படைப்பாளியை பின் தொடர்ந்த கார்?
அண்டங்காக்கா தொடையில அஞ்சு ரூபா சைசுக்கு மச்சம் இருந்தாலும் வெளியில் தெரியவா போவுது? அப்படிதான் சினிமாவுலகத்துல அநேக சமாச்சாரங்கள் ஒண்ணுக்குள்ள ஒண்ணா மிக்ஸ் ஆகிக் கிடக்கு. பெரிய அந்தஸ்திலிருக்கிற படைப்பாளிகளை கண்டால், பக்கத்திலேயே துண்டு போட்டு இடம் பிடிக்க ஒரு பெரும் கூட்டம் அலையும். கடவுளே… கண் கண்ட தெய்வமே…நாலும் அறிஞ்சவரே…அவரே… இவரே… பவரே… சுகரே…. என்று போற்றி புகழ ஒரு கூட்டம் கிளம்பி வந்துவிடும்.
எங்கோ தொலைவிலிருக்கும் ரசிகனின் கைத்தட்டலும் விசிலும்தான் தனக்கு ரத்த நாளம் என்பதை ஒரு கட்டத்திற்கு மேல் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அந்த படைப்பாளியை தனிமையில் தள்ளிவிடும் இந்த பொல்லாத கூட்டம். குப்பனும் கோவிந்தனும் ஒண்ணு போலிருக்கலாம். ஆனால், கோழிமுட்டையும் கொண்டைக்கடலையும் ஒண்ணு இல்லையே? தன்னை சுற்றி கொண்டைக் கடலையும் கோழி முட்டைகளும் சூழ்ந்திருந்த நாளில் அவர் எப்படியிருந்தார்? அவரை எப்படியெல்லாம் இருக்க விட்டார்கள்? அதுதான் இந்த எபிசோட்…
அவரொன்றும் சாதாரண மனிதரில்லை.
வழித் துணை ஐயனார்,
வழித் துனை பிள்ளையார்,
வழித் துணை மாரியாத்தா மாதிரி,
இவரும் ஒரு வழித் துணை சாமிதான்.
இசைச் சாமி!
நீண்டு கிடக்கும் நெடுஞ்சாலையில் மைல்களையும் கிலோ மீட்டர்களையும், நிமிஷமாகவும் வினாடியாகவும் மாற்றுகிற சாமி இவர். கார்ல இவரோட பாட்டை போட்டுட்டா, கையில பிடித்திருக்கும் ஸ்டியரிங்கே மியூசிக் டிஸ்க்காக மாறுகிற அதிசயத்தை நிகழ்த்தும் அவர் பாட்டு. ‘செவ்வாய் கிரகத்துக்கு போகணும்னா சில வருஷமாவது ஆவுமாம்ல… நம்ம சாமியோட பாட்டை ஓட விட்டுட்டு ராக்கெட்டை கிளப்ப சொல்லு. அஞ்சு எண்ணுறதுக்குள்ள ஆகாயம் தொறந்துக்கும்’ என்றால், ‘அதெப்படி?’ என்றெல்லாம் கேட்காது மனசு. அது அப்படிதான்!
நாடகமோ, சினிமாவோ, நவரசத்தை புழிஞ்சாதான் நடிப்பு. அந்த நவரசத்தையும் தாண்டி பத்தாவதா ஒரு பழரசம் தருவார் அவர். அதில்தான் மயங்கிக் கிடக்கிறது சினிமா. அந்த சினிமா மட்டுமல்ல, இந்த காற்றும்தான்! தண்ணியெல்லாம் கூவமாயிருச்சு. காற்று மட்டும் இன்னும் அப்படியே இருக்குன்னா, அதுல இவரு பாட்டும் கலந்திருக்கு. அதான்!
