பெரிய ஹீரோக்களே… ஜனங்களை துன்புறுத்தாதீங்க! பிரபலத்தின் பேச்சால், சலசலப்பு?
உதயா நடித்த ‘ஆவிக்குமார்’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா பென்ஸ் பார்க் ஓட்டலில் நடந்தது. பெயரை பார்த்தாலே தெரிந்திருக்கும் இது எந்த மாதிரியான பட வகையை சேர்ந்ததென்று! பெயருக்கேற்ப ஒரு சர்ச்சையை கொளுத்திப் போட்டுவிட்டு கிளம்பினார் விவேக்.
‘வேறொரு படத்தின் ஷுட்டிங்கிலிருந்தேன். என்னுடைய நண்பன் உதயா கேட்டுக் கொண்டதால் இந்த விழாவுக்கு வந்தேன்’ என்று காரணம் கூறி விட்டு, பேச ஆரம்பித்தார் அவர். வழக்கம் போல அவரது பேச்சில் சின்ன சின்ன காமெடிகள் எழ, அரங்கமும் வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தது. ‘அதென்னவோ தெரியல… எல்லா படத்துலேயும் பேயையும் ஆவியையும் பெண்ணாகதான் காட்டுறாங்க. ஒருவேளை எல்லா டைரக்டர்களும் கல்யாணம் ஆனவங்களா இருப்பாங்கன்னு நினைக்கிறேன். ஒரு படத்திலாவது ஒரு ஆம்பளையை பேயா காட்டுங்களேன்’ என்றார். அதற்கப்புறம் சீரியஸ் மேட்டருக்கு தாவிய விவேக், ‘சின்ன படங்களுக்கெல்லாம் தியேட்டர் கிடைக்கறதில்ல. கிடைச்சாலும் பதினொரு மணி ஷோவுல குடும்ப படத்தை போட்றாங்க. அந்த நேரத்துல பெண்களெல்லாம் சமையல் வேலைகள்ல மூழ்கியிருப்பாங்க. அவங்க வரலேன்னா எப்படி குடும்ப படங்கள் ஓடும்?’
‘நல்லா ஓட வேண்டிய படத்தை கூட, பெரிய பெரிய படங்களுக்காக சீக்கிரம் சீக்கிரம் தியேட்டர்லேர்ந்து தூக்கிடுறாங்க. சின்னதா பணம் போடுற தயாரிப்பாளர்களும் மனுஷங்கதானே? அவங்க போடுறதும் பணம்தானே? உடனடியா தயாரிப்பாளர் சங்கம் இதில் தலையிட்டு பிரச்சனையை தீர்த்து வைக்கணும்’ என்றார்.
பின்னாலேயே பேச வந்த தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் சிவசக்தி பாண்டியன் விவேக் கருத்திற்கு எதிராக சில விளக்கங்களை கொடுத்தார். விவேக் சொன்னதுல ஒரு விஷயம் தப்பு. ஆவியுலக நற்பணி மன்ற தலைவரே நம்ம லாரன்ஸ்தான். அவர் ஆரம்பிச்சு வச்ச ஆவிப்பட ட்ரென்டுதான் இன்னும் ஓடிகிட்டு இருக்கு’ என்றவர், ‘அதே மாதிரி விவேக் சொன்ன சின்னப்பட தயாரிப்பாளர்களுக்கு நல்ல எதிர்காலம் வந்துகிட்டு இருக்கு. அதை நோக்கிதான் சங்கம் செயல்படுது’ என்று கூறிவிட்டு அமர்ந்தார்.
இறுதியாக மைக்கை பிடித்தார் முன்னாள் விநியோகஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி சேகரன். ‘தியேட்டர்ல டிக்கெட் விலையை குறைச்சா எல்லாம் சரியா போயிரும். சின்ன சின்ன கிராமங்களில் கூட 80 ரூபாய் டிக்கெட் விற்றா என்னாவறது? அதே மாதிரி பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு 400 ரூபாய் டிக்கெட் போடறாங்க. எப்படி தாங்கும்? ரஜினி படத்திற்கு அவ்வளவு பெரிய விலையில் டிக்கெட் வித்ததால்தான் பல பிரச்சனைகளை அவர் சந்திக்க நேர்ந்துச்சு. அவர் மாதிரி பெரிய ஹீரோக்கள், என் படத்துக்கு இவ்வளவுதான் டிக்கெட் விலை இருக்கணும்னு வலியுறுத்தணும். உங்களுக்கு லாபம் வரணும்ங்கறதுக்காக ஜனங்களை துன்புறுத்தாதீங்க’ என்றார் காட்டமாக!
வழக்கம் போல எல்லாரும் கூடி பேசிவிட்டு கலைந்ததை தவிர வேறொன்றும் நடக்கப் போவதில்லை என்பது மட்டும் இதுபோன்ற விழாக்களை ரெகுலராக கவனிக்கும் பத்திரிகையாளர்களுக்கு புரிந்தது.