ஆகாயத்தையே அரை டவலால் மூடிவிடுகிற அசகாய சூரர்கள் சினிமாவில் பெருகிவிட்டார்கள். கற்பனைக்கும் எட்டாத சம்பவங்களை கதைக்குள் போட்டுக் குலுக்கி, கண்மூடித் தனமாக வதக்கி, பல கோடி ரூபாய்களை போட்டுப் பொசுக்கி, கடைசியில் ஒரு வஸ்துவை கமர்ஷியல் கிளாசில் ஊற்றிக் கொடுப்பார்கள். தீர்த்தம் என்று நினைத்தால் தீர்த்தம். தீர்ந்தோம் என்று நினைத்தால் தீர்ந்தோம். அப்படியொரு ரெண்டும் கெட்டான் படம்தான் பீஸ்ட்!
“விஜய்யின் அழகென்ன, ஃபைட்டென்ன, ஸ்டைலென்ன, டான்சென்ன?” என்று சந்தோஷக் கூச்சலிடுபவர்களும், ‘நெல்சன் தளபதிய பழிவாங்கிட்டான்யா…’ என்று கதற கதற உதறலெடுப்பவர்களும் ஒரே தியேட்டரில் கூடிக் குழுமி இருப்பதுதான் பீஸ்டின் பிரைட்டும், டார்க்கும்! கடைசியாக விஜயகாந்த் இறக்கிவிட்ட அதே பஸ்டாண்டில் தனது கதைக்காக ஒதுங்கிய நெல்சன், அந்தப்பக்கம் பல வருடங்களாக திக்கு தெரியாமல் திரிந்து கொண்டிருந்த சாம்பிராணி பாயை கவனித்திருப்பார் போல. வாங்க தீவிரவாதி சார்… என்று அழைத்து வந்து விஜய்யின் தலையில் கட்டியிருக்கிறார். விளைவு? விஜய்யின் அத்தனை உழைப்பும் மோடி கவர்மென்டின் ஆயிரம் ரூபாய் நோட்டாகியிருக்கிறது. ஐ.பா.
ஒரு ஷாப்பிங் மாலை ஹைஜாக் செய்கிறது பாகிஸ்தான் தீவிரவாத கும்பல். சிறையிலிருக்கும் தனது தலைவனை விடுவிக்க வேண்டும் என்பதுதான் கோரிக்கை. தனது லவ்வருடன் அங்கே சிக்கிக் கொள்கிறார் ரா பிரிவு அதிகாரியான விஜய். பல்லாயிரம் குண்டுகளுக்கு தப்பி, வாயிலிருக்கிற பபுள்கம் கரைவதற்குள் அவர்களை நையப் புடைத்து சிக்கியவர்களை எப்படி தப்பிக்க வைத்தார் என்பதுதான் கதை.
சீட்டில் உட்கார்ந்த சில நிமிஷங்களுக்குள்ளேயே அந்த அரபிக்குத்து பாட்டை எப்ப போடுவாங்க என்ற எதிர்பார்ப்பு கிளம்பி விடுகிறது. அதிகம் காக்க வைக்காமல் தியேட்டரையே குதிக்க விட்டிருக்கிறார் விஜய். யூ ட்யூபில் பலமுறை பார்த்திருந்தாலும் அந்த அகன்ற திரையில், அசத்தும் பேக்ரவுண்டில் வைத்தகண் வாங்காமல் பார்த்து முடிக்கிறோம். அதன்பின் ஆளுக்கொரு கொட்டாவியை வாயில் திணிக்க ஆரம்பித்துவிடுகிறார் முன்னாள் வெற்றிப்பட இயக்குனர் நெல்சன். இவ்வளவு மொக்கையான திரைக்கதை இதற்கு முன்பு கூட விஜய் படங்களில் இருந்ததில்லையோ என்கிற அளவுக்கு இது எக்குதப்பான மொக்கை.
ஒரு மாலில் நூற்றுக்கணக்கான பணயக் கைதிகள். கண்முன்னே காட்டேரி போல நடமாடும் தீவிரவாதிகள். ஆனால் சிக்கிய ஒருவர் முகத்தில் கூட மரண பீதியில்லை. ஏதோ பிக்னிக் வந்த இடத்தில் சாப்பாட்டுக்கு உட்கார்ந்த கோலத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள். விட்டால் ‘ஸ்விகி, சொமாட்டோவில் ஆர்டர் போடலாமா மச்சி?’ என்று தீவிரவாதிகளிடம் கேட்டாலும் கேட்பார்களோ என்று கூட தோன்றியது.
