இனி ஒரு பிரிவில்லை துயர் வர வழி இல்லை! -இயக்குனர் தாமிரா

எந்தச் சொல்லில் இருந்து துவங்குவது என்று தெரியவில்லை..நாம் சொற்களால் அரவணைத்து சொற்களில் வாழ்ந்தவர்கள்.எனது ஒரு சிறுகதையைப் படித்துவிட்டு என்னை சந்திக்க வேண்டும் என அழைத்தீர்கள்.அது நமது அன்பின் தொடர்கதை ஆயிற்று.பதினான்கு ஆண்டு காலம்.விலகிச் செல்லாத ஒரு நதியின் நீராய் உங்களோடு பயணிக்கிறேன்.

நாம் இருவருமே நதியின் காதலர்கள்..பழைய வீட்டில் உங்கள் அலுவலகத்தின் பெயர் காவேரி.எனதுபெயர் தாமிரா..இருவருமே நதியின்காதலர்கள்.காவேரியில்தான் உங்களை முதன் முதலாகச் சந்தித்தேன்.இரண்டு தினங்களுக்கு முன் உங்களைச் சந்திக்க காவேரி மருத்துவமனை க்கு வருகிறேன். கண்ணில் ஒரு நதி கரை புரள்கிறது.

”அப்பா தாமிராப்பா…. தாமிரா வந்திருக்கறாருப்பா..”சகோதரி புஷ்பா உங்கள் காதுக்குள் சொல் கிறார்..ஏறிட்டுப்பார்க்கிறீர்கள்…உங்கள்பார்வை ஏதோ சொல்கிறது.என்னைத் தெரிகிறது என்பது போல ஒரு தலையசைப்பு…மோகன் கைபேசியில் சிந்து பைரவி பாடலை ஒலிக்க விடுகிறார்.. நான் உங்கள் கரங்களைக் கோர்த்துக் கொள்கிறேன்.

என்னை கைபிடித்து உயர்த்திய கைகள் ….என் சொற்களையெல்லாம் காட்சியாக்கிய கைகள்… என்னை இந்தத் திரைத்துறைக்கு அழைத்துச் சென்ற கைகள்,..எல்லோருக்கும் கம்பீரமாக இவன் என் தோழன் என, என்னைஅறிமுகம் செய்த கைகள்..உங்கள் விரல்களோடு எனது கைகளை அழுத்தமாகக் கோர்த்துக் கொள்கிறேன்.

கலைவாணியே பாடல் காற்றில் மிதந்தபடி இருக்கிறது.ஏதேதோ சொல்கிறீர்கள்.ஒரு பேப்பர் மிஸ்ஸாயிருச்சு என்கிறீர்கள். இன்னும் ஒரு ஷாட் எடுக்க வேண்டும் என்கிறீர்கள்.ஒரு காட்சியை மனதிற்கு பிடித்த விதத்தில் எடுத்துவிட்டால் உள்ளுக்குள் ஒரு புன்னகை வருமே அது போல ஒரு புன்னகையோடு சகோதரி புஷ்பாவைப் பார்க்கிறீர்கள்.

உடலெங்கும் ஒரு சிலந்தி வலையாய் மருத்துவ உபகரணங்கள்..உங்கள் சுவாசத்தை,உதிரக் கொதிநிலையை அளவிட்டுச் சொல்லிய வண்ணம் இருக்கின்றன.நீங்கள் எதையும் பொருட்படுத்தாமல்,உள்ளுக்குள் ஒரு திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.தனது கைபேசியை உங்கள் செவிக்கருகில் வைத்திருக்கிறார் மோகன்.

உள்ளம் அழுதது உன்னைத் தொழுதது உனது நிழலில் இவன் பாதி என பாடல் ஒலிக்கிறது. மெல்ல,உங்கள் தலை தாளத்திற்கேற்ப அசைகிறது.இனி ஒரு பிரிவில்லை துயர் வர வழி இல்லை வருமோ?என பாடல் முடியும் தருவாயில் கிளிப் மாட்டப்பட்ட உங்கள் வலதுகை மெல்ல எழுந்து மார்பளவிற்கு உயர்கிறது..சிந்துபைரவியில் சிலாகித்து மகிழும் சுஹாசினியின் பாவனையை திரும்பச் செய்தது போலிருக்கிறது.

அய்யனே…!அந்த நெகிழ்வின் கணங்களை நாங்கள் அழுது சமன் செய்தோம்.

சற்றே வீங்கியிருந்த உங்கள் கால்களை புஷ்பா நீவி விட்டபோது அமைதியாக இருந்த நீங்கள் அதே காரியத்தை மோகன் செய்ய எத்தனித்த போது கால்களை இழுத்துக் கொண்டீர்கள்.உங்கள் குரல் கோபமாக மோகனை அந்தக் காரியத்தை செய்யவிடாமல் தடுத்தது.யாரையும் தகுதி குறைவாக அவமானப்படுத்தி விடாத உங்கள் மனது அப்போதும் விழித்திருந்தது.

