போங்கய்யா நீங்களும் உங்க தொழில் பக்தியும்!
ஒரு ரோஜாவுக்காக தொட்டியையும் சேர்த்து வாங்கும் அவலத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார் தனுஷ். இப்படி தனுஷ் செய்வதெல்லாம் ஒரு ‘தினுஷ்’ஷாகவே இருக்கிறதே, என்னப்பா மேட்டர் என்றால், எல்லாம் பேஷன்ப்பா பேஷன் என்கிறது ஊர். சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாணா’ படத்தின் தயாரிப்பாளர் தனுஷ்தான். இவருக்கும் அவருக்கும் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்கிற அளவுக்கு ஈகோ முட்டிக் கொண்டு நிற்பதாக ஊர் உலகம் கூறினாலும், டாணாவுக்காக செலவு பண்ணுகிற விஷயத்தில் சற்றும் மனம் தளரவில்லை தனுஷ். அதில் ஒன்றுதான் இந்த ரோஜா… பூந்தொட்டி… எக்ஸ்ட்ரா… எக்ஸ்ட்ரா!
என்னவாம்? டாணா என்கிற பெயர் என்னவோ போலிருக்கிறது. ஆங்கிலேயேர் காலத்தில்தான் போலீஸ்காரர்களை டாணாக்காரன் என்று அழைக்கிற வழக்கம் இருந்தது. இப்போது போய் படத்திற்கு டாணா என்று பெயர் வைத்தால், அது போலீஸ்காரர்களை இழிவு படுத்துவது போலாகும். அதனால் பெயரை மாற்றிவிடலாம் என்றார்களாம் அவரது நண்பர்கள். அவருக்கும் சரி என்றுதான் தோன்றியது. பொருத்தமான தலைப்பாக வைக்க வேண்டும் என்றால் ‘காக்கி சட்டை’ என்ற பெயர்தான் சரியாக இருந்தது. அது கமல் நடித்து சத்யா மூவிஸ் தயாரித்த படம். நேரடியாக கமலை தொடர்பு கொண்டாராம் தனுஷ். எனக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்ல. ஆனால் நீங்க சத்யா மூவிஸ்ட்ட பர்மிஷன் வாங்கணும் என்று கூறிவிட்டாராம் கமல்.
அங்கும் பேசினார் தனுஷ். எடுத்த எடுப்பிலேயே ஒன்றரை கோடியில் ஆரம்பித்தார்களாம் அங்கே. சர்வநாடியும் கலகலத்துப்போனது தனுஷுக்கு. இருந்தாலும், கதைக்கு பொருத்தமான தலைப்பாச்சே? விட்டுவிடுகிற எண்ணம் இல்லை அவருக்கு. தொடர்ந்து பேசியதில் அவர்கள் சொன்னதுதான் தொட்டியோடு ரோஜா திட்டம். வெறும் தலைப்பை மட்டும் உங்களுக்கு விட்டுக் கொடுக்க முடியாது. வேணும்னா இந்த படத்தின் ரீ மேக் ரைட்ஸை நீங்க வாங்கிக்குங்க. அதுக்கு இந்த தொகைன்னா சரியா இருக்கும். கேட்கிறவங்களுக்கும் சரி, பணத்தை கொடுக்கிற உங்களுக்கும் சரி, உறுத்தலா தெரியாது என்றார்களாம்.
அப்புறம் பேசி பேசி பேசி… கடைசியில் ஐம்பது லட்சம் கொடுத்து தலைப்பையும் ரீமேக் ரைட்ஸையும் வாங்கியிருக்கிறார் தனுஷ்.
ஒரு முக்கியமான கேள்வி- தனுஷ் தயாரித்து சிவகார்த்தியேன் நடிக்கிறார்னா அந்த படத்திற்கு கூவம்னு பேர் வச்சாலும் கூட்டம் பிய்ச்சுக்கும். இதுக்கு போயி இம்புட்டு செலவு பண்ணிட்டு தயாரிப்பு செலவு ஏறிடுச்சு ஏறிடுச்சுன்னு பொலம்புனா, ஏறாம என்னய்யா பண்ணும்? போங்கய்யா நீங்களும் உங்க தொழில் பக்தியும்!