நிஜ ஹீரோக்களான மயில்சாமி, சித்தார்த், ஆர்.ஜே.பாலாஜி! காணாமல் போன வாய் சொல் ஹீரோக்கள்

இந்த வெள்ளம் நிறைய பேரின் நிஜத்தை தோலுரித்து காட்டிவிட்டது.

முதல்வர் ஜெயலலிதா “தனியார் கல்யாண மண்டபங்கள் அனைத்தும் திறந்துவிடப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டிருக்கலாம். தனியார் முதலாளிகளை உதவி செய்யும்படி பணித்திருக்கலாம். தி.நகரின் குறுமஹா ராஜாக்களிடமிருந்து ஒரு பெட்ஷீட் கூட கிடைக்கவில்லை மக்களுக்கு. அவ்வளவு கூட வேண்டாம். தன் கட்சிக்காரர்களுக்கு “உடனடியாக களத்தில் இறங்குங்கள். நான் கண்காணித்துக் கொண்டேயிருக்கிறேன்” என்று ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நடந்திருப்பதே வேறாக இருந்திருக்கும். ஒரு அறிக்கை கொடுக்கிற அளவுக்கு கூட முடியாதளவுக்கு என்னாயிற்றோ அவருக்கு.

திமுக தலைவர் கலைஞரின் உத்தரவு கட்சிக்காரர்களை உசுப்பிவிட்டு களத்தில் இறக்கியதை இங்கு பாராட்டியே ஆக வேண்டும். இது ஒருபுறமிருக்க, கட் அவுட் வைக்கவும், கள்ள டிக்கெட் விற்கவும் தன் ரசிகர்களை பயன்படுத்திக் கொண்ட ரஜினி, கமல், அஜீத், விஜய் போன்ற டாப் ஹீரோக்கள் ஒருவரும் இது குறித்து வாயை திறக்கவேயில்லை. நாம் கேட்பதெல்லாம் தன் ரசிகர்களை உற்சாகமாக வேலை செய்ய தூண்டுவதற்கான ஒரு அறிக்கைதான். ஆனால் அதையும் மீறி, ரஜினி ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் உதவிப் பொருட்களுடன் வெள்ளப்பகுதிகளுக்கு நீந்தி சென்றதை பாராட்டியே ஆக வேண்டும். அஜீத் தன் வீட்டையும் தனக்கு சொந்தமான ஆதரவற்றோர் இல்லத்தையும் மக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவிட்டதையும் வந்தவர்களின் பசியாற்றியதையும் பாராட்டலாம்.

ஆனால் இவர்களையெல்லாம் விட, மழை வெள்ளம் பார்க்காமல் தண்ணீரில் மிதந்தும் நீந்தியும் சென்று உதவிய வகையில் உயர்ந்து நிற்கிறார்கள் நடிகர் சித்தார்த்தும், ஆர்.ஜே.பாலாஜியும். வாட்ஸ் ஆப் மூலம் பல்வேறு பகுதிகளில் இருந்து உதவிப்பொருட்கள், உணவுகளை ஓரிடத்தில் சேகரித்து அவற்றை இன்று வரை பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று விநியோகம் செய்து வருகிறார்கள். சல்யூட்!

மயில்சாமி, இப்போதும் சரி. கடந்த மழைக்கும் சரி. சாலிகிராமம் வடபழனி பகுதிகளில் இருக்கும் பல நூறு குடும்பங்களுக்கு உணவளித்திருக்கிறார். படகில் ஏற்றப்பட்ட உணவுப் பொருட்களுடன் அவரவர் வீடுகளுக்கு தேடி சென்று பசியாற்றிய மயில்சாமி, தான் ஒரு எம்.ஜி.ஆர் பக்தன் என்பதை பளிச்சென நிரூபித்திருக்கிறார்.

இந்த பெருமைகளை விடுங்கள். சமூக வலைதளங்களில் அஜீத் 60 லட்சம் கொடுத்தார். லாரன்ஸ் ஒரு கோடி கொடுத்தார். விஜய் 2 கோடி கொடுத்தார் என்று ஒரு கூட்டம் அளந்துவிட்டுக் கொண்டிருக்கிறது. இப்போது தேவை பணம் கூட இல்லை. ஒரு பால்பாக்கெட்டோ, ஒரு வாட்டர் பாக்கெட்டோதான். ரசிகர்களிடம் கட்டளையிடுங்கள். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

அதையும் செய்யாமல் வாய் மூடி மவுனிகளாகிவிட்ட ‘வாய் சொல்’ ஹீரோக்களை இனியாவது புரிந்து கொள்ளுமா வெறி பிடித்த மனசு?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
உறுமீன் விமர்சனம்

தொட்டுத் தொடரும் ‘வெட்டு’ பாரம்பரியமும், பகையும்தான் உறுமீன்! ஜென்ம பகை... ஜென்ம பகை... என்கிறார்களே, அது எப்படியிருக்கும் என்பதை நம்ப முடியாத மேஜிக்கையும், நம்பக்கூடிய லாஜிக்கையும் மிக்ஸ்...

Close