சபாஷ் நாயுடுவில் சாதிப் பெயர்? கமல் சமாளிப்பு!
தேவர் மகன் என்ற பெயரை வைத்து தீராத பழிக்கு ஆளானவர் கமல்! பல வருஷங்கள் கழித்து “நான் அப்படியொரு பெயரை தவிர்த்திருக்கலாம்’ என்று கூட சொல்ல வேண்டிய நிலைமையும் அவருக்கு ஏற்பட்டது. அதற்கப்புறம் சின்ன கவுண்டர், கவுண்டர் வீட்டு கதவு, முதலியார் வீட்டு முற்றம் என்றெல்லாம் தமிழ்சினிமா சாதிப் பித்து பிடித்து அலைந்தது. இன்னமும் அலைந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் கமல் மீண்டும் படு குழிக்கு ப்ளான் போட்டுக் கொடுத்திருக்கிறார். தெலுங்கு, இந்தியில் கூட இப்படத்தை உருவாக்கித் தரப்போகிறார் கமல். ஆனால் அங்கெல்லாம் அவர் சாதிப் பெயரை வைக்கவில்லை. இந்த பாழாய் போன தமிழ்நாட்டில்தான்…
இது குறித்து இன்று கமலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல், மது வேண்டாம் என்று படம் எடுத்தால் கட்டாயம் மதுவை காட்டிதான் ஆக வேண்டும். இதுவும் அப்படிப்பட்ட ஒரு விஷயம்தான் என்று கூறிவிட்டார். அதற்கப்புறம் அவர் சொன்னதுதான் கவருமென்டு காண்டு ஆகக்கூடிய விஷயம். இப்பவும் தெரு பெயர்களில் சாதி இருக்கிறதே? என்றொரு பதிலை கூறினார்.
இந்த முறை தமிழக அரசு செய்த நல்ல திட்டங்களில் ஒன்று தெருக்களில் இருக்கும் சாதி பெயரை நீக்கியதுதான். அப்பு முதலித் தெரு இப்போதெல்லாம் அப்பு தெரு என்றுதான் அழைக்கப்படுகிறது. இப்படி செட்டியார்களையும், நாயுடுகளையும், முதலியார்களையும் தெரு பெயர்களிலிருந்து நீக்கி சில வருஷங்கள் ஆகிவிட்டது. தினந்தோறும் செய்தித்தாள் வாசிக்கும் கமலுக்கு இந்த உண்மை தெரியாமல் போனது எப்படி?
வியப்புதான்!