கட்டி உருளும் ஜாம்பவான்கள்! கருத்து சொல்ல விரும்பாத இயக்குனர் சங்கம்
“ரத்தம் வத்துன நேரத்துல குத்துச்சண்டை தேவையா?” என்று திருவாளர் பொதுஜனம் கேள்வி கேட்கிற அளவுக்கு போயிருக்கிறது இரண்டு இயக்குனர்களுக்கு இடையிலான சண்டை. ‘அன்னக் கொடியும் கொடி வீரனும்’ என்ற மொக்கை படத்தை நாட்டுக்கு அர்ப்பணித்ததன் மூலம், தன் முந்தைய பெருமைக்கெல்லாம் சங்கு ஊதிக் கொண்டவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. ‘தாரை தப்பட்டை’ என்ற படத்தின் மூலம், தான் பெற்ற முந்தைய வெற்றிப்பதக்கங்களை ஈயம் பித்தளைக்கு போட்டுவிட்டு ஈயென்று சிரித்துக் கொண்டிருப்பவர் இயக்குனர் பாலா. இவ்விருவரும் இப்போது ‘குற்றப்பரம்பரை’ என்ற ஒரு கதைக்காக மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆங்கிலேயர்கள் தமிழகத்தை ஆண்டபோது, தமிழகத்தின் ஒரு பகுதியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த 12 வயதை தாண்டிய இளைஞர்கள் மாலை ஆறு மணிக்கு காவல் நிலையத்தில் வைத்து கை ரேகை வைக்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வந்தது. இதை எதிர்த்து பேராடிய பல பெண்களை கூட ஆங்கிலேயர்கள் சுட்டுத் தள்ளினார்கள். 1965 வரை நீடித்த இந்த சட்டம் ஒழிக்கப்பட்டு விட்டாலும், அந்த சம்பவங்களின் அடிப்படையில் ‘குற்றப்பரம்பரை’ என்ற படத்தை எடுக்க ஆர்வமானார் பாரதிராஜா. இதில் சிவாஜிகணேசனும் நடிக்க தயாராக இருந்தார். ஆனால் வெவ்வேறு காரணங்களால் அந்த படம் தள்ளிக் கொண்டே போனது.
இதற்கிடையில் எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை கதையை படமாக்க முன் வந்தார் இயக்குனர் பாலா. இந்த படத்தை லைக்கா நிறுவனம் 50 கோடியில் தயாரிக்கவும் முன் வந்திருக்கிறது. விஷால், ஆர்யா உள்ளிட்ட மேலும் சில முன்னணி நடிகர்கள் இதில் நடிக்க தயாராகி வரும் இந்த சூழ்நிலையில், இந்த படத்தை பாலா எடுக்கக் கூடாது. பாரதிராஜாதான் எடுக்க வேண்டும். அப்படி மீறி எடுத்தால் வழக்கு போடுவேன் என்று கூறியிருக்கிறார் பாரதிராஜாவின் குற்றப்பரம்பரை பட வசனகர்த்தா ரத்னகுமார்.
இன்று தேனி மாவட்டத்தில் இந்த குற்றப்பரம்பரை படத்திற்கு பிரமாண்டமாக துவக்க விழாவும் நடத்திவிட்டார் பாரதிராஜா. இந்த பூஜையில் இயக்குனர்கள் லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், சுசிந்திரன், பாண்டிய ராஜன், பொன்ராம், எழில், SS ஸ்டான்லி, சரவண சுப்பையா, மகிழ் திருமேனி, ஒளிப்பதிவாளர் கண்ணன், பாடலாசிரியர்கள் நா.முத்துகுமார், கபிலன் வைரமுத்து உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொள்வதாக பாரதிராஜா தரப்பில் அறிவித்திருக்கிறார்கள். ஆனால் நிஜத்தில் இவர்களில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் சென்னையில்தான் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் “இப்படி பிரபல இயக்குனர்கள் இருவர் ஒரு கதைக்காக சண்டை போட்டுக் கொள்கிறார்களே, இயக்குனர் சங்கம் தலையிட்டு இந்த பிரச்சனையை தீர்த்து வைக்குமா? குற்றப்பரம்பரை பட விஷயத்தில் இயக்குனர் சங்கத்தின் நிலைப்பாடு என்ன?” என்று சங்கத் தலைவர் டைரக்டர் விக்ரமனிடம் கேட்டோம்.
“இப்போது இது பற்றி கருத்து எதுவும் சொல்ல முடியாது. ரத்னகுமார் இயக்குனர் சங்கத்தில் ஒரு புகார் கொடுத்திருக்கிறார். அது சம்பந்தமாக இருவரையும் அழைத்து விசாரிப்பதாக இருக்கிறோம். இன்று தேனியில் நடப்பது குற்றப்பரம்பரை படத்தின் துவக்க விழாதானே தவிர படப்பிடிப்பு அல்ல. இருவரையும் அழைத்து பேசி என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பதை பத்திரிகையாளர்களுக்கு முறைப்படி தெரிவிப்போம்” என்றார் அவர்.
ஆக மொத்தம் இந்தக் கதையை யார் படம் எடுத்தாலும், அல்லது இருவருமே தனித்தனியாக படம் எடுத்தாலும் அதில் நடிக்கக் கிளம்பும் நடிகர் நடிகைகளுக்கு பாதுகாப்பு இருக்குமா? என்பதுதான் பலரையும் அச்சுறுத்தும் இன்னொரு முக்கியமான கேள்வி!