந்தோறும் எட்டு மணி நேரம் கால்ஷீட்டில் நான்கு மணி நேரம் மட்டுமே நடித்துக் கொடுத்த இந்த நல்லவரால் சுமார் ஒன்றரை கோடி நஷ்டம்.
கொடைக்கானலில் பெரிய செட் போட்டுவிட்டு எல்லாரும் காத்திருக்க… சொல்லாமல் கொள்ளாமல் சென்னைக்கு ஓடி வந்துவிட்டாராம் ஒருமுறை. இப்படி இவரால் நஷ்டமான கணக்கை ஆதாரங்களோடு தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்திருக்கிறார்கள். இழந்த நஷ்டத்தை ஜெய்தான் சரி செய்து தர வேண்டும் என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே இதே மாதிரியான புகார்கள் வடிவேலு, சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் தரப்பட்டுள்ளன. நடிகர் சங்கத்தின் தலைவராகவும் இருக்கும் விஷால், இவர்கள் விஷயத்தில் நடுநிலை வகித்து நல்ல தீர்ப்பு தருவாரா?
ஆவலோடு காத்திருக்கிறது இன்டஸ்ட்ரி!