பிச்சைக்காரன் படத்தில் கோட்டா பாட்டு! ‘நீக்குற ஐடியாவே இல்ல ’ -பாடலாசிரியர் தில்!

கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டர் ஆவுறான்… தப்பு தப்பா ஊசி போட்டு சாகடிக்கிறான்! இப்படியொரு பாடல் விஜய் ஆன்ட்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’ படத்தில் இடம் பெற்றிருக்கிறது. “பீர்ல கைய வை. மோர்ல கைய வை. எங்க உசுருல வச்சே…? ஒழிச்சே புடுவேன் ஒழிச்சு!” என்று ஒவ்வொரு விஷயத்திற்கும் சினிமாக்காரர்களை சுற்றி சுற்றி அடிக்கும் உலகத்தில் இப்படியொரு பிரச்சனை வந்தால் சும்மாவா இருக்கும் உலகம்? சமூக ஆர்வலர்களும், கோட்டாவில் சீட் வாங்கி படிப்பை முடித்தவர்களும் இந்த வரிகளுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

பேஸ்புக் ட்விட்டர் வலை தளங்களில் விஜய் ஆன்ட்டனிக்கு எதிராகவும், பிச்சைக்காரன் படத்திற்கு எதிராகவும் பெரும் எதிர்ப்புகள் கிளம்ப ஆரம்பித்திருக்கிறது. இந்த நிலையில் அந்த பாடலை எழுதிய லோகன் என்ற பாடலாசிரியரை தொடர்பு கொண்டது நியூதமிழ்சினிமா.காம்.

“முதல்ல ஒரு விஷயத்தை இங்கே பதிவு பண்ணிடுறேன் சார். நானும் ஒரு தலித் சமூகத்தை சேர்ந்தவன்தான். நாட்ல நடக்காதது எதையும் நான் எழுதல. உயிர் காக்கும் கடவுள்களான டாக்டர்கள் எல்லாரையும் நான் குறை சொல்லல. சில இடங்களில் மக்களிடம் இருந்து பணம் பிடுங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு செயல்படுற டாக்டர்களைதான் நான் குறிப்பிடுறேன். ஒண்ணுமேயில்லாத விஷயத்துக்கெல்லாம் அந்த டெஸ்ட் இந்த டெஸ்ட்டுன்னு பணத்தை பிடுங்கி பரிதவிக்க விட்ட அனுபவம் எனக்கே இருக்கு. அதனால்தான் அப்படி எழுதினேன். எந்த எதிர்ப்பு வந்தாலும், அந்த வரிகளை நீக்கறதா இல்ல” என்றார் ஆக்ரோஷமாக.

இனி டாக்டராச்சு, ஆக்ட்ராச்சு!

ஒரு முக்கிய குறிப்பு- இப்படி ஒரு பிரளயத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த பாடலை, எதுகை மோனையுடன் கலக்கலாக எழுதியிருக்கும் லோகன் படித்தது வெறும் ஒன்பதாம் வகுப்பு வரைக்கும்தான்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Thakituthaththom Movie Stills

Close