என்னை அறிந்தால்/ விமர்சனம்

அஜீத் கால்ஷீட்டை கஷ்டப்பட்டு வாங்கிய பல இயக்குனர்கள், சிதம்பரம் நடராஜ பெருமானை தி.நகர் சபாவில் ஆடவிட்ட மாதிரி கொடுங்கோலம் செய்துவிடுவார்கள். ஆனால் ஹாலிவுட் ஹீரோ லுக்கில் இருக்கும் அஜீத்தின் கையில் ஒரு துப்பாக்கியை கொடுத்து, அதை எவ்வித நடுக்கமும் அலட்டலும் இல்லாமல் சுட வைத்திருக்கிற ஒரே காரணத்திற்காகவே கவுதம் மேனன் படங்களுக்கு ஆயுள் சந்தா கட்டலாம்.

பட்… கலகலவென சிரித்து, பரபரவென நடுங்கி, சரசரவென கைபிடித்து அழைத்துச் செல்லும் யுக்தியை சற்றே மிஸ் பண்ணியிருக்கிறார் கவுதம். இருந்தாலும் அஜீத்தின் ஸ்டைலை அணுஅணுவாக ரசிக்க விரும்புகிறவர்களுக்கு மட்டும் ‘என்னை அறிந்தால்’ அல்வா துண்டு.

விமானத்தில் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருக்கும் அஜீத்தை பார்த்தவுடனேயே பிடித்துப் போய்விடுகிறது அனுஷ்காவுக்கு. பிளைட் இறங்கிய இருவருக்கும் அடுத்த சந்திப்பிலேயே ஆக்ஷன் பிளாக்! உள் பட்டன் கிழிய கிழிய ஓடும் அடியாட்களையும் சவட்டி எடுத்த அஜீத்தையும் திகிலோடு நோக்கும் அனுஷ்காவிடம், ‘அவங்க வந்தது என்னை தாக்க இல்ல. உன்னை…’ என்று சஸ்பென்ஸ் தருகிறார் அஜீத். ‘பார்றா…’ என்று நிமிர்ந்து உட்காரும் நமக்கு, அவர் சொல்லும் பிளாஷ்பேக்குகளும், ஆக்ஷன் பட்டாசுகளும்தான் கதை.

அனுஷ்கா அஜீத் சந்திப்பை விடவும், த்ரிஷா அஜீத் சந்திப்பு செம க்யூட். ஒரு என்கவுன்ட்டருக்காக ஆட்டோ டிரைவர் வேஷத்தில் ஒரு ஆட்டோவில் அஜீத் அமர்ந்திருக்க, வயிறும் டெலிவரியுமாய் வந்து ஏறுகிறார் த்ரிஷா. ‘அடுத்த ஆட்டோவுல போயிருங்க’ என்று சொல்லும் அஜீத், அதற்கப்புறம்தான் வயிறை பார்க்கிறார். ம்ஹும்… என்கவுன்ட்டரை போட்டது போட்டபடி போட்டுவிட்டு ஆஸ்பிடல் கிளம்ப, அவ்வளவு வலியிலும் ஆட்டோ கட்டணத்தை செலுத்திவிட்டு கிளம்புகிறார் த்ரிஷா. அது போதாதா காதல் வர? அதற்கப்புறம் சுமார் இரண்டு வருஷங்கள் கழித்து போலீஸ் டிரஸ்சில் அஜீத்தை பார்க்கும் த்ரிஷா, ‘தமிழ்சினிமாவுல வர்ற மாதிரி ரெண்டு வருஷத்துல படிச்சு போலீஸ் ஆபிசராயிட்டீங்க’ என்று கலாய்க்க, லவ்வில் மேலும் சில மழைத்துளிகள். கவுதமுக்கு ஆக்ஷனைவிடவும் அதிகம் வசப்பட்டிருக்கிறது காதல்.

ஒரு நாட்டிய தாரகை எப்படியிருக்க வேண்டுமோ, அப்படியெல்லாம் இருக்கிறார் த்ரிஷா. ரிட்டையர் ஆகப் போகிற விளக்கு… பிரகாசம்!

