அந்த நிமிஷமே சூர்யாவுக்கு போன் அடித்துவிட்டேன்! கேமிராமேன் திரு பேட்டி
பி.சி.ஸ்ரீராமின் சீடர் திருநாவுக்கரசு ( என்ற ) திருவை ‘மகளிர் மட்டும்’ படத்தின் மூலமாக ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசன். ஹேராம்’, ‘ஆளவந்தான்’ ,’காதலா காதலா’ ,என்று வரிசையாக கமல் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். ப்ரியதர்சன் இயக்கிய காஞ்சிவரம் இவரது மற்றொரு அடையாளம்.
இந்தியில் டகரம் மசாலாட, ‘பூல்புலையா’, ‘ஆக்ரோஷ்’ , ‘க்ரிஷ்3′ என்று பத்துக்கும் மேற்பட்ட மெகா பட்ஜெட் இந்திப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளராக இருந்து வருகிறார். ஆறு வருட இடை வெளிக்கு பின் சூரியாவின் ’24’ படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார் . சூர்யா குறித்து அவர் கூறுகையில்,
“சூரியா தவிர வேறு யார் தயாரிப்பாளராக இருந்தாலும் ’24’ இவ்வளவு சுலபமாக முடிந்திருக்காது. நல்ல நிலையில் தடையின்றி படப்பிடிப்பு நடத்த படப்பிடிப்பு குழுவுக்கு என்னென்ன தேவைப்படுகிறதோ அவை அனைத்தும் ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் ஒருங்கிணைத்து அளித்து ஊக்குவித்தார்.
எல்லா ஹீரோக்களுமே தங்களை சினிமாவுக்காக அர்ப்பணித்து கொண்டவர்கள்தான் என்றாலும் சூரியா இன்னும் ஒரு படி மேல் தனது அர்ப்பணிப்பை செயல்படுத்துவார். வில்லன் ‘ஆத்ரேயா’ பாத்திரத்தில் மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்தார் சூரியா. இன்று சினிமாவில் தொழில்நுட்பம் மிகவும் வளர்ந்துவிட்டது. இது சினிமாவுக்கு மிகவும்பெரிய சவாலாகவும் உள்ளது. அனால் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் விதமாக கதைகள் அமைவதில்லை. ஆனால் அந்த தொழில்நுட்பத்தை நன்கு செயல்படுத்த உதவும் விதமாக அமைந்தது ’24’ கதைக்களம். இயக்குநர் விக்ரம் குமாரின் நுணுக்கமான திரைக்கதை சிறப்பு அம்சமாக அமைந்தது . ஏன் ஆறு ஆண்டு காலம் தமிழில் படம் செய்யவில்லை என்று கேட்கிறார்கள். ஹிந்தியில் நான் பணியற்றிக் கொண்டிருந்ததால் இங்கு வர முடியவில்லை. அதேநேரம் நல்ல ஒரு படத்துக்காக காத்திருந்தேன் என்பதும் உண்மை. அந்த ஏக்கம் ’24’- ல் நிறைவேறியுள்ளது. இதற்கு முன் விக்ரம் குமார் அவர் படங்களுக்கு என்னை அழைத்த போதெல்லாம் அவருடன் பணியாற்ற நேரம் அமையவில்லை.
விக்ரம் குமார் என்னிடம் கதை சொல்லும் வேளையில் நான் அவர் கதை சொல்லும் விதத்தைக் கூர்ந்து கவனித்தேன். கதை சொல்லி முடிந்தவுடன் நான் பதில் எதுவும் சொல்லாமல் செல் போனில் டயல் செய்து கொண்டிருந்தேன். அந்த ஒரு நிமிடம் அவர் ‘என்ன இவர் என்னிடம் பதில் எதுவும் சொல்லாமல் போனை கவனித்துக் கொண்டிருக்கிறாரே’ என்று அவர் மனம் வருத்தப்பட்டிருக்கலாம். ஆனால் நான் போன் செய்தது சூர்யாவுக்கு.
அவரிடம், சார் கதையை கேட்டேன் எனக்கு மிகவும்பிடித்து விட்டது. எனக்கு இந்த படம் செய்ய வேண்டும் என்று விக்ரம் குமார் முன்னிலையில் சொன்னேன். எனக்கு அவ்வளவு மனநிறைவு அளித்தது. படத்தை இப்போது முழுவதுமாக பார்த்தபோது அந்த மன நிறைவு இரட்டிப்பானது,” என்றார்