பொறிக்கு சேதம், எலிக்கு லாபம்! சம்பளம் எட்டு கோடியாம்?
எலி படம் உருவான கதை என்று யாராவது தனியாக ஒரு டீசர் ஓட்டினால், ஏகப்பட்ட விசில்கள் பறக்கும். ஒரு ரசிகனின் கண்களால் அதை நோக்குகிறவர்களுக்குதான் அந்த அற்புதம் புரியும். இந்த படத்தை தயாரிக்க வந்த தயாரிப்பாளர்களான சதீஷ்குமாரும் அவரது நண்பரும் மதுரையில் ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனி வைத்திருக்கிறார்கள். இவர்களின் மனைப்பிரிவின் பெயரே ‘வைகைப்புயல்’தானாம். அந்தளவுக்கு வடிவேலுவின் தீவிர ரசிகர்கள் இருவரும்.
கடந்த பல வருடங்களாக வடிவேலுவுடன் பழகி வந்தாலும், அவரை வச்சு நாமெல்லாம் படம் எடுக்க முடியுமா? ரேஞ்சிலேயே அவரை அண்ணாந்து பார்த்து வந்தவர்களாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், நானே உங்களுக்கு கால்ஷீட் தர்றேன். நீங்க ஏன் என்னை வச்சு ஒரு படம் தயாரிக்கக் கூடாது என்று வடிவேலே கேட்டதாகவும், மெய் சிலிர்த்துப் போன தயாரிப்பாளர்கள் அன்றே கிளம்பி வந்ததாகவும் அமைகிறது எலியின் பிளாஷ்பேக்.
அண்ணன் என்ன சம்பளம் கேட்கிறாரோ? கசறாம கொடுத்துரணும் என்பதும் அவர்களின் சந்தோஷமாக இருந்திருக்கிறது. இந்த படத்திற்காக எட்டு சி சம்பளமாக கேட்டாராம் வடிவேலு. தாராளமா… என்று அள்ளிக் கொடுத்திருக்கிறர்கள். நமக்கு 20 கோடி பிசினஸ் இருக்கு. கண்ணை மூடிகிட்டு இந்த படத்துக்கு செலவு பண்ணினாலும் 15 சி யில் காப்பி பண்ணிட்டா மீதி அஞ்சு கைமேல் பலன் என்றெல்லாம் அவர்களுக்கு ஆசை காட்டப்பட்டிருக்கிறது.
சரி… நெட் ரிசல்ட் என்ன? படம் வெளியான பின்பு கடும் அப்செட்டுக்கு ஆளாகியிருக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள். சென்னை வடபழனியில் அமைந்திருக்கும் ஒரு பசுமை ஓட்டலில்தான் தங்கியிருக்கிறார்கள் அவர்கள். படம் வெளியாகும் தினத்திற்கு முன்பிருந்தே அவர்களுடன் தங்கிவிட்டாராம் வடிவேலுவும். ‘போட்ட காசு பைசா பாக்கியில்லாம வந்து சேர்ந்துரும். அமைதியா இருங்க’ என்று இவர் ஆறுதல் சொல்ல, அண்ணனே பக்கத்துல இருந்து ஆறுதல் சொல்றாரு. இதைவிட வேறென்ன பேரும் புகழும் நமக்கு வேணும் என்கிற அளவுக்கு அவர்களும் நெகிழ்ந்து போயிருக்கிறார்களாம்.
எங்க… கொடுத்த எட்டு சி யில் எதையாவது திருப்பி கேட்ருவாங்களோ என்கிற அச்சத்தில் தவித்து வந்த வடிவேலுவுக்கு, தயாரிப்பாளர்களின் அனுசரணையான போக்கு இன்னும் சில நாட்களுக்கு தாங்கும் போலதான் தெரிகிறது. அதற்கப்புறம் என்ன நடக்குதோ? அந்த பாக்ஸ் ஆபிசுக்கே வெளிச்சம்!