பாரதிராஜாவை விட்றாதீங்க! பாலாவை வற்புறுத்தப் போறாங்களாம்?
சில சப்ஜெக்டுகளை சிலரால்தான் படமாக்க முடியும். ‘சண்டியர்’ என்று கமல் பெயர் வைத்தால், தெரியும் சேதி. ஆனால் அதுவே வேறு யாராவது வைத்தால், “அட தோளுக்கு மேல வேல கிடக்குப்பா” என்று சொந்த வேலையை பார்க்க கிளம்பிவிடுவார்கள். கிட்டதட்ட அப்படியொரு நிலைமைதான் ‘குற்றப்பரம்பரை’ கதைக்கும். இந்த கதையை படமாக்குகிற துணிச்சல் பாரதிராஜா, பாலா மாதிரியான இயக்குனர்களுக்குதான் வாய்க்கும். திறமையால் மட்டும் வந்ததல்ல இந்த சுதந்திரம். அதற்கும் மேல ஒண்ணு இருக்கு. வேறு யாராவது ஒரு ஷாட் எடுக்கத்துணிந்தால் கூட, எரவாணத்துல இருக்கிற அருவாளுக்கு எள்ளு தண்ணி ஊத்திருவாங்க!
சரி மேட்டருக்கு வருவோம். இந்த ‘குற்றப்பரம்பரை’ கதையைதான் பாலா அடுத்த படமாக எடுக்கப் போவதாக ஒரு பேச்சு ஓடுகிறது கோடம்பாக்கத்தில். வேதனை என்னவென்றால், இந்த கதையை படமாக்குகிற லட்சியத்தோடு காத்திருந்தவர் பாரதிராஜாதான். ஆனால் அவரது சமீபத்திய அந்தஸ்து, ஒரு தயாரிப்பாளரை கூட அவர் பக்கம் அண்ட விடாமல் வைத்துக் கொள்வதால், சொந்த பணத்தை இறக்கி அந்த படத்தை எடுத்துவிடலாமா என்கிற அளவுக்கு துணிந்து வருகிறார். இந்த நேரத்தில்தான் இந்த பாலா, மற்றும் குற்றப்பரம்பரையை படமாக்குதல் விவகாரம் கிளம்பியிருக்கிறது.
பாலாவே எடுக்கட்டும். அவர் எடுத்தால் அது இன்னும் பேசும்படியாக இருக்கும் என்ற மனநிலைக்கு வந்த சில திரையுலக பிரபலங்கள், ஆனால் அதில் முக்கியமான ரோலில் பாரதிராஜாவை நடிக்க வைங்க என்று கேட்கப் போகிறார்களாம் பாலாவை நேரில் சந்தித்து. இதற்காக சில முன்னணி இயக்குனர்கள் கூடி கூடி பேசி வருவது பாலா காதில் விழுந்திருக்கிறதா தெரியாது. ஆனால், அதுவும் நல்ல யோசனையாகதான் படுகிறது.
தமிழ்சினிமாவில் பிரமாண்ட உயரங்களை அசால்ட்டாக தொட்ட ஒரு கலைஞனுக்கு பாலா கொடுக்கிற மரியாதையாக அது இருந்துவிட்டு போகட்டுமே?