நண்பர்களுக்காக ஸ்டோரி கடை ஓப்பன்… சரக்கு புகழ் ராஜேஷ் பரபர!
கடவுள் இருக்காண்டா கொமாரு! சரக்கு புகழ் ராஜேஷின் அடுத்த படம் இது. (இதையும் சுருக்குனீங்கன்னா கிக்குன்னு வரும்) எஸ்.எம்.எஸ் படத்தில் இவர் திறந்து வைத்த டாஸ்மாக் உளறல், ஜாலியாக இருந்தாலும் கேலியாக இருந்தாலும் சமுதாயத்துக்கு வேலியா இல்லாம போச்சே என்று சிலர் இன்னமும் மாய்ந்து மாய்ந்து மல்லுக்கட்டி வருகிறார்கள். அதற்கப்புறமும் இவர் டாஸ்மாக்கை விட்டபாடில்லை.
“காமெடி வொர்க் அவுட் ஆகுற இடம் என்பதால்தான் அதை விடாம புடிச்சுட்டு இருக்கேன்” என்று தன் விளக்கத்தையும் கூறிவிட்டார். ஆனால் இவர் படத்தில்தான் இப்படி. மற்றவர்களுக்கும் இவர் கதை எழுதித் தருகிறாரல்லவா? அதில் வேற மாதிரி. சிவகார்த்திகேயன் பம்பர் ஹிட்டடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, சரக்கு புகழ் ராஜேஷின் கதைதான். பொன்ராம் இவரது நெருங்கிய நண்பர். அதற்காக எழுதிக் கொடுத்த கதைதான் அது. இப்படி தன் உதவியாளர்களுக்கும் நண்பர்களுக்கும் இப்போதும் கதை எழுதி தருகிறார் ராஜேஷ். சென்ட்டிமென்ட்டாகவே அது ஹிட்டடித்து வருவதால், அதற்கு மார்க்கெட் வேல்யூவும் அதிகமாகிக் கொண்டே வருகிறது.
இந்த நிலையில் அவரது இன்னொரு நண்பருக்காகவும் கதை எழுத ஆரம்பித்துவிட்டாராம் ராஜேஷ். அவர் குரு ரமேஷ். சுரேஷ் கிருஷ்ணாவிடம் பல படங்களில் உதவியாளராக இருந்த குருரமேஷும் ராஜேஷும் நல்ல நண்பர்கள். அதன் விளைவாக அவருக்கும் ஒரு கதை எழுதித் தருவதாக உத்தரவாதம் அளித்த ராஜேஷ், அந்த வேலையையும் ஒருபுறம் பார்த்து வருகிறாராம். இப்பவே இந்த காம்பினேஷுக்கு தயாரிப்பாளர் ரெடி என்கிறது கோலிவுட் பட்சி.
கடவுள் இருக்காண்டா கொமாரு!