பழைய பகையை நினைச்சுகிட்டு படத்துல விளையாடுறாங்க!
எத்தனை பழைய செய்தியாக இருந்தாலும், முக்கியமான செய்தியல்லவா? அதனால் மீண்டும் ஒருமுறை ரிப்பீட்! தமிழ்சினிமாவுலகமே ஒன்று திரண்டு சூர்யா ஜோதிகா திருமணத்தை வாழ்த்தியது. தமிழ்சினிமா காதல் ஜோடிகளில் பல பொருந்தா ஜோடிகளும் உண்டு. எதை பற்றியும் வருந்தா ஜோடிகளும் உண்டு. ஆனால் எல்லாரும் ஆசிர்வதித்த அற்புதமான ஜோடிதான் சூர்யா- ஜோதிகா. இவர்களின் திருமணத்திற்கு ஒட்டுமொத்த கோலிவுட்டும் ஆஜர். அப்படியிருந்தும் இரண்டே இரண்டு பேருக்கு மட்டும் அழைப்பிதழ் வைக்கப்படவில்லை. ஒருவர் விக்ரம். மற்றொருவர் சிம்பு. இந்த விஷயம் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் அல்ல, கரி எழுத்துக்களால் குறிக்கப்பட வேண்டிய விஷயம். இது இன்னும் எத்தனை காலமானாலும் மாறப்போவதில்லை.
போகட்டும்… அப்படியொரு ஜென்ம எதிரியாகிவிட்டார் சிம்பு சூர்யாவுக்கு. இந்த நேரத்தில் சூர்யாவின் அஞ்சான் படமும், சிம்புவின் வாலு படமும் ஒரே நாளில் அதுவும் பெஸ்டிவெல் தினமான ஆகஸ்ட் 15 ந் தேதி திரைக்கு வரப்போவதாக ஒரு தகவல் உலவி வருகிறது கோடம்பாக்கத்தில்.
சிம்பு நடித்த படம் திரைக்கு வந்து கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. ஜனங்களின் ரசனையே மாறிப் போய் கிடக்கிறது. இந்த நேரத்தில் அவர் தன்னை அப்டேட் செய்து கொண்டு வருகிறாரா? அல்லது வழக்கமான வாய் சவடால் டயலாக் பேசி வெறுப்பேற்றுகிறாரா? சிம்புவுக்கே வெளிச்சம். ஆனால் சூர்யா போன்ற பெரிய ஹீரோக்கள் படம் வருகிற நேரத்தில், பல வருடங்கள் போராடி ஒரு படத்தை தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி, இப்படியொரு ரிஸ்க் எடுப்பாரா என்பதும் தெரியவில்லை.
எது எப்படியிருந்தாலும் போடா போடி வந்தபோது, விஜய்யின் துப்பாக்கியும் திரைக்கு வந்தது. ரிசல்ட் என்ன என்பதை நாம் சொல்லவேண்டியதில்லை. இப்போது சூர்யாவின் அஞ்சான். சிம்புவின் முடிவில் இருப்பது அவரது எதிர்காலம் மட்டுமல்ல, தயாரிப்பாளரின் வருங்காலமும்!