அது சென்சார் இல்ல, சென்ஸ்லெஸ்! பொங்கும் புதுப்பட இயக்குனர்

‘சாய்ந்தாடு’ என்று தன் படத்திற்கு எந்நேரத்தில் தலைப்பு வைத்தாரோ தெரியவில்லை. அவரை சாய வைத்தும் வேக வைத்தும் அனுப்பியிருக்கிறது சென்சார் அமைப்பு. சொல்லொணா அவமானத்திற்கு ஆளாகிவிட்டதாக கண்ணீர் வடிக்கும் அந்த அவரின் பெயர் கஸாலி! அறிமுக இயக்குனர். முன்னாள் பத்திரிகையாளர். சமூக ஆர்வலர். இன்னும் எக்ஸெட்ரா எக்ஸெட்ரா என்று எடுத்துச் சொல்ல பல்வேறு புரபைல்களை உள்ளடக்கியவர். அவரைதான் உள்ளங்கைக்குள் வைத்து ஒரேயடியாக உடைசலாக்கிவிட்டது சென்னை மண்டல சென்சார் அமைப்பு.

என்ன நடந்தது?

‘ஆறு மணியிருக்கும். நான் போனனோ’ என்று வெள்ளைக்காரன் பட ரோபோ சங்கர் மாதிரி வருகிற போகிற பிரஸ்காரர்களிடமெல்லாம் விவரிக்க ஆரம்பிக்கிறார் கஸாலி. அதை அப்படியே எழுதினால் கடல் அரிப்பை விஞ்சிய பெரும் அரிப்பாக இருக்கும் என்பதால் சுருக்கமாக இங்கே-

மருத்துவ உலகத்தின் மர்ம இருட்டை சொல்லும் விதத்தில் ஒரு புரட்சிப்படத்தை இயக்கியிருக்கிறார் கஸாலி. படத்தின் பெயர் ‘சாய்தாடு’. இதற்கான சென்சார் அனுமதிக் காட்சி பல்வேறு இழுபறிகளுக்கு பிறகு ஒரு நாள் நடந்திருக்கிறது. படம் பார்க்க நேரம் சொல்லிவிட்டு சொன்ன நேரத்திற்கு வராமல் ஐந்து நாள் அலையவிட்டார்களாம். அது தனிக்கதை. படம் முடிந்து கேள்வி நேரம். “இந்த படத்தை குழந்தைகளும் பார்க்கலாம்னு எதை வச்சு சொல்றீங்க?” என்றாராம் தணிக்கை மண்டலத்தின் சென்னை அதிகாரி மதியழகன். “குழந்தைகள் பார்க்கக் கூடாதுன்னு நீங்க எதை வச்சு சொல்றீங்க?” என்று இவர் பதிலளிக்க, அங்கேயே ஆரம்பித்துவிட்டது ஆணவக்கொலை.

அதற்கப்புறம் “உங்க படத்திற்கு ஏ தான் தருவோம்” என்று கூறிய மதியழகன், படத்தின் ஜீவன், உயிர், பிராணன், ஆக்சிஜன் என்று கஸாலி நம்பிக் கொண்டிருந்த சுமார் பத்து காட்சிகளுக்கு கத்தரி போட்டு, தஞ்சாவூரை தவூராக்கி, திருச்சி திசி ஆக்கிவிட்டார். பேரதிர்ச்சிக்குள்ளான கஸாலி இந்த காட்சிகளை கட் பண்ணினால் படமே பாழா போகும் என்றெல்லாம் எடுத்துச் சொல்லியும் கேட்காமல், “இவ்வளவும் செஞ்சா ஏ தர்றோம். இல்லேன்னா படத்திற்கு சர்டிபிகேட் தருவது பற்றியே யோசிக்கணும்” என்று சொல்ல, அடகு வச்ச வீடு, சேட்டு வீட்டில் குறட்டை விடும் நகை நட்டு, அங்கே இங்கே வாங்கின கைமாத்து, எல்லாம் மனக்கண்ணில் வந்து போக, மறு தணிக்கைக்கு போக முடிவெடுத்தாராம் கஸாலி.

“இதெல்லாம் இருக்கட்டும்… ஒரு படத்தை ஆயிரம் சந்தர்ப்பங்கள் பார்த்துதான் ரிலீஸ் செய்ய வேண்டியிருக்கு. இவர்களிடம் படம் பார்க்க கெஞ்சி கூத்தாடி ஆபிசர்ஸ் படம் பார்க்க வரவே பல வாரங்கள் இழுத்தடித்து எப்படியோ படம் பார்த்து தொலைத்தால், ஏன்யா வந்தாங்க என்பது போலாகிவிட்டது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று கட் கொடுத்தால் சிறிய படத் தயாரிப்பாளர்களின் நிலைமை என்னாவது?” என்கிறார் கஸாலி. “சென்சார் கொடுத்த டார்ச்சராலும், நேர விரயத்தாலும் ரிலீஸ் நேரத்தையெல்லாம் தவற விட்டுவிட்டு பெருத்த நஷ்டத்திற்கு ஆளாகி நிற்கிறேன்” என்று அவர் சொல்வதை கவலையோடு கேட்கதான் வேண்டியிருக்கிறது.

“ரிவைசிங் கமிட்டியில் இருந்த கங்கை அமரன் அடிப்படையில் ஒரு படைப்பாளி என்பதாலும், இதே சினிமாவில் ஒரு அங்கமாக இருப்பதாலும் தயாரிப்பாளர்களின் கஷ்டம் உணர்ந்து நடந்து கொண்டதுதான் கொஞ்சம் ஆறுதல். அவ்வளவு கட் கொடுத்து ஏ கொடுத்தாரல்லவா மதியழகன்? இங்கே கங்கை அமரன் சில கட்டுகள் மட்டுமே கொடுத்து யு/ஏ கொடுத்திருக்கிறார். ஒரே சட்டதிட்டங்களை கொண்ட தணிக்கை குழுவில்தான் எத்தனை எத்தனை வேறுபாடுகள்” என்று மனம் வெம்புகிறார் கஸாலி.

மெடிக்கல் அட்ராசிடி பற்றி படம் எடுத்துவிட்டு அதற்கு, சென்சார் சர்டிபிகேட் வாங்குவதற்குள் நாக்கு தள்ளி, பேச்சு முட்டி ஆயிரம் மன உளைச்சலுக்கு ஆளான பிறகும் நம்பிக்கையோடு இருக்கிறாரே… அதுதான் மெடிக்கல் மிராக்கிள்!

கஸாலிக்கு ஒரு காளி சோடா உடைங்கப்பா! எதுக்கும் சென்சார் ஆபிஸ் இருக்கிற இடத்துக்கு எதிர் கடையில வாங்குங்க. அப்பதான் சுர்ருன்னு இருக்கும்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தனுஷ் ஏரியாவில் ஜி.வி.பிரகாஷூக்கு நோ என்ட்ரி?

கம்போசிங் தியேட்டரிலிருக்கும் மியூசிக் கீ போர்ட் சைசுக்கு தன் வாயையும் திறந்து வைத்திருக்கிறார் ஜி.விபிரகாஷ். அதன் விளைவுகள் அவ்வப்போது பல்லை காட்டிக் கொண்டிருக்கிறது அவர் வாழ்வில். முதல்...

Close