அங்காடித்தெரு மகேஷுக்கு அடுக்கடுக்காக சோதனை!
வெற்றியே வந்து மடியில் உட்கார்ந்தாலும், வேஷ்டி அழுக்காயிருமோ என்று கவலைப்படுகிற சிலர் இருக்கதானே செய்கிறார்கள்? அப்படியொரு அசகாய சோம்பேறியாக திகழ்ந்த அங்காடித்தெரு மகேஷுக்கு அடுக்கடுக்காக சோதனை. அதிலும் இந்த சோதனையை கேட்டால், இலவம் பஞ்சே இரும்பாய் கனக்கும்!
அங்காடித்தெரு வெற்றிக்குப்பின் தன்னை தேடி வந்த ஒரு வாய்ப்பையும் சரிவர பயன்படுத்திக் கொள்ளாத மகேஷ், கதை கேட்கிற பக்குவம் கூட இல்லாமல் கண்டதிலும் நடித்து போண்டியாகிவிட்டார். அவர் நடிப்பில் உருவான சில நல்ல படங்கள் கூட வெளிவராமலே கிடக்கிறது. சில படங்கள் பாதியில் நிற்கிறது. இந்த நிலையில்தான் மகேஷ் நடித்த ‘வெயிலோடு விளையாடு’ என்ற நின்று போன படத்தை மீண்டும் தூசு தட்டக் கிளம்பினாராம் அப்படத்தின் தயாரிப்பாளர்.
ஆனால் படத்தின் இயக்குனரான ராம் குமார் என்பவர், ஜி தமிழ் தொலைக்காட்சியில் வரும் சீரியல் இயக்குனர் ஆகிவிட்டார். தினந்தோறும் ஷுட்டிங். படி, பேட்டா, சாப்பாடு, ஜுஸ் என்று செட்டில் ஆகிவிட்ட அவருக்கு, மீண்டும் வெயிலோடு விளையாட ஏது நேரம்? தன்னை நாடி வந்த தயாரிப்பாளரிடம், “எனக்கு அந்த படத்தை இயக்கிய ஞாபகமே இல்லை. யாரை வேணும்னாலும் வச்சு, எப்படி வேணும்னாலும் எடுத்துட்டு போங்க. என்னைய ஆளை விடுங்க” என்றாராம்.
பல லட்சங்களை கொட்டிவிட்டு பதறிப் போயிருக்கும் தயாரிப்பாளருக்கு ஒரு டைரக்டர் சொல்லும் பதில் இப்படியிருந்தால் என்னாகும்? கவுன்சிலில் புகார் கொடுக்க கிளம்பிவிட்டாராம். இது ஒருபுறமிருக்க… ஓய்வு நேரத்தில் உபரி ஐட்டங்களை வயிற்றில் தள்ளி, அங்கிள் போல மாறிவிட்டார் மகேஷ்.
வெயில் இப்படி சுற்றி சுற்றி சுள்ளுன்னு அடிச்சா, ஐயோ பாவம் தயாரிப்பாளர்தான் என்ன செய்வார்?
To Listen Audio Click Below:-
https://youtu.be/WfNthjMpIDk