நல்லவேளை… ஆறுதலாக இருந்தார் பூஜா ஹெக்டே. ரொமான்சுக்கோ, நடிப்புக்கோ அதிக நேரம் தராவிட்டாலும் கிடைத்த நேரத்தில் கண் சிமிட்டியது பூ.
படத்தில் இன்னொரு சர்ப்பிரைஸ் செல்வராகவன். அந்த கேரக்டர் ஏன் மூக்குப்பொடி விற்பவர் போல இருக்க வேண்டும் என்ற கேள்வி அடிஷனலாக ஒட்டிக் கொண்டாலும் நக்கல் டயலாக், அசால்ட் நடிப்பு என்று பிரமாதப்படுத்திவிட்டார் மனுஷன்.
கதாநாயகனுடன் கட்டி உருண்டு நேருக்கு நேர் நெஞ்சால் மோதி ரத்தக்களறி ஏற்படுத்தினால்தான் படமே சூடு பிடிக்கும். (சமீபத்திய எ.கா மாஸ்டர்) இந்தப்படத்தில் அதற்கு துளி கூட வாய்ப்பை தரவில்லை விஜய். கண்ணெதிரே வருகிற கருப்பு சட்டை ஆசாமிகளையெல்லாம் அப்பளம் சுடுவது போல சுடுகிறார். அவ்வளவுதான் பைட். அதுவே பெரிய பள்ளத்தை தோண்டி படுகுழியில் தள்ளிவிட்டது படத்தை. இருந்தாலும் வீடியோ கேம்ஸ்சுக்கு நிகரான அந்த பைட்டுகளை ரசிக்க முடிகிறது.
வில்லன் என்று ஒரு குள்ளனை காட்டுகிறார்கள். குபீரென்று சிரிப்பதை தவிர வேறு வழியில்லை.
யோகிபாபு உள்ளிட்ட நெல்சனின் அதே மன்னாரங் கம்பெனி இந்தப்படத்திலும் இருக்கிறது. மருந்துக்குக் கூட அவர்களால் பிரயோஜனம் இல்லை. நல்லவேளை… நெல்சன் கம்பெனியின் புது என்ட்ரியான விடிவி கணேஷ் காப்பாற்றுகிறார். ‘இன்னும் கொஞ்ச நேரம் பேசு தல…’ என்று ஏங்கவே வைக்கிறார் மனுஷன். ஆரம்பத்தில் வரும் அந்த தெலுங்கு டாக்டராலும் குலுங்குகிறது தியேட்டர்.
படத்தின் ஆகப்பெரிய ஆச்சர்யமும் ஆறுதலும் அனிருத்துதான். துள்ளல் இசை, துடிக்கும் பிஜிஎம் என்று கலக்கியிருக்கிறார்.
‘உனக்கு வேணும்னா தமிழ் கத்துகிட்டு வா,எல்லா தடவையும் ஹிந்தியை டிரான்ஸ்லேட் பண்ணிட்டு இருக்க முடியாது!’ இப்படியொரு வசனத்தை போற போக்கில் அடிக்கிறார் விஜய். சுச்சுவேஷன் டயலாக். நிறைய ரசிக்க முடிகிறது.
‘கதையை பத்தி பேசுவாங்கனு பார்த்தா அடுத்த படத்துல எவ்ளோ சம்பளம் வாங்கறதுன்னு பேசிக்கிறாய்ங்க’ -விஜய்யே தன் பேட்டியில் சொன்னது போல இளம் இயக்குனர்களின் ஆட்டிட்யூட் இருந்தால் பெரிய ஹீரோக்களையெல்லாம் பேரீச்சம் பழத்துக்கு தள்ள வேண்டியதுதான்.
நெல்சன் குரூப்புகளிடம் கவனமாக இருக்க வேண்டியதுதான் கதை கேட்பதை விட முக்கியம் விஜய்.
இதையெல்லாம் புரிஞ்சுகிட்டா போதும்… பீஸ்ட்டே தோல்வியின் லாஸ்ட்டா இருக்கும்!
-ஆர்.எஸ்.அந்தணன்