இசையில் அவர் கொடிகட்டி பறந்த காலம் அது. அவரை விட்டு நகராமலே இருந்த நந்திக்கெல்லாம் தொந்தி வளர்ந்தது. ஏதோ பந்திய விரிச்சோம், தொந்திய வளர்த்தோம்னு இல்லாம, அவரையே கடவுளாக்கி அவரையே தீபமாக்கினார்கள். தெரிந்தோ தெரியாமலோ மற்றவர்கள் தன்னை கடவுள் என்று வர்ணிப்பதற்கேற்ப அவரே ஆன்மீகத்தில் மூழ்கிப் போனார்.
அவர் துப்புனா பஞ்சாமிர்தம், துடைச்சு போட்டா வெண்பா தாள்னு எல்லாத்தையும் ஆன்மீகமாக்கினார்கள் அங்கிருந்த அந்த சுற்றமும் சுண்ணாம்பு டப்பிகளும்! அந்த நேரத்தில்தான் அவருக்கு ஒரு கார் டிரைவர் தேவைப்பட்டார். கலெக்டர் வேலைக்கு கூட ஆள் எடுத்துரலாம். கார் டிரைவர்தான் கஷ்டம்! உசுரையே ஒப்படைக்குறோம்ல?
‘அவருக்கு கார் ஓட்டணுமா? ஆண்டவனுக்கே தேர் ஓட்டற மாதிரியாச்சே!’ என்று க்யூ கட்டி நின்றது கூட்டம். நந்திகள்தான் இன்டர்வியூ வைத்தன. கொதிக்க வச்சு கொதிக்க வச்சு வடிகட்டுனதுல, கும்முன்னு ஒரு பையன் சிக்கினான். ‘நான் ரசிக்கிற சாமியோட மூச்சு காத்து நான் ஓட்டப்போற அந்த வண்டியிலயும் வரும்ல, அதுவே போதும் சார். மூணு வேள சோறு போடுங்க. முடிஞ்சா சம்பளம் கொடுங்க. மிச்சத்துக்கெல்லாம் அவரோட பாட்டையே போனசா கேட்டுக்குறேன்’ என்றான்.
நல்லது! அதற்காக நந்திகள் சும்மாயிருக்குமா? சில பல கண்டிஷன்கள் போட்டார்கள். அதில் முக்கியமானது இது.
ஐயா தன் வேலை முடிந்ததும் ரெக்கார்டிங் ரூமிலிருந்து வெளியே வருவார். அந்த வினாடி நேரத்திற்காக நீ காத்திருக்கணும். அவர் வெளியே வருவது தெரிந்ததும் காரை விருட்டென்று கிளப்பிக் கொண்டு போய், அந்த படிக்கு அருகில் நிறுத்த வேண்டும். அவரே கதவை திறந்து கொண்டு ஏறிக் கொள்வார். நீ அவரை திரும்பியே பார்க்கக் கூடாது. நேரா அவர் வீட்டுக்கு போகணும். அவரே கதவை திறந்து இறங்கிப்பார். இந்த சப்தம் கேட்டதும் நீ கிளம்பி வந்துவிடணும். இதுதான் கட்டளை. (திரும்பி பார்த்தால் அவருக்கு கோபம் வரும் என்றொரு அடிஷனல் பிட்டையும் தட்டிவிட்டுவிட்டார்கள்)
ஒவ்வொரு நாளும் டிரைவரும் மிக மிக சின்சியராக தன் கடமையை ஆற்றிக் கொண்டிருந்தான் . ஒரு நாளாவது கார் ஓட்டும்போது அவரை திரும்பி பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை அவனுக்கு இருந்தது. ஆனால் அப்படி திரும்பி பார்த்து, அவருக்கு கோபம் வந்து தன்னை விரட்டியடித்துவிட்டால்? ரியர் மிரர் வழியாக பார்த்தால் கூட அவருக்கு கோபம் வரும் என்கிற அளவுக்கு வேப்பிலை அடித்திருந்தார்கள் அந்த நந்திகள். அதனால் சாலையாச்சு. சைட்ல போகும் வண்டிகளாச்சு என்று நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன. அவரிடம் பேச வேண்டும். அவருடன் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும். ‘ஏன்ப்பா… உன் பேர் என்ன?’ என்று அவர் கேட்டு விட மாட்டாரா? அதற்கு பதில் சொல்லிவிட மாட்டோமா என்றெல்லாம் கூட ஆசை வந்தது. அப்படியெல்லாம் நடக்காது. ஆனால் அதையெல்லாம் நாமே வரவழைத்துக் கொண்டால்?
