சீரியல் பேரென்ன, ‘சிக்கலா ’ மேம்…?
ஒரு காலத்தில் ‘சித்தி’ சீரியலுக்காக சினிமா தியேட்டரை குளோஸ் பண்ணிய நாட்கள் உண்டு. “ஒவ்வொரு நாளும் இரவில் சித்தி திரையிடப்படுவதால் அது சினிமா கலெக்ஷனுக்கு ஏழரையாகி விடுகிறது. எனவே நம்ம தியேட்டரில் நைட் ஷோ மட்டும் கட்” என்று அறிவிக்காத குறையாக மூடப்பட்ட தியேட்டர்கள் வெளியே சொல்ல முடியாமல் ஊமை அழுகை அழுததையெல்லாம் வரலாற்றிலிருந்து எந்த சுனாமியாலும் அழிக்கவே முடியாது. அப்போதிலிருந்தே ராதிகாவுக்கும் சன் டிவிக்கும் அப்படியொரு தொழில் முடிச்சு. நடுவில் கட்சிகளும் அரசியலும் வந்து அந்த முடிச்சில் கை வைக்க நினைத்த போதெல்லாம் வென்றவர் ராதிகாதான்!
சரி… அதற்கென்ன இப்போது? முன்பு கம்பெனி பணத்தில் சீரியல் எடுத்து அதை ‘சன்’னில் ஸ்லாட் வாங்கி ஒளிபரப்பியவர்களுக்கு இப்போது கொல குத்து. பண்டட் புரோகிராம் என்ற முறையில் தானே பணம் கொடுத்து சீரியல் எடுக்கச் சொல்லும் முறையை மீண்டும் துவங்கப் போகிறார்களாம் அவர்கள். முதல் பண்ட் போவதும் ராதிகாவின் ராடர்ன் டி.வி நிறுவனத்திற்குதானாம்.
எனவே சினிமாவிலிருந்து ஒரு இயக்குனரை அழைத்தால் சரியாக இருக்கும். கவுரவமாக இருக்கும் என்று நினைத்த ராதிகா, ஏற்கனவே மூன்று நான்கு படங்கள் இயக்கிய அந்த சின்னக்கண்ணனை அழைத்திருக்கிறார். சினிமாவுல குப்பை(யை) கொட்டியது போதும் என்ற பெரிய மனசோடு சின்னத்திரைக்கு தாவப் போகிறார் அவரும். இந்த இடத்தில் இவரைப் பற்றி சிறுகுறிப்பு வரைவது முக்கியம். ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் இவர் ஒரு கம்பெனிக்கு படம் பண்ணப் போனார். ஒரு கோடி பேசி படத்தை ஆரம்பித்தார்கள். பணம் கொடுத்த முதலாளி கடைசியாக படத்தை பார்த்துவிட்டு, ஏன்யா… பாதி கூட செலவு பண்ணலே. மீதி துட்டு எங்கேய்யா என்று துழாவ, அதற்கப்புறம்தான் தெரிந்ததாம். அவர் செய்த முதல் செலவே சேமிப்புதான் என்று. ஐம்பது லட்சத்தில் ஒரு பிளாட் வாங்கிப் போட்டுவிட்டாராம்.
அவரை நம்பிதான் களத்தில் இறங்கப் போகிறார் ராதிகா. பலாப்பழத்தை உரிச்சு பறங்கிக்காய் எடுக்கிற திறமை ராதிகாவுக்கு உண்டு. சுண்டைக்காயை உடைச்சு சுரைக்காய் எடுக்கிற திறமை டைரக்டருக்கு உண்டு. யாரை யார் வெல்லுவாரோ?
சீரியல் பேரென்ன, ‘சிக்கலா’ மேம்…?