அவசர சிகிச்சை பிரிவில் இயக்குனர் ஜனநாதன்
கலை என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது சேவை என்பதை உணர்ந்து படமெடுக்கிற இயக்குனர்களில் முக்கியமானவர் ஜனநாதன். இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு போன்ற படங்களில் மட்டுமல்ல, தற்போது அவர் இயக்கி வரும் லாபம் படமும் சமூகத்திற்கு தேவையான ஒரு முக்கிய கருத்தை உள்ளடக்கியதுதான்.
படப்பிடிப்பு முடிந்து ‘லாபம்‘ படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக அல்லும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கிறார் ஜனநாதன். இந்த நிலையில்தான் அந்த துயரம். வீட்டில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தவரை பல மணி நேரங்கள் கழித்தே அறிந்த உதவி இயக்குனர் ஒருவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜனநாதனுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு மூளை சாவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஜனநாதனின் உடல்நிலை குறித்த இந்த தகவல் திரையுலகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எப்படியாவது அவர் உயிர் பிழைத்து வருவதுதான் திரையுலகத்திற்கும் இந்த சமூகத்திற்கும் – லாபம்.
இந்த படத்தை பொறுத்தவரை தயாரிப்பாளர் விஜய்சேதுபதி மட்டுமல்ல, மற்றொரு தயாரிப்பாளராக ஜனநாதனின் பங்கும் இருந்தது. ஒரு புறம் பொருளாதார ரீதியான டென்ஷன். இன்னொரு புறம் படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வர வேண்டும் என்கிற டென்ஷன். இரண்டும் கொடுத்த அழுத்தம்தான் அவரது இந்த நிலைக்கு காரணம் என்கிறார்கள் இன்டஸ்ட்ரியில்.