ஒருபுறம் ஆசை துரத்தினாலும், அச்சமும் ‘டேய் படவா…’ என்றது.
அவ்வளவு பெரிய சினிமா பிரபலத்திற்கு நான்தான் டிரைவர் என்று கிராமத்தில் பெருமை பீற்றியது கெட்டுப்போகுமே? ஆர்வத்தை அடக்கி மஞ்சப்பையில் போட்டு விட்டு கடமையே கண்ணாக கார் ஓட்டிக் கொண்டிருந்தான். தொண்டையே மிதக்குற அளவுக்கு இனிப்பு வேணும்னா மண்டை வெல்லத்தை முழுங்குனாதான் உண்டு! அந்த இனிப்புக்காகவே திக்கி திணறி மூச்சு முட்டி வேலை பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
ஒரு நாள் அப்படிதான்! அவர் அறையை விட்டு வெளியே வருகிற முஸ்தீபுகள் நடக்க ஆரம்பித்தன. வெளியே நின்று கொண்டிருந்த பலர், குனிந்து வளைந்து பவ்யமாகிக் கொண்டிருந்தார்கள். அவ்வளவு பேரும் பெரிய பெரிய தயாரிப்பாளர்கள், பெரிய பெரிய டைரக்டர்கள். ஐயா வருகிறார் என்பதற்கு அதுதான் அறிகுறி. படக்கென்று காரை கிளப்பிக் கொண்டு வந்து நிறுத்திவிட்டான் படியருகில். வழக்கம் போல கதவை திறக்க கையை நீட்டிய ஐயா, ஏதோ ஒன்றை எடுப்பதற்காக மீண்டும் அறைக்குள் நுழைய எத்தனிக்க, அது புரியாமல் ‘ஐயா உட்கார்ந்துட்டாரு போல’ என்று நினைத்து காரை கிளப்பிக் கொண்டு போய்விட்டான். சாலிகிராமம், வடபழனி, கோடம்பாக்கம் மேம்பாலத்தையெல்லாம் தாண்டி கார் தி.நகரை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. அப்போதெல்லாம் செல்போன் இல்லை. அதனால் எவரும் இவனை அழைக்கவும் இல்லை.
போய் காரை நிறுத்தினால் ஒரு அரவமும் இல்லை. இறங்கிய சத்தமும் இல்லை. திரும்பி பார்க்கவும் அச்சம். ஆனாலும் மனசை கல்லாக்கிக் கொண்டு திரும்பி பார்த்தால், ஐயா இல்லவே இல்லை. பூட்டிய கதவு பூட்டியபடி இருக்க, காரை திறந்து கொண்டு வீட்டுக்குள் ஓடினான். ‘ஐயாவை காணோம்மா… அவரு கடவுளாயிட்டாரு. திடீர்னு மாயமா மறைஞ்சுட்டாரு’ என்று அதுவரை அவர் மீது வைத்திருந்த அவதார பிம்பத்திற்கு மேலும் கொஞ்சம் உடுக்கை அடித்து முடிகயிறு கட்ட ஆரம்பித்தான் அந்த டிரைவர்.
‘டேய்… மண்ணாங்கட்டி. இப்பதான் அங்கிருந்து போன் வந்துச்சு. அவர் ஏற்றதுகுள்ள காரை எடுத்துட்டு வந்ததுட்டியாம்ல?’ என்று கடுப்பான சொந்தங்கள், அந்த ஸ்பாட்டிலேயே டிரைவரை துரத்தியடித்தது.
