கூத்துப்பட்டறைக்கு போகாதே! மகனை எச்சரித்த தம்பி ராமய்யா?
அதாகப்பட்டது மகா ஜனங்களே…. இப்ப நாம சொல்லப் போற விஷயம் நல்லதா, கெட்டதா? என்பதை நீங்களே தீர்மானிச்சுக்கங்க! தமிழ்சினிமாவில் இயக்குனர், காமெடி நடிகர், குணச்சித்திர நடிகர், பாடகர் என்று பல்வேறு அவதாரங்களை எடுத்ததோடல்லாமல், அதில் பெயர் சொல்லும் விதத்தில் வெற்றியும் பெற்றவர் தம்பி ராமய்யா. அவரது மகன் உமாபதி ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். நடிக்கணும்னு வந்தாச்சு. நாலு எடத்துல பயிற்சி எடுத்தாதானே நல்லபடியா குப்பை கொட்ட முடியும்? அங்குதான் வச்சாரு செக்! ‘மகனே… நடிப்புங்கறது பயிற்சியில வர்றது இல்ல. அதுவா வரணும். அதை விட்டுட்டு கூத்துப்பட்டறை, அது இதுன்னு கௌம்பினா வௌங்குனாப்லதான்’ என்று எடுத்த எடுப்பிலேயே தடுத்து நிறுத்த…. ஐயோ, அப்புறம் என்னாச்சு?
டைரக்டர் இன்பசேகரிடம் ‘இதுதான்யா நடிப்பு’ என்று குட் மார்க் வாங்கிவிட்டார் உமாபதி. பெரியவங்க சொன்னா பெருமாளே சொன்ன மாதிரின்னு சும்மாவா சொன்னாங்க?
விஜய் டி.வி யில் சீரியல்களில் பணியாற்றி வந்தவர் இந்த இன்பசேகர். தனது படத்திற்கு நல்ல லட்சணமான ஹீரோவை தேடிக் கொண்டிருந்த போதுதான், இந்த தம்பியை பாருங்களேன் என்றார்களாம். எல்லாம் ஓ.கே. தம்பி வீடு எங்க இருக்கு? என்ன படிச்சிருக்கீங்க? அப்பா என்ன பண்றாரு? என்று வரிசையாக கேள்வி கேட்க, எங்க அப்பா நடிக்கிறாரு. பேரு தம்பி ராமய்யா என்றாராம் உமாபதி. அப்புறம்… ? எல்லாருக்கும் ஷாக். அதையே இன்ப ஷாக்காக்கிக் கொண்டார் இன்பசேகர்.
தெலுங்கில் இரண்டு வெற்றிப்படங்களில் நடித்த ரேஷ்மா ரத்தோர் உமாபதிக்கு ஜோடியாக நடிக்கிறார். முழு காமெடி கதை என்றார் இன்ப சேகர். படத்தின் பெயர்… ‘அதாகப்பட்டது மகா ஜனங்களே…! ’
ஒரு முக்கியமான விஷயம். இந்த படத்தில் தம்பி ராமய்யா நடிக்கவில்லை!