கர்பிணியா இருந்தாலும் தியேட்டருக்கு வாங்க…. எங்க பேய் நல்ல பேய்தான்! அச்சம் போக்கும் ஆவிகுமார்!
‘திருநெல்வேலி’ தொடங்கி சுமார் பதினைந்து படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார் உதயா. அப்பா, தம்பி, தம்பியின் மனைவி, தங்கை மகன் என்று குடும்பமே சினிமா என்ற நிழலில் அடைக்கலமாகியிருந்தாலும், உச்சந்தலைக்கு மேல் ஆலமரம் முளைப்பதற்காக காத்திருக்கிறார் உதயா. அவரது நம்பிக்கைக்கு நிழல் தரும் படமாக இன்னும் இரண்டொரு நாளில் திரைக்கு வரவிருக்கிற படம்தான் ‘ஆவிகுமார்’.
சார்… சினிமாவுல நாம உழைச்சிகிட்டேயிருக்கணும். என்னைக்காவது ஒரு நாள் பலன் இருக்கும். நானும் அந்த நம்பிக்கையில்தான் இத்தனை படங்களை ஓட்டிட்டேன். என் நம்பிக்கையின் மொத்த வடிகாலும் இந்த படம்தான் என்கிறார் உதயா. ஆவிகுமார் படத்தில் இவரது கேரக்டர் என்ன? ஆவிகளுடன் நேரடியாக பேசும் ஆவி அமுதா என்ற நிஜ கேரக்டரைதான் படத்தில் இவர் மீது ஏற்றி வைத்திருக்கிறார்கள். காமெடி, த்ரில்லிங் என்று கலந்து கட்டி அடித்திருக்கிறாராம் இவரும்.
‘டிமான்ட்டி காலனி, டார்லிங் மாதிரி இது பயமுறுத்துகிற ஆவிப்படம் இல்லைங்க. நல்லா ஜாலியா குடும்பத்தோட வந்து பார்த்துட்டு போகலாம். கர்ப்பிணி பெண்கள் கூட பயமில்லாம பார்த்து சிரிச்சுட்டு போவலாம்’ என்றார் உதயா. நாசர், நண்டு ஜெகன், விஜய் ஆன்ட்டனி, ஸ்ரீகாந்த் தேவா என்று இதுவரை இவர் படத்தில் இல்லாத அளவுக்கு ஸ்டிராங்கான நடிகர்களும் டெக்னீஷியன்களும் அமைந்திருப்பது இன்னும் சிறப்பு. ஆவிகுமாரை இயக்கியிருப்பவர் காண்டீபன்.
எல்லா ஊர்களிலும் பேய் ஓட்டுகிற ஆசாமிதானே பிழைப்பு நடத்துகிறார்? அது சினிமாவிலும் வந்து ஒட்டிக் கொண்டதோ என்னவோ? எல்லா பேய் படங்களுக்கும் செம டிமாண்ட். இந்த ஆவிகுமார் படத்திற்கு இதுவரைக்கும் 150 தியேட்டர்களை புக் பண்ணியிருக்கிறார்களாம். ரிலீசுக்கு முழுசாக இன்னும் ஒரு நாள் இருக்கிறது. அதற்குள் இன்னும் 20 தியேட்டர்கள் அதிகரித்தாலும் ஆச்சர்யமில்லை என்று உதயா சொல்லும்போதே அவர் முகத்தில் சந்தோஷம் தாண்டவம் ஆடுகிறது.
சும்மாவா பின்னே…? கால் கடுக்க நின்றவருக்குதானே நாற்காலியின் அருமை தெரியும்!