எந்த ஹீரோவிடமும் இல்லாத பழக்கம்… வியக்க வைக்கும் சித்தார்த்!
க்ரவுட் ஃபண்டிங்…! தமிழ்சினிமா அறியாத இந்த வார்த்தையை கன்னட சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் பவன் குமார். ‘லுசியா’ என்ற கன்னட படத்தை சுமார் ஆயிரம் தயாரிப்பாளர்களின் உதவியுடன் அறுபது லட்ச ரூபாயில் எடுத்தவர் அவர். படம்? தாறுமாறான ஹிட்! அந்த பவன் குமாருக்கே போன் அடித்து, ‘பிரதர் உங்க படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸ்சை நான் வாங்கிக்கிறேன்’ என்று சித்தார்த் கேட்க, ‘அது ஏற்கனவே கொடுத்தாச்சே’ என்றாராம் அவர்.
வாங்கியவர் பீட்சா, சூதுகவ்வும் பட தயாரிப்பாளர் சி.வி. குமார். அப்புறமென்ன? வெண்ணெய் திரண்டு உதட்டிலேயே விழுந்துவிட்டது சித்தார்த்துக்கு. இருவரும் ஏற்கனவே நண்பர்களாம். ‘அந்த படத்துல நான்தான் ஹீரோவா நடிப்பேன்’ என்று நடித்தேவிட்டார் சித்தார்த். கன்னடத்தில்தான் அது க்ரவுட் ஃபண்டிங்! இங்கே மூன்றே மூன்று தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். அதுவும் ஒரு ஃபேஷனுக்கு. இல்லையென்றால் தனி ஒருவராகவே தயாரிக்கக் கூடிய அளவுக்கு ஒவ்வொரு தயாரிப்பாளருமே யானையை கட்டி அதற்கு மூன்று வேளையும் முந்திரி பருப்பு போடுகிற அளவுக்கு பலசாலிகள்!
இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இரண்டு பாடல்களை திரையிட்டார்கள். ஒரு பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனே பாடியிருக்கிறார். புதிய குரல். புதிய ராகம். புதிய கோரியோ கிராஃப். புதிய வரிகள்…. சத்தியமாக எழுதி வைத்துக் கொள்ளலாம். இந்த வருடத்தின் சூப்பர் ஹிட்டுகளில் இதுவும் ஒன்று! படத்தை பிரசாத் ராமர் இயக்கியிருக்கிறார்.
சித்தார்த்துக்கு ஜோடியாக தீபா சன்னதி (அட… பெருமாள் சன்னதி, முருகன் சன்னதி மாதிரி இதென்னாப்பா தெய்வீக பேரு?) நடித்திருக்கிறார். பொண்ணு முழங்கால் முட்டிக்கு மேலே ஒரு டிரஸ்சை மாட்டிக் கொண்டு வந்து நிற்க, போட்டோகிராபர்கள் ஏரியாவில் ஒரே பசுமை. அவர் ஸ்டேஜில் உட்கார்ந்திருந்த ஒரு மணி நேரத்தில், ஸ்கர்ட்டை இழுத்துவிட்ட நேரம் மட்டும் முக்கால் மணி நேரத்திற்கும் மேல். ஏன் போடுவானேன்? ஏன் இழுத்து இழுத்து விடுவானேன்?
‘அவங்களுக்கு தமிழ் தெரியாது. ஆனால் காலையிலேயே வந்து மனப்பாடம் பண்ணிகிட்டு இருப்பாங்க’ என்று தீபாவின் உழைப்புக்கு நற்சான்றிதழ் வழங்கினார் சித்தார்த்.
மிக மிக ஆச்சர்யமான விஷயங்களில் இதுவும் ஒன்று. இந்த படத்தில் அதிகம் அறிமுகமில்லாத மூன்று பாடலாசிரியர்கள் பாடல் எழுதியிருக்கிறார்கள். மூவருக்குமே தனித்தனியாக போன் செய்தாராம் சித்தார்த். பாடல் வரிகள் நல்லாயிருக்கு என்று பாராட்டியவர், முழு பாடலையும் பாடிக் காட்ட… ஆடிப்போனார்களாம் அவர்கள். தமிழ்சினிமாவுல எந்த ஹீரோவிடமும் இல்லாத வழக்கத்தையெல்லாம் சித்தார்த் கொண்டு வந்தால் ஆடாம என்ன பண்ணுவாங்களாம்?