வெங்கட்பிரபுவை நிற்க வைத்து கேள்வி கேட்ட தன்ஷிகா படவிழாவில் பரபரப்பு!
‘விழித்திரு’ என்ற படத்தை மீரா கதிரவன் இயக்கியிருக்கிறார். ஏற்கனவே ‘அவள் பெயர் தமிழரசி’ என்ற படமும் அவர் இயக்கியதுதான். முந்தைய படம் போலல்லாது இந்த படத்தை முழுவேக கமர்ஷியல் படமாக்கியிருக்கிறாராம் அவர். திரையிடப்பட்ட டி.ராஜேந்தர் பாடல் ஒன்றே அந்த கருத்துக்கு ‘ஆமாம் சாமி’ போட்டது. அப்படியொரு குத்து அது. சமீபத்தில் நடந்த இந்த பாடல் வெளியீட்டு விழாவில்தான் தன் பங்குக்கு ஒரு சண்டையை மூட்டிவிட்டு கிளம்பினார் தன்ஷிகா.
பேராண்மை, அரவான் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்த தன்ஷிகாவை இந்த விழாவுக்கு அழைத்திருந்தார்கள். மைக் தன் கைக்கு வந்ததும் அதே நிகழ்ச்சிக்கு வந்திருந்த வெங்கட்பிரபுவை பிடித்துக் கொண்டார். ‘சார்… நீங்க என் கேள்விக்கு பதில் சொல்லுங்க. நான் சுத்தமான தமிழ் பொண்ணு. நல்லா தமிழ் பேசுவேன். ஆனால் என்னை விட்டுட்டு ஏன் மும்பையிலிருந்து ஹீரோயினை வரவழைச்சு வாய்ப்பு கொடுக்கிறீங்க? ஏன்… என்னை மாதிரி ஒரு தமிழ் பொண்ணுக்கு நீங்க வாய்ப்பு கொடுக்கறதில்ல?’ என்று நேருக்கு நேராக கேட்க, ‘அவங்கள்லாம் அழகாயிருக்காங்க தாயீ…’ என்று ஒரு வார்த்தையில் முடித்துவிட்டு பிரச்சனையை கை கழுவி விட்டிருக்கலாம் அந்த வெங்கட் பிரபு.
ஸ்மார்ட்டாக பதில் சொல்வதாக நினைத்துக் கொண்டு தனக்குத்தானே வைத்துக் கொண்டார் முள்ளை. இல்லங்க. நான் கொடுக்கறதுக்கு தயாராகதான் இருக்கேன். ஆனால் தயாரிப்பாளருங்கதான் மும்பை பொண்ணு வேணும்னு கேட்கிறாங்க என்று பதில் சொல்ல, அதே மேடையிலிருந்த தயாரிப்பாளர் சங்க செயலாளரும், இதே வெங்கட்பிரபுவை வைத்து சரோஜா படத்தை தயாரித்தவருமான டி.சிவா கடும் கோபத்துக்கு ஆளாகிவிட்டார். உடனே எழுந்து வந்து பதிலடி கொடுத்துவிட்டார்.
இங்கு மேடையில் இருக்கும் அருண்பாண்டியன் தயாரிச்ச பேராண்மை படத்துலதான் தன்ஷிகா ஹீரோயினா நடிச்சார். நான் தயாரிச்ச அரவான் படத்துல தன்ஷிகாதான் ஹீரோயின். நாங்க தமிழர்கள். தமிழச்சிக்கு வாய்ப்பு கொடுத்தோம். அது புரியாமல் பேசக் கூடாது என்றார் வெங்கட்பிரபுவை பார்த்து. நல்லவேளை… நடுவில் புகுந்த தன்ஷிகா, என்னால உங்களுக்குள்ள சண்டை வேணாம். பிரச்சனையை விடுங்க என்றார்.
பிரச்சனை அதோடு முடிஞ்சுருமா? அல்லது வேறொரு மேடையில் வெடிக்குமா? ஆல் பிரஸ் ஆர் வெயிட்டிங்….