வீதிக்கொரு சாதி! தேதிக்கொரு சினிமா! மியாவ், கர்ஜனை ஆகுமா?
“எனக்கு தெரிஞ்சதெல்லாம் என் சாதிப் பெருமைதான். புடிச்சிருந்தா வா… புடிக்கலேன்னா போ…” என்கிற போக்கு இப்போது மெல்ல தென்பட ஆரம்பித்துவிட்டது. ஆனால் தேவர் மகன், சின்னக் கவுண்டர், மறுமலர்ச்சி போன்ற படங்கள் வரும்போது மட்டும் இத்தகைய புலம்பல்கள் இருந்ததில்லை. இப்போது இருப்பதன் காரணம் என்னவாக இருக்கும்?
காரம் கொஞ்சம் தூக்கலாக இருப்பதால்தான்…!
மதயானை கூட்டம், கொம்பன் போன்ற படங்களும் பா.ரஞ்சித், பரியேறும் பெருமாள்களும் இந்த காரத்தை இன்னும் கொஞ்சம் தூக்கலாக கொடுக்க கொடுக்க கொடுக்க… ‘அவனவன் சாதிப் பெருமையை அவனவன் பேசாம இருந்தால்தான் தப்பு’ என்கிற எண்ணம் தானாகவே ஊறிக் கொண்டிருக்கிறது ஆங்காங்கே!
இந்த நேரத்தில்தான் முத்தையாவின் ‘தேவராட்டம்’ வருகிறது. “இது சாதிப்படம் இல்லேங்க. நான் சாதி வெறியனும் இல்லேங்க” என்று சூடம் கொளுத்தி சத்தியம் பண்ணுகிறார் அவர். ஆனால் அவரை வைத்து இதே தேவராட்டம் படத்தை தயாரித்த ஞானவேல்ராஜா, “அப்படியெல்லாம் இல்லேங்க. இது சாதிப்படம்தான்” என்கிறார். இந்த கோக்குமாக்கான விளக்கங்களுக்கு அப்புறமும் முத்தையாவின் பேச்சை நம்புவதற்கு யார் தயாராக இருப்பார்கள்?
அதுபோகட்டும்… தேவராட்டம் படத்தின் ஹீரோ கவுதம் கார்த்திக் இப்போதுதான் வண்டியை சரியான பார்க்கிங்கில் நிறுத்தியிருக்கிறார் என்று சந்தோஷப்படுகிறது ஒரு குரூப். அவரது அப்பா கார்த்திக் நடித்த படங்களுக்கு இப்பவும் தென் மாவட்டங்களில் தனி மவுசு. எல்லாம் சாதி பலம். அவரது மகனான கவுதமுக்கு அதே பலத்தை கொடுத்து முட்டுக் கொடுக்க சகலவித ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கிறதாம்.
சிங்கமும் சரி.. குட்டி சிங்கமும் சரி… கர்ஜனை என்ற பெயரில் கொடுத்து வந்த மியாவ்களுக்கே இப்படியென்றால், நிஜமாக கர்ஜித்தால் என்னாவது?
அதே ஆவலோடுதான் காத்திருக்கிறார்கள் ‘தேவராட்டம்’ படத்திற்கு. இந்த முறை மூச்சை பிடிச்சாவது கர்ஜிச்சுருங்க தம்பி!