போகாதீங்க… போகாதீங்க… வெளிநாட்டுக்கு போகாதீங்க!
ஆனந்த விகடனின் வளர்ப்புகள் அவ்வளவாக சோரம் போனதில்லை! அதற்கு சமீபத்தில் வெளிவந்த ‘கத்துக்குட்டி’ படத்தின் இயக்குனர் இரா.சரவணன் ஒரு உதாரணம். அவரைத் தொடர்ந்து மேலும் ஒரு அழுத்தமான கருத்துடன் ‘ஆகம்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார் டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம். விகடன் பதிப்பகத்தில் ‘ஒரு சிறகு போதும்’ என்ற புத்தகத்தை மாணவர்களுக்காகவும், இளைஞர்களுக்காகவும் எழுதியிருக்கும் இவர், நாட்டுக்கு தேவையான ஒரு அழுத்தமான கருத்தை இப்படத்தில் பதிய வைத்திருக்கிறாராம். அப்படின்னா மெசெஜ் சொல்லியே மொன்னை போடுவாரோ? என்கிற அச்சம் இருக்குமல்லவா? அங்குதான் வேறுபடுகிறார் முனைவர்.
வேலை வாய்ப்பு சந்தையில் நடக்கும் பல கோடி மதிப்பிலான உழலை பற்றிய படம் ‘ஆகம்’. சோஷியல் த்ரில்லர் பாணியில் இதை உருவாக்கியிருக்கிறாராம் விஜய் ஆனந்த் ஸ்ரீராம். “நம் நாட்டில் படித்த இளைஞர்கள் பலர் தங்கள் மூளைத் திறனை அயல்நாட்டில் கொண்டுபோய் அடகு வைக்கிறார்கள். அவர்களை ஒரு நிமிஷமாவது இந்த படம் சிந்திக்க வைக்கும். அப்படி வெளிநாட்டுக்கு கிளம்பும் ஒவ்வொருவரும் தங்கள் மூளையை தங்கள் தாய் நாட்டுக்காக அர்ப்பணித்தால், இந்தியா விரைவில் வல்லரசாகும்” என்பதுதான் டைரக்டரின் கருத்து.
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்? என்ற முழக்கத்தை முன் வைத்திருக்கும் விஜய் ஆனந்த் ஸ்ரீராமின் கருத்துக்களுக்கு உயிர் கொடுத்திருக்கிற நட்சத்திரம், சின்னத்திரை பிரபலம் இர்பான். அவருக்கு ஜோடியாக அறிமுக நாயகி தீக்ஷிதா நடித்திருக்கிறார். மற்றும் ஜெயபிரகாஷ், ரியாஸ் கான், பிரேம், ரவி ராஜா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். RV சரண் ஒளிப்பதிவில், மனோஜ் கியான் படத்தொகுப்பில், ஜிநேஷ் வசனங்கள் எழுத, சதீஸ் குமார் கலையமைப்பில், விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.
‘படிச்சவரின் அருமை படிச்சவருக்கே புரியும்’ என்பதைப் போல, இந்த படத்தை ஒரு கல்வி நிறுவன அதிபர்தான் தயாரித்திருக்கிறார். அவர் பெயர் கோடீஸ்வர ராஜா.
“இந்த படத்தை பார்த்துட்டு ஒரே ஒருத்தர் தன் வெளிநாட்டு கனவை விட்டுட்டா போதும். அதுதான் இந்த படத்தின் நிஜ வெற்றி” என்றார் டைரக்டர். எதுக்கும் ஒவ்வொரு பாஸ்போர்ட் ஆபிஸ் முன்னாலேயும் படத்தோட போஸ்டரை ஒட்டிப் பாருங்களேன்…!