கதற கதற அழ வைக்கும் காமெடி நடிகர்கள்

வடிவேலு ஒதுங்கினாலும் ஒதுங்கினார். ஒதுங்கி கிடந்தவர்கள் எல்லாரும் சிலுப்ப ஆரம்பித்துவிட்டார்கள். தினந்தோறும் பதினைந்து லட்சம் சம்பளம் வாங்குகிற சந்தானம், சம்பளம் கொடுக்கிற தயாரிப்பாளர்களுக்கு ஆறுதலாக எந்த ஆடியோ விழாவிலும் கலந்து கொள்வதில்லை. படத்தில் அவர் பேசும் டயலாக்குகளுக்கென்று தனியாக ஒரு டிஸ்கஷன் வைத்துக் கொள்கிறார் தன் நண்பர்களுடன். அந்த நாட்களுக்கும் சேர்த்து பில் போட ஆரம்பித்திருக்கிறாராம் இப்போது. ஆற்றாது அழுத விழிகளோடு இதை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் ஒரு குருப் தவித்துக் கொண்டிருக்க, வளர்ந்து வரும் காமெடியன்கள் என்ன செய்கிறார்கள் கேளுங்களேன்…

சமீபத்தில் வெளிவந்த சில படங்களில் சிங்கம்புலியின் (சிங்கமுத்து அல்ல) பர்பாமென்ஸ் ரசிக்கும்படியாக அமைந்து வருகிறது. சில தினங்களுக்கு முன் வந்த ‘சண்டியர் ’ படத்தில் கூட சிங்கம்புலியின் காமெடிக்கு நல்ல ரெஸ்பான்ஸ் தியேட்டர்களில். அப்படியே பெரிய காமெடியன்களுக்கு இணையாக வளர்ந்துக்க வேண்டியதுதான் என்று அவரே நினைத்தாலும் கூட அவரது சுழி வளர விடாது போலிருக்கிறது. அவரை வச்சு எப்படிய்யா சமாளிக்கிறீங்க? என்று ஒரு இயக்குனரை பார்த்து இன்னொரு இயக்குனர் கேட்கிற அளவுக்குதான் கான்டாக்ட் சர்டிபிகேட் வாங்கி வைத்திருக்கிறார் மனுஷன்.

சாய்ந்தாடு சாய்ந்தாடு என்ற வளரும் படத்திற்காக அட்வான்ஸ் வாங்கினாராம். படப்பிடிப்புக்கு அழைத்தால், ‘நீங்க கொடுத்த அட்வான்ஸ் உங்க படத்தின் காமெடி போர்ஷனை குருப்பா உட்கார்ந்து எழுதவே சரியாப்போச்சு. இனிமே நடிக்க வர்றதுக்கு நீங்க தனியா சம்பளம் பேசினாதான் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு வருவேன்’ என்றாராம். ஆளை விடுங்க என்று அட்வான்ஸ் தொகையோடு தப்பித்துவிட்டார் தயாரிப்பாளர். அதற்கப்புறம் இன்னொரு படம். அந்த படத்தின் கதைக்களமே குப்பை மேடுதான். கதை சொல்ல போகும் போதே இயக்குனரிடம், ‘முழு ஸ்கிரிப்டையும் கொடுங்க. படிச்சுட்டு நல்லாயிருந்தா நடிக்கிறேன் ’ என்றாராம். முழு ஸ்கிரிப்டையும் கொடுத்திருக்கிறார் இயக்குனர் மூர்த்தி கண்ணன்.

படித்துவிட்டு நன்றாக இருப்பதாக பாராட்டியும் விட்டார் சிங்கம்புலி. படப்பிடிப்புக்கு கிளம்புகிற நேரத்தில் ‘ஷுட்டிங் லொக்கேஷன் சொல்லுங்க’ என்றாராம். சென்னையிலிருக்கும் ஒரு மிகப்பெரிய குப்பை கிடங்கை சொல்லியிருக்கிறார் டைரக்டர். ‘அங்கேயா? நான் வரமாட்டேன். எனக்கு தொற்று நோய் வந்தா என்னாவறது? நான் என்ன சாதாரண நடிகன்னு நினைச்சீங்களா? என்னை நம்பி இருபது படம் இருக்கு’ என்றாராம். அதற்கப்புறம் ‘நீங்க குப்பை மேட்டுல ஏறி நிக்க வேணாம். பின்னாடி பேக்ரவுண்ட்ல அது இருக்கட்டும். நீங்க ஒரு 100 அடிக்கு முன்னால் நின்று பேசுங்க’ என்று கூறினார் டைரக்டர். எப்படியோ போராடி அவரை ஸ்பாட்டுக்கு கொண்டு வந்துவிட்டார்கள். பிறகு நடந்ததுதான் பேரதிர்ச்சி.

அவருக்கான டயலாக் சொல்லப்பட்டது. ‘இந்த மனுஷன் உடம்பு செத்தா நாத்தம்தான். ஆனால் அவனே எங்களை கேவலமா பார்க்குறான்’ என்றொரு டயலாக்கை அவரே தன் வாயால் பேசுகிற மாதிரி எழுதி கொடுத்திருந்தார் இயக்குனர். அதை படித்த சிங்கம்புலி ‘எனக்காகவே எழுதியிருக்கீங்கன்னு நினைக்கிறேன். வாங்க… அந்த குப்பை மலை மேல நின்றே இந்த காட்சியை எடுத்துடலாம்’ என்றாராம். இப்படி போகிறது ‘சாலையோரம்’ கதை.

மயில்சாமி எப்படி? ஆறு மணிக்கு மேல எந்த காரணத்தை கொண்டும் நான் நடிக்க மாட்டேன். அவுட்டோர்னா தண்ணி செலவு உங்களுது. வெளி மாநிலங்களில் ஷுட்டிங்னா இப்பவே என்னை விட்ருங்க. நான் இந்த படத்தில் நடிக்க மாட்டேன்’ என்பது அவரது கண்டிஷன். தம்பி ராமய்யா, எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, வையாபுரி என்று அவரவர் லெவலுக்கு ஆளுக்கொரு கண்டிஷனோடுதான் தயாரிப்பாளரை மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இறுதிகட்ட நிலவரம்…? சூரி தேவலாம்ப்பா என்கிறது கோடம்பாக்கம்! அவரையும் சந்தானமாக்காமல் இருக்குமா காலம்?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அழுகிப்போன ரஸ்தாளிக்கு சுருங்கிப்போன தக்காளியே தேவலாம்!

எலி இளைச்சுதுன்னா எரவானத்துல கூட இடம் கிடைக்காது என்று சும்மாவா சொன்னார்கள்? ஒரு காலத்தில் வெற்றிப்பட இயக்குனர் என்று கொண்டாடப்பட்ட செல்வராகவனை இப்போது எந்த தயாரிப்பாளரும் சீண்டுவதில்லை....

Close