ஐ பட ஆடியோ விழாவில் பில் கிளின்ட்டன், அர்னால்டு?
தமிழ்சினிமாவில் இப்போதுதான் கார்ப்பரேட் கம்பெனிகள் வந்து படம் எடுக்கிறார்கள். ஆனால் பதினைந்து வருடங்களுக்கு முன்பே கார்ப்பரேட் ஸ்டைலில் கம்பெனி நடத்தியவர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். பிரமாண்ட இயக்குனர் என்று சிலரை அழைப்பது மாதிரி, இவரை பிரமாண்ட தயாரிப்பாளர் என்பார்கள். பிரமாண்டத்தின் உச்சமாக இவர் தயாரித்த பல படங்களை வரிசை படுத்தினாலும், ‘தசாவதாரம்’ அதில் முக்கியமான படம்.
அந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு ஜாக்கிசான் சென்னை வந்திருந்தார். நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமான கூட்டத்திற்கு மத்தியில் ஜாக்கிசான் அப்படத்தின் பாடல்களை வெளியிட மல்லிகா ஷெராவத் பெற்றுக் கொண்டார். அப்படிப்பட்டவரின் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம்தான் ஐ.
மாடும் இளைச்சாச்சு, மடியும் குறைஞ்சாச்சு என்பதை போல இப்படத்தின் செலவு விஷயத்தில் அவர் தாராளம் காட்டினாலும், சம்பள பேட்டா விஷயத்தில் படு பயங்கர சறுக்கல் என்கிறார்கள். விக்ரம், ஷங்கர், எமி மட்டுமல்ல, படத்தில் பங்கு பெற்ற சாதாரண ஆட்களுக்கு கூட சம்பள பேட்டா பாக்கியாம்.
எல்லா சோகங்களையும் விரட்டியடிப்பதை போல, இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை இப்போது பிளான் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளின்ட்டனை அழைக்கிறார்களாம். அவருடன் பிரபல ஹாலிவுட் நடிகர் ஆர்னால்டும் வரப் போகிறாராம். இவர்களுடன் கமல் ஷங்கர் விக்ரம் எமி என பெரும் நட்சத்திர கூட்டம் திரளப் போகிறது. இந்த ஒரு விஷயம் போதும். முந்தைய கறைகளை முற்றிலும் அழிப்பதற்கு என்று நம்புகிறார்களாம் ஐ தயாரிப்பு தரப்பில்.
பில் கிளின்ட்டன் வர்றதுக்கு எவ்வளவு பில் கிழியுமோ?