நாலு கை மாறுனா நாங்க என்ன பண்ணுறதாம்? லிங்கா குழப்பமும், ரவிகுமார் பதிலும்!

லிங்கா லாஸ்சா? மாஸ்சா? இந்த கேள்வியை கடந்த சில நாட்களாக கிளப்பி வரும் விநியோகஸ்தர் மற்றும் தியேட்டர் வட்டாரம், ரஜினி ரசிகர்களை கடும் எரிச்சலுக்குள்ளாக்கியிருக்கிறது. பதினாலு கோடிக்கு வாங்கினோம். பத்து கோடி நஷ்டம் என்று ஏரியா வாரியாக கணக்கு சொல்லும் இவர்களால், ரஜினியின் இமேஜ் தரைமட்டமாகி வருவதாக கருத்தும் ரசிகர்கள், விநியோகஸ்தர்களின் வாயை அடைப்பது எப்படி என்று குழம்பி போயிருக்கிறார்கள்.

படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் சொல்லும் விளக்கம் மிக மிக பொருத்தமாகவே இருக்கிறது. என்ன சொல்கிறார் அவர்? ‘பொதுவா ரஜினி சார் படம்னா இவ்வளவு வியாபாரம் பண்ணலாம்னு ஒரு கணக்கு இருக்கு. ஆனால் லிங்கா விஷயத்தில் அப்படி நடக்கலை. ஒரு குறிப்பிட்ட விலைக்கு வாங்குன நிறுவனம், அதை மேலும் சில கோடிகள் லாபத்தோடு இன்னொருத்தருக்கு விற்குது. அவர் அதைவிட லாபத்தில் இன்னொருவருக்கு விற்கிறார். இப்படி நாலைந்து கை மாறிதான் தியேட்டருக்கு போகுது. அவங்கதான் எல்லா சுமையும் தாங்குறாங்க. கடைசியில் பாதிக்கப்படுறவங்க ரஜினி சார்தான் கொடுக்கணும்னு வந்து நிக்கறது சரியில்ல. அதுமட்டுமல்ல, படம் ரிலீசாகி மூணாவது நாளே நஷ்டம்னு சொல்றதை ஏத்துக்க முடியாது. இன்னும் நிறைய நாள் இருக்கு. அதற்குள் போட்ட பணம் வரலேன்னாதானே நஷ்டம்னு சொல்லணும்’ என்கிறார்.

எப்போதும் ரஜினி படத்தை விலை கொடுத்து வாங்கும் விநியோகஸ்தர்களில் பலர் இந்த முறை லிங்காவை வாங்கவில்லை என்பதும் இன்னொரு சிக்கல். உதாரணத்திற்கு கோவை ஏரியாவில் ரிலீஸ் ஆகும் ரஜினி படங்களை திருப்பூர் சுப்ரமணியம்தான் வாங்குவார். இந்த முறை அவர் வாங்கவில்லை. மாறாக ஒரு நகைக்கடை அதிபர் வாங்கியிருக்கிறார். மதுரையிலும் அப்படிதான். ஒரு புதியவர் வாங்கியிருக்கிறார். இப்படி புதியவர்கள் வியாபாரத்தில் நுழைவதால், நெளிவு சுளிவுகளும் தெரிவதில்லை என்கிறார்கள் திரையுலகத்தில்.

இது ஒருபுறமிருக்க, லிங்கா படத்தை வாங்கிய திரைப்பட விநியோகஸ்தர்கள் சனிக்கிழமை மாலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,

‘நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘லிங்கா’ திரைப்படத்தை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி வெளியிட்டுள்ளோம். ஆனால் சரியாக வசூலாகவில்லை. குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி ஏரியாவில் இத்திரைப்படத்தை ரூ.4.20 கோடி கொடுத்து வாங்கினோம். ஆனால் இதுவரை ரூ.1.50 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது. இதே நிலைமை தான் பல ஏரியாக்களில் நிலவுகிறது. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் எங்களை நெருக்குகின்றனர். இது தொடர்பாக 22-ம் தேதி ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினிகாந்தை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கவுள்ளோம். அன்றைய தினம் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் பலர் வருகின்றனர். அதனால் உரிய பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறோம்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீர விசாரித்து தீர்ப்பு தர வேண்டிய நேரம் இது!

Read previous post:
இருக்கவே இருக்கு பருத்திவீரன் சென்ட்டிமென்ட்! பொங்கலும் கார்த்தியும் விக்ரமும் அஜீத்தும்?

‘நேற்று வரை நீ யாரோ... இன்று முதல் நீ வேறோ’ ஆகிக்கிடக்கிறது கோடம்பாக்கம். வேறொன்றுமில்லை, அவ்வளவும் ஐ படத்தின் அறிவிப்பு செய்த மாயம். வரும்...ஆனா வராது ரேஞ்சிலேயே...

Close