ஆரம்பித்தது கலகம்! சிக்கலில் சிசிஎல்?
பணம் உள்ளே வந்தால் நிம்மதி வெளியே போய் விடும் என்பது, பேங்குகளை தவிர மீதி எல்லா இடத்திலும் சொல்லப்பட வேண்டிய சூத்திரம்! ஆரம்பத்தில் விளையாட்டாக ஆரம்பித்த சிசிஎல், இப்போது கடும் குடைச்சலுக்கு ஆளாக்கி விடும் போல் தெரிகிறது. இதனால் ‘பேட்’டை தூக்கிக் கொண்டு எந்நேரமும் விளையாட்டு நினைப்போடு திரிந்த நம்ம ஊர் ஸ்டார்களுக்கு கண்ணோரத்தில் எரிச்சல். காதோரத்தில் புகைச்சல்!
செலிபிரிட்டிகள் விளையாடும் இந்த கிரிக்கெட் போட்டியை ஆரம்பத்தில் தலைமை தாங்கி நடத்திய அப்பாஸ், அதிலிருந்து நைசாக ஓரம் கட்டப்பட்டார். அதற்கப்புறம் வந்தார் சரத்குமார். அவருக்கும் ஒரு கட்டத்தில் டென்ஷனை ஏற்றிய இளைஞர் அணி, மெல்ல மெல்ல அவரையும் ஓரம் கட்டியது. அதற்கப்புறம் கேப்டன் ஆனார் விஷால். கோடிகளும், அதற்கேற்ற குளறுபடிகளுமாக நகர்ந்து கொண்டிருந்த விளையாட்டிலிருந்து அவரையும் பேக்கப் செய்தார்கள். அதற்கப்புறம் ஜீவா வந்தார். இப்போது அவரும் இல்லை. ஆர்யா தொடர்கிறார். போகிற போக்கை பார்த்தால், இந்த சிசிஎல்லே இருக்காது போலிருக்கிறது. ஏன்?
தனக்கு வசதியாக அதன் சட்ட திட்டங்களை வகுத்துக் கொள்ளும் சிலரால்தான் அப்படி. இந்தமுறை இங்கிருந்து போன தமிழ் நடிகர்களுக்கு பட்டை நாமம். ஆட்டத்தில் படு மோசமாக விடை வாங்கி வெற்றி வாய்ப்பை இழந்தார்கள். அதற்கு காரணம், இந்த கிரிக்கெட் போட்டியை நடத்தும் நிர்வாகத்தினரின் தெலுங்கு பற்றுதான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறார்கள் சிலர். இத்தனை படங்களிலாவது ஹீரேவாக நடித்திருந்தால்தான் கேப்டன் ஆக முடியும். இத்தனை படங்களிலாவது நடித்திருந்தால்தான் ஆடவே முடியும் என்ற சட்டதிட்டங்கள் எல்லாம் தமிழ் நடிகர்களுக்குதானாம். ஆனால் தெலுங்கு நடிகர்களிடம் இதையெல்லாம் வற்புறுத்துவதில்லையாம் இந்த அமைப்பை வழி நடத்தும் குழு.
இது மட்டுமல்ல, இதுபோன்ற இன்னும் எண்ணற்ற ஆதாரங்களுடன் கோர்ட்டுக்கே போய்விட்டார் நடிகர் பாபு கணேஷ். விளையாடுங்க… நல்லா விளையாடுங்க. அதுக்காக தமிழ் நடிகர்களை கேவலப்படுத்தாதீங்க என்பதுதான் அவரது குரல்! நீர்க்குமிழி போல லேசாக ஆரம்பித்திருக்கும் இந்த பிரச்சனையை உடனே சரி செய்யாவிட்டால், குமிழி அலையாகி, அலை பேரலையாகி, பேரலை சுனாமியாகி, சிசிஎல்லையே கவிழ்த்துப் போட்டாலும் ஆச்சர்யமில்லை.
தமிழ் படவுலக கிரிக்கெட்டர்களே உஷார்…