அதற்கப்புறம் நடந்ததுதான் கெக்க்கெக்க்கே! அவரு விரட்டினா என்ன? அதே தொழில் செய்யுற இன்னொருத்தர்ட்ட சேர்ந்தா போச்சு. எப்படியோ முட்டி மோதி அவரைப் போலவே பர்பாமென்ஸ் செய்யும் இன்னொருவருக்கு கார் ஒட்ட சேர்ந்தான். எவ்வித கெடுபிடியும் இல்லை அங்கே. சுதந்திரமாக இருந்தான். ஒரு நாள் இரவில்தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது. அந்த புதியவரை காரில் வைத்து ஓட்டிக் கொண்டிருந்தான். இரவு நேரமல்லவா? சற்று மிதமான வேகத்துடன் வண்டி போய் கொண்டிருந்தது. அப்போதுதான் தங்கள் காரை வேறொரு கார் பின் தொடர்வதை உணர்ந்தான். எங்கு திரும்பினாலும் அந்த கார் தங்களை தொடர்வதை போலவே இருந்தது டிரைவரின் கண்களுக்கு.
‘சார்… திரும்பி பார்க்காதீங்க. ஒரு கார் நம்ம காரை ஃபாலோ பண்ணிட்டு வருது. எந்த சந்துல திரும்புனாலும் ஃபாலோ பண்ணுது. எனக்கு அவரு மேலதான் டவுட்டா இருக்கு. நீங்க வேற அவருக்கு பிடிக்காத இடத்துக்கு வந்துகிட்டு இருக்கீங்க. உங்களுக்கும் நிறைய படங்கள் வருது. அந்த கடுப்புலதான் இப்படி வர்றாரு போல… ’ என்று இஷ்டத்துக்கு உளறி தள்ளினான் டிரைவர்.
‘திரும்பி பார்க்காதன்னு வேற சொல்றான். ஒரு வேளை பார்த்தா, அது அவருக்கு தர்ம சங்கடமா போயிருமோ?’ இப்படியெல்லாம் யோசித்த, இந்த படைப்பாளி, அந்த பக்கம் திருப்பு. இந்த சந்துல போ என்று வேறு வேறு ரூட்களில் வழி காட்டிக் கொண்டிருந்தார் டிரைவருக்கு. பல நிமிஷ டிராவலுக்கு பின், ‘இப்பவும் வருதாப்பா…’ என்று இவர் கேட்க, ‘ஆமாம் சார் . அதே வேகத்துல நம்மளை ஃபாலோ பண்ணுறார்’ என்றான் டிரைவர்.
‘இவன் பண்ணுன தப்புக்கு நாம ஏன் பயந்து சாகணும்? வண்டிய நிறுத்து. நான் இறங்கி நாலு வார்த்தை சூடா கேட்டுடறேன்’ என்று ஆவேசப்பட்ட புதுப்படைப்பாளி, காரை நிறுத்த சொல்லி படீரென இறங்கினார். பார்த்தால்…? அட நாதாரி டிரைவனே என்றானது அவரது கோபம். வேறென்றுமில்லை. ‘பின் தொடர்றாரு…’ என்று அவ்ளோ பெரிய படைப்பாளியை அநியாயத்திற்கு சிறுமை படுத்த காரணமாக இருந்தது ஒரு கார் அல்ல. இவர்கள் வந்த காரின் டிக்கி. அவ்வளவு நேரம் அது திறந்தேயிருக்க, காரின் பின் கண்ணாடியில் வேறொரு கார் தொடர்வதை போல இருந்திருக்கிறது டிரைவருக்கு.
அப்போது மட்டுமல்ல, எல்லா காலத்திலும் இப்படிதான் திருவிழா சர்பத்தை குடிச்சுட்டு கலர் கலரா வாந்தியெடுத்துகிட்டு இருக்கு கோடம்பாக்கம்!
(குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ஆர்.எஸ்.அந்தணன் எழுதி வரும் கோடம்பாக்கம் செக்போஸ்ட் தொடரிலிருந்து)