இப்படி நடிப்பான்னு தெரியலையே? தம்பியை நினைத்து உருகிய பாரதிராஜா
அச்சு அசலாக பாரதிராஜாவை ஜெராக்ஸ் எடுத்தது போலிருக்கிறார் அவருடைய சொந்த சகோதரர் ஜெயராஜ். ‘கத்துக்குட்டி’ படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமாகும் ஜெயராஜுக்கு இப்போதே அடுத்தடுத்த சினிமா வாய்ப்புகள் வந்தபடி இருக்கின்றன. பாரதிராஜாவின் உதவியாளராகப் பணியாற்றி தற்போது ‘மூச்’ என்கிற த்ரில்லர் படத்தை இயக்கும் வினுபாரதி தனது படத்தில் ஜெயராஜூக்கு மிக முக்கியப் பாத்திரம் கொடுத்திருக்கிறார்.
அடுத்தடுத்தும் நிறைய வாய்ப்புகள் வரும் நிலையில், ”கத்துக்குட்டி ரிலீஸுக்குப் பிறகே இனி படங்களில் நடிப்பேன்” எனக் கறாராகச் சொல்லிவிட்டார் ஜெயராஜ். இந்நிலையில், தன்னுடைய தம்பியே இந்தளவுக்குப் பிஸியான நடிகனாக மாறியதில் பாரதிராஜாவுக்கு சொல்ல முடியாத சந்தோஷம். கத்துக்குட்டி கதையை முழுக்கப் படித்துப் பார்த்து நரேனுக்குத் தந்தையாக நடிக்கச் சொன்னதே பாரதிராஜாதான். படத்தின் காட்சிகள் குறித்து ஜெயராஜிடம் சமீபத்தில் விசாரித்திருக்கிறார் பாரதிராஜா. படத்தில் காமெடியும் உருக்கமும் கலந்து நடித்த காட்சிகளை அப்படியே பாரதிராஜாவிடம் நடித்துக் காட்டியிருக்கிறார் ஜெயராஜ்.
இதில்,ரொம்பவே மனம் சிலிர்த்துப்போன பாரதிராஜா, ”நீ இவ்வளவு பெரிய நடிகன்னு தெரிஞ்சிருந்தா என்னோட படத்துலேயே நடிக்க வைச்சிருப்பேனே…” என உருகியிருக்கிறார். தனது மகன் மனோஜை நடிகனாக்க பல முயற்சிகள் எடுத்தும் பலனளிக்காத நிலையில், தனது தம்பி நல்ல நடிகனாக உருவெடுப்பதில் பாரதிராஜாவுக்கு மட்டற்ற மகிழ்ச்சியாம்.
உபரி தகவல்: தனது தம்பி ஜெயராஜ் பெயரில் உள்ள ராஜாவையும், சகோதரி பாரதியின் பெயரையும் சேர்த்துதான் தனக்கு பாரதிராஜா எனப் புனைப்பெயர் சூட்டிக் கொண்டார் பாரதிராஜா. சகோதரன், சகோதரி மீது பாரதிராஜாவுக்கு அவ்வளவு பாசம்!
-சந்தோஷ்குமார்.சு