கார்த்திக் சுப்புராஜ்… இப்படி செய்யலாமா சொல்லுங்க?
குறும்பட இயக்குனர்களுக்கெல்லாம் குரு சாமியாக விளங்குகிறார் கார்த்திக் சுப்புராஜ். அவர் இயக்கிய ஜிகிர்தண்டா மட்டும், தண்ட லிஸ்ட்டில் சேர்ந்திருந்தால் அதற்கப்புறம் ஒரு குறும்பட இயக்குனரையும் கூட நம்பி இவ்வளவு தொகையை இறைத்திருக்க மாட்டார்கள் தயாரிப்பாளர்கள். அவரது அடியொற்றி வந்தவர்களில் சிலருக்கு பாஸ் மார்க். பலருக்கு முட்டை என்பதுதான் நெட் ரிசல்ட்! இருந்தாலும், இந்த ‘குறு’நில மன்னர்களின் ஸ்பீட் காரணமாக குப்பைகளும் கோமேதகங்களுமாக கோடம்பாக்கத்தில்தான் எத்தனையெத்தனை கதைகள்?
சரி… கார்த்திக் சுப்புராஜ் மேட்டருக்கு வருவோம். விரைவில் அவரது நிறுவனம் சார்பாக அவியல் என்ற படம் வரப்போவதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. இந்த அவியல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஒரு விறுவிறுப்பான படம் போலிருக்கிறது என்ற நம்பிக்கையிலும் ஆசையிலும் யாராவது தியேட்டருக்கு வந்தால் திக்கற்ற பார்வதியாகிவிடுவது திண்ணம். ஏன்? இது அவரது ஒரே கதையை கொண்ட முழு படம் அல்லவாம்? பல குறும்படங்களின் சேர்க்கை. அவற்றையெல்லாம்தான் சட்டியில் போட்டு அவித்து அவியலாக்கி தரப்போகிறார் அவர்.
இதற்கு முன்பே ஐந்து குறும்படங்களை ஒன்றாக்கி இரண்டு மணி நேரம் ஓடுகிற ஒரு திரைப்படமாக கொடுக்க முயற்சித்தார் அவர். ரிசல்ட்? படு பயங்கரம். “சின்ன சின்னதா அஞ்சு படத்தை கோர்த்து காமிக்கிறாங்களாம்ப்பா” என்று விமர்சித்த பலர், அப்படியொரு முயற்சிக்கே மங்களம் பாடி விட்டார்கள். விநியோகஸ்தர்களும், “அட போங்க தம்பி… காமெடி பண்ணிகிட்டு” என்று இவரது முயற்சியை அங்கீகரிக்கவேயில்லை. இந்த முறை ‘ஷார்ட் பிலிம்ஸ் மிக்ஸ்’ என்று ஓப்பனாக தெரிவிக்காமலேயே அவியல் வடிவில் வரப்போகிறது அதே முயற்சி. ஒரு நல்ல கலைஞன் தன் ரசிகர்களுக்கு அதை வெளிப்படையாக சொல்லிவிட்டு வருவதுதான் முறை. ஆனால் பூசணிக்காயை சாம்பார் சட்டியில் மறைத்தபடி வருகிற கார்த்திக் சுப்புராஜை….
வரவேற்பதா, குறைசேர்ப்பதா? என்பதை அந்த குட்டி குட்டி படங்களை பார்த்த பின்தான் ஒரு முடிவுக்கு வர முடியும்.