இலங்கை தமிழர்கள் மீது சேரன் அருவறுப்பு! மீண்டும் ஒரு டங்க் ஸ்லிப்?
டைரக்டர் சேரன் எந்த மேடையில் ஏறினாலும் பிரச்சனையை பைக்குள்ளேயே வைத்துக் கொண்டு வருவார். இவர்தான் இப்படி என்றால், தங்கர்பச்சான் கேட்கவே வேண்டாம். கடாமுடா பேர்வழி. இவர்களுடன் ஸ்டன்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கமும் சேர்ந்து கொண்டால், அது மேடையாகவா இருக்கும்? வேர்க்கடலை பொட்டலத்தில் நெருப்பை கொட்டி மென்ற மாதிரி மென்று கொண்டிருந்தார்கள்.
நிகழ்ச்சி- கன்னா பின்னா இசை வெளியீடு. நாளைய இயக்குனர் போட்டியில் கலந்து கொண்டு பரிசு வென்ற தியா என்பவர்தான் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஒரு காலத்தில் ஜிம் பாயாக இருந்தவர் இந்த படத்தின் தயாரிப்பாளர் சிவா. இவரது ஜிம்மில் எடை தூக்கிய எல்லாரும் இந்த விழாவுக்கு வந்திருந்தார்கள். அதனாலயோ என்னவோ இந்த நிகழ்ச்சி குறித்த செய்தியும் வெயிட்!
முதலில் சேரன் பேசியதை பார்ப்போம்-
“இந்தப்படத்தின் தயாரிப்பாளர் சிவா, நான் ஹீரோவாக நடிக்கும்போது எனக்கு ஜிம்மில் ட்ரெய்னிங் கொடுத்தவர்.. இந்தப்படத்தை தயாரித்தது மட்டுமல்லாமல் நடிகராகவும் மாறி இருக்கிறார். என்னோட ராசி என்னவென்றால், எனக்கு ஜிம் ட்ரெய்னிங் கொடுத்தவர்கள் எல்லோரும் ஹீரோவாக ஆகிவிடுகிறார்கள்.. நடிகர் ஆரி எனக்கு ட்ரெய்னிங் கொடுத்தவர் தான். இப்போ ஹீரோ ஆகிவிட்டார். அதேபோலத்தான் இவரும். நடிகராகிவிட்டார்.
‘சினிமாவில் இன்றைக்கு தயாரிப்பளர்களின் நிலைதான் கேள்விக்குறியாக இருக்கிறது. கபாலி மாதிரி படங்கள் தான் கோடிகோடியாக கொட்டுகின்றதே தவிர மற்ற தயாரிப்பாளர்கள் எல்லாம் கோடிகோடியாக இழந்துகொண்டுதான் இருக்கிறார்கள். சினிமாவை உங்களுக்கு பிடித்த இடத்தில் உங்கள் வசதிப்படி பார்ப்பது உங்கள் உரிமை. அது டிவிடியாக இருக்கட்டும்.. ஆன்லைனாக இருக்கட்டும்.. ஆனால் அது முறையாக இருக்கவேண்டும். திருட்டுத்தனமாக இருக்க கூடாது.. பலரின் உழைப்பையும் தயாரிப்பாளரின் பணத்தையும் சுரண்டும் தீமைக்கு நாம் துணைபோக கூடாது.
தமிழ்நாட்டில் 18 ஆயிரம் திருட்டு டிவிடி கடைகள் இருக்கின்றன. பர்மா பஜாரில் இருக்கிற அத்தனை கடைகளிலும் திருட்டு டிவிடி விற்கிறார்கள்.. போலீசும் அதை தாண்டித்தான் தினமும் போய்வந்துட்டு இருக்கு. நம்மிடம் சட்டங்கள் சரியாக இல்லை. மத்திய மாநில அரசுகள் இதைப்பற்றி கவலைப்படவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது.
தமிழ், தமிழன்னு நாம் சொல்றபோது அப்படியே உணர்வுகள் பொங்கி எழுது.. ஆனா அந்த தமிழன் தான் இந்த மாதிரி வேலையெல்லாம் பார்த்துக்கிட்டிருக்கான். இந்த மாதிரி திருட்டுத்தனமா படத்தை ஆன்லைனில் வெளியிடுறவங்க இலங்கை தமிழர்கள்ன்னு சொல்றாங்க. இலங்கை தமிழர்களுக்காக நாம திரையுலகமே ஒன்றுசேர்ந்து குரல் கொடுத்து போராடி இருக்கோம்.. எங்களுடைய பல விஷயங்களை இழந்துட்டு போய் அவங்களுக்காக போராடி இருக்கோம். ஆனால் அதை சார்ந்த சிலர் தான் இதை பண்றாங்கன்னு கேள்விப்படுகிறபோது, ஏண்டா இவர்களுக்காக இதை பண்ணினோம் என அருவருப்பாக இருக்கிறது” என்றார் சேரன்.
சேரனின் இந்த பேச்சே போதும் போதும் என்கிற அளவுக்கு ஃபயர் கிளப்ப, தங்கர், ஜாகுவார் பேச்செல்லாம் இங்கு எதற்கு? விடு ஜுட்!
இந்த விவகாரம் குறித்து இயக்குநர் சேரன் ஒரு அறிக்கையை அனுப்பி இருக்கிறார்….
“என்னைப்பற்றி தெரிந்தவர்களுக்கு நான் எதற்காக பேசினேன் யாரைப்பற்றி பேசியிருப்பேன் என புரிந்திருக்கும்… என்னைத்தெரியாதவர்களுக்கு நான் என்ன விளக்கம் சொல்வது…. இதுவரை திரையுலகில் இருந்து வெளிநாடுகளில் இருந்து திருட்டு DVD வருகிறது… ஆன்லைனில் பதிவேற்றம் செய்கிறார்கள் என்று கதறியபோது இந்த விமர்சகர்கள் ஏன் ஒரு வார்த்தைகூட அவர்களை அவர்களது செயல்களை கண்டித்து வெளியிடவில்லை.. அப்போ எங்களோட வாழ்க்கை பற்றி அவர்களுக்கு கவலை இல்லையா…
உலகெங்கும் நண்பர்களை கொண்டு (அவர்களும் இலங்கைத்தமிழர்கள்தான்) C2H நிறுவனக்கிளைகள் தொடங்க முயன்றபோது அவர்களை தடுத்தவர்கள், மிரட்டியவர்கள் இன்றும் திருட்டுத்தனமாக விற்பவர்கள்தான்… ஒட்டுமொத்த இலங்கைத்தமிழர்களை நான் சொல்லியிருக்கிறேன் என்பது தவறு… நல்ல குணமும் நேர்மையும் கொண்ட ஈழத்தமிழர்களுக்கும் போராளிகளுக்கும் என்னை நன்கு தெரியும்.. அவர்கள் யாரும் என்னை தவறாக நினைக்கமாட்டார்கள்…
சேரன்
இயக்குனர்
To listen this news in audio click below ;-