இன்னும் முடிவே பண்ணல… ! அதற்குள் வாயை கொடுத்து மாட்டிக் கொண்ட பாபிசிம்ஹா
சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படத்தில் நடிச்ச நீங்க, சம்பளத்திற்கு பதிலா அந்த படத்தின் கலெக்ஷன்ல ஷேர் கேட்கிறீங்களாமே? சில மாதங்களுக்கு முன் இப்படியொரு கேள்வியை பாபிசிம்ஹாவிடம் கேட்ட பிரஸ்சுக்கு, அவர் சொன்ன பதிலை ‘முகத்திலடித்தாற் போல…’ என்று வர்ணிப்பார்கள் இலக்கண வல்லுனர்கள். ‘ஷேரா? அப்படின்னா என்னா சார்?’ என்றார் நக்கலாக. அந்த நக்கலும் குத்தலும் அவரை சினிமா என்கிற நெடுந்தொலைவில் பாதி தொலைவிலேயே இறக்கிவிட்டு பதம் பார்த்துவிடும் என்பதை ஐயோ பாவம்… அவர் அறிவது எப்போதோ?
இப்பவும் அப்படியொரு வாய்ஜால சிக்கலில் சிக்கி, வெந்த புண் ஆகியிருக்கிறாராம் பாபி. சமீபத்தில் ஒரு பிரஸ்மீட்டில் நீங்க நடிக்கும் படங்கள் என்னென்ன என்று நிருபர்கள் கேட்க, வரிசையாக பதிமூணு சொச்சம் படங்களை சொல்லி வந்தவர், கடைசியாக AIADMK என்றார். மலையாளத்தில் வெளிவந்த பெங்களூர் டேஸ் படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார்கள் அல்லவா? அந்த படத்திற்கு அர்ஜூன் திவ்யா மற்றும் கார்த்திக் என்று பெயர் வைப்பதாக திட்டமாம். அதன் சுருக்கம்தான் இந்த AIADMK. இப்படியே பார்த்தால் AMBANI, MODI என்றெல்லாம் கூட பெயர் வைப்பது சுலபமாச்சே?
அதிருக்கட்டும்… இவர்கள் நினைக்கிற மாதிரி AIADMK என்று அவ்வளவு சுலபமாக பெயர் வைத்துவிட முடியுமா என்ன? அதற்கு அம்மாவின் அனுமதி வேண்டாமா? அதை பெறுவது அவ்வளவு சுலபமா? இப்படியெல்லாம் ஆயிரம் கேள்விகள். இதெல்லாம் முடிவாவதற்கு முன்பே, பாபிசிம்ஹா கூலாக AIADMK என்று கூறியதால், சம்பந்தப்பட்ட பட நிறுவனம் அவரது வாய்க்கு உடனடியாக ஒரு ஆட்டோமேடிக் லாக் சிஸ்டத்தை ஆன் லைனில் ஆர்டர் பண்ணியிருக்கிறார்களாம்.