தசைப்பயிற்சிக்காக நீண்டநேரம் இருக்கையில் அமர்ந்திருந்த உங்களை எழுப்பி கட்டிலுக்கு மாற்றி,படுக்க வைக்கிறார்கள்.உங்களருகில் நின்றபடி உங்களையே பார்த்துக் கொண்டிருக்கிறேன். பதினான்கு ஆண்டுகாலம் மனதிற்குள் கரை புரள்கிறது.

• ”நதிகள் பின்னோக்கிநடக்காது”என சஹானா சீரியலுக்கு ஒருவரி எழுதிக் கொடுக்கிறேன். பிரமாதம்யா பிரமாதம் என்கிறீர்கள்.மறுநாள் பிரகாஷ் ராஜ் அந்த வார்த்தைகளைப் பேசி நடிக்கிறார்.அவர் கண்கள் கலங்குகிறது.ஒரு இழப்பை மறக்கத் தவித்த தருணத்தில் அவர் அதைப் பேசுகிறார்.ஷாட் ஓக்கே என்றதும் பிரகாஷ் ’”எனக்கு எழுதின மாதிரியே இருக்கு சார்”” என உங்கள் கையைப் பிடித்து நன்றி சொல்கிறார்.நீங்கள் என் கையைப் பிடித்திருந்தீர்கள்.நாம் அவர் கண்ணீர் கரையும் வரை காத்திருந்தோம்.அப்போது நம் மூவருக்குமிடையே ஒரு மௌனச் சொல் இருந்தது.

• நான் கர்வம் கொண்டபோதெல்லாம் என் உயரத்தை ஒரு படி உயர்த்தினீர்கள்.நான் திமிர் கொண்டபோது என் தோளுக்கு வலிக்காமல், உங்கள் கரங்களால் என்னை தரை இறக்கினீர் கள்.வாழ்வில் துயரம் கவிழ்ந்த போதெல்லாம் இளைப்பாறியது உங்கள் நிழல் மாளிகையில் தான்.

• நான் உங்களை விட்டுவிலகும் சூழல் வந்தபோதெல்லாம் என்னை ஒரு அரணாகக் காத்தீர்கள்.இனி சீரியல் எழுதப் போவதில்லை என்ற போது. வீட்டுச் செலவு எவ்வளவுய்யா வரும் என்று கேட்டு மாசாமாசம் புஷ்பாகிட்ட பணம் குடுக்கச் சொல்றேன்..வீட்டுக் கவலை இல்லாம சினிமாவுக்கு ட்ரை பண்ணு என்றீர்கள்.

• பழைய வீட்டை புணரமைப்பு செய்ய கட்டிட நிறுவனத்திற்குக் கொடுத்த போது நீங்கள் கட்டிடத்தை எப்படி வேண்டுமானாலும் கட்டுங்கள். அந்த நாகலிங்க மரத்தை மட்டும் வெட்டிவிடக்கூடாது என ஒரு மரத்தின் உயிர் காத்தீர்களே..அந்த மரம் இன்னமும் உங்களுக் காக..பூத்தபடி இருக்கிறது.

பழைய வீட்டை இடிப்பதற்கு முன் தினம் நாம் அந்த வீட்டைப் பார்த்த போது இதை ஒரு சிறுகதையா எழுதி குடுங்க சாமி என நீங்கள் எழுதச் சொன்ன கதை எனக்குள் காத்திருக்கிறது.. இப்படி நெஞ்சுருகிச் சொல்ல நிறைய இருக்கிறது.

நான் உங்களைப் பார்த்தபடியே இருக்கிறேன்.

• எத்தனையோவருடப்பிறப்புகள்,நம்மைக்கடந்துசென்றிருக்கின்றன.எத்தனையோ பொங்கல், தீபாவளிகள்,விசேச தினங்கள் எல்லோரும் உங்கள் காலில் விழுந்து ஆசி பெறுவார்கள்.நான் மட்டும் கை குலுக்கியபடி வாழ்த்துச் சொல்வேன்.காலில் விழுவது எனக்கு மரபு ரீதியான பழக்கம் இல்லை எனச் சொன்ன போது அதெல்லாம் ஒன்னுமில்லையா எனக்கு நீ இப்படி இருக்கறது தான் பிடித்திருக்கிறது என்று சொன்னீர்கள்.

நான் உங்களைப் பார்த்தபடியே இருக்கிறேன்.. நீங்கள் உறங்கிக் கொண்டிருக்கிறீர்கள். பதினான்கு ஆண்டுகள் தொடாத பாதத்தை தொட்டு வருடிக் கொடுக்கிறேன்..

வேறென்ன சொல்ல

உயிரோடு இருக்கும் ஒரு கண்ணீர் துளியைப் போல இருக்கிறேன்.
அய்யனே எழுந்து வா….!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அதாண்டா சினிமா! ஹன்சிகாவுக்கு பாடம் புகட்டிய சிவகார்த்திகேயன்!

ஆஃப் பாயிலை ஆம்லெட் ஆக்கிய பெருமை ஹன்சிகாவையே சேரும். யெஸ்... சிவகார்த்தியேன் என்னதான் கலெக்ஷன் ஹீரோவாக இருந்தாலும், அவருடன் ஜோடி சேர்ந்த அழகிகள் யாரும் தினத்தந்தி அழகிகளுக்கு...

Close