சேனல்களிடம் மண்டியிடாத தனுஷ்! ரசிகர்களுக்கு ஜாலியோ ஜாலி.
ரஜினி ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான தகவல். மே 9 ந் தேதி காலா படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெறப் போகிறது. சென்னை YMCA மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த பாடல் வெளியீட்டு விழாவில் ஒரு விசேஷம். நிகழ்ச்சியை நேரடியாக லைவ் செய்யப் போகிறார்கள். ஆனால் சேனல்களில் அல்ல.
பொதுவாக இதுபோன்ற சினிமா நிகழ்ச்சிகளை, அந்த ஏரியாவின் மூலை முடுக்கெல்லாம் கேமிராவை போட்டு சுட்டுத்தள்ளுகிற சேனல்கள், கொழுத்த பண்டிகை நாட்களிலோ, அல்லது குடும்பத்தோடு கூத்தடிக்கிற ஞாயிற்றுக் கிழமைகளிலோ வெளியிடுவார்கள். அந்த நல்ல நாள் எப்படா வரும் என்று நாடே காத்திருக்க வேண்டும். ஆனால் இந்த முறை அப்படியல்ல.
வுண்டர்பார் ஸ்டுடியோஸ் நிறுவனமும் அதன் டிஜிட்டல் பங்குதாரரான டிவோ (DIVO) நிறுவனமும் இணைந்து காலா படத்தின் பாடல்களையும், இசைநிகழ்ச்சியினையும் நேரடியாக இணையதளங்களில் வெளியிட இருக்கிறார்கள். நேரலையாக டுவிட்டர், பேஸ்புக், யூடியூபில் ஒளிபரப்பப்பட உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, ஒரே நேரத்தில் பல்லாயிரம் பேர் கூடுகிற அளவுக்கு வசதியுள்ள YMCA மைதானத்தில் இந்த விழா நடைபெறுவதும் இன்னொரு சிறப்பு. தமிழகம் முழுவதும் இருக்கிற ரஜினி ரசிகர்கள், கூட்டம் கூட்டமாக வருவார்கள் என்பது நிச்சயம்.
அங்கு ரஜினி பேசப் போகும் பேச்சு, அடுத்த ஒரு மாதத்திற்கு தாங்கும்! ரசிகர்களுக்கு மட்டுமல்ல, அவரை எப்போதும் எதிர்க்கிற எதிர்ப்பாளர்களுக்கும்!