அழுகிப்போன ரஸ்தாளிக்கு சுருங்கிப்போன தக்காளியே தேவலாம்!
எலி இளைச்சுதுன்னா எரவானத்துல கூட இடம் கிடைக்காது என்று சும்மாவா சொன்னார்கள்? ஒரு காலத்தில் வெற்றிப்பட இயக்குனர் என்று கொண்டாடப்பட்ட செல்வராகவனை இப்போது எந்த தயாரிப்பாளரும் சீண்டுவதில்லை. ஐம்பது கோடி, அறுபது கோடி என்று செலவை இழுத்துவிடும் அவர், மனம் போன போக்கில் படம் எடுப்பதால், போட்ட பணம் போன போக்கு தெரியாமல் திரிகிறார்கள் அத்தனை தயாரிப்பாளர்களும்.
இந்த நேரத்தில்தான் அவரது தம்பி தனுஷ் இயக்கி(?) நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ தாறுமாறான ஹிட். ‘தம்பி எனக்கு கால்ஷீட் கொடுறா’ என்றாராம் செல்வா. ஏகப்பட்ட யோசனைக்கு பின் ஒப்புக் கொண்ட தனுஷ், ‘படத்தை என்னோட வொண்டர்பார் நிறுவனம்தான் தயாரிக்கும். நாலு கோடி ரூபாய்க்குள்ள படத்தை முடிச்சுரணும். என்னோட எட்டு கோடி ரூபா சம்பளத்தை ரிலீசுக்கு முன்னாடி நான் எடுத்துப்பேன். அதற்கப்புறம் வர்ற லாபத்தில்தான் உனக்கு சம்பளம். அதுவும் பத்து பர்சென்ட். ஓ.கே வா’ என்றாராம்.
அழுகிப்போன ரஸ்தாளிக்கு சுருங்கிப்போன தக்காளியே தேவலாம் என்பதால் செல்வராகவனின் இப்போதைய பதில்… சரி!