ஒரு குழந்தையுடன் அம்மாவை காதலிக்கிற அந்த நீண்ட பகுதியில் ஒரு இடத்திலும் வரம்பு மீறாத அஜீத்தை காண்பித்த வகையில் வணக்கத்திற்குரியவராகிறார் கவுதம். அதே அஜீத் என்கிற ‘மாஸ் மாஸ் ட்ரிப்பிள் மாஸ்’ ஹீரோவை அப்படியா அரை தூக்கத்தில் அறிமுகப்படுத்துவது? சமயங்களில் பிணக்கத்துக்கும் உரியவராகிறார் கவுதம். மூன்று மணி நேர டிராவலில், விவேக் இருந்தும் சிரிப்பு இல்லையே, அதனால்! நல்லவேளையாக தனது நதியோட்ட வசனங்களில் அதை நிவர்த்தி செய்கிறார் கவுதம். ஒரு காட்சியில்… ‘என்ன ஒண்ணு. நான் அடிக்கடி மெடிக்கல் ஷாப் போகணும்’ என்று அஜீத் சொல்ல, ‘கொலீர்… ’ ஆகிறார்கள் ரசிகர்கள்.

அஜீத்தின் வெவ்வேறு பருவங்களில் அவரை மீண்டும் ‘கரு கரு’ தலையுடன் பார்க்கும் போதே பரவசமாகிறது தியேட்டர். (அப்படியே இனிமேலும் தொடரலாமே சார்) அதே மாதிரி அவர் பேசும் பல வசனங்கள் மியூட் செய்யப்பட்டிருந்தாலும், உதட்டசைவில் கண்டுபிடித்துவிட முடிகிறதா… பகீர்! அருண்விஜய்க்கும் அஜீத்திற்குமான ஃபைட்டும் செம! ஒரு மெல்லிய கோட்டுக்கு அந்தப்பக்கம் அஜீத்தும், இந்த பக்கம் அருண் விஜய்யும் இருந்தாலும், இருவருக்கும் நிகரான கேரக்டர்களை வழங்கி நியாயவான் ஆகியிருக்கிறார் கவுதம் மேனன். அதற்கெல்லாம் ஒப்புக் கொண்ட அஜீத்திற்கு பெரிய மனசுதான்!

அருண் விஜய்க்கு இனி ரூட் க்ளியர். அஜீத்தே க்ரீன் சிக்னல் போட்டுக் கொடுத்துட்டாரு… அப்புறமென்னவாம்?

அனுஷ்காவுக்கு அதிகம் வேலையில்லை. அதற்காக ரசிகர்கள் ஏங்கவும் இல்லை. இஷாவாக நடித்திருக்கும் அனிகா சுநேந்திரன் நெகிழ வைக்கிறார்.

ஆசைப்பட்ட த்ரிஷாவை போட்டுத்தள்ளுகிற வில்லன், குழந்தை கடத்தல் என்று கவுதம் தன் முந்தைய படங்களையே மறு பதிப்பு செய்திருந்தாலும், உடல் பாகங்களை கடத்துகிற கும்பல், அவர்களின் குயுக்தி என்று ஒரு புது ஐட்டத்தை உள்ளே போட்டு, சமையலில் ருசி சேர்த்திருக்கிறார்.

அதே நேரத்தில் ‘ஊதாக்கலரு ரிப்பன்…’ களெல்லாம் லோக்கல் போலவும் அந்த இங்கிலீஷ் ஸ்டைல் பாட்டுதான் ஒஸ்தி போலவும் காட்டியிருப்பது மேனனின் மோசமான ‘மேன(ன்)ரிசம்’ அன்றி வேறென்ன?

இசை ஹாரிஸ் ஜெயராஜ். அந்த பயணப்பாடல் ஸ்வீட்! ஒரு நாடக பாடலும் அவரது வழக்கமான ஸ்டைலில் இருந்து வேறுபட்டு வசீகரிக்கிறது. பின்னணி இசையில் பரபரப்பூட்டியிருக்கிறார். தபஸ் நாயக்கின் ஒளிப்பதிவு அனுஷ்காவுக்கு மட்டும் ஓரவஞ்சனை செய்திருக்கிறது.

படத்தில் அஜீத் பலரையும் சுட்டு வீழ்த்துகிற சமயம் பார்த்து கவுதமின் கதை இலாகாவை சேர்ந்த சிலரையும் குறுக்கே ஓடவிட்டிருக்கலாம். ரிப்பீட் தவிர்க்கப்பட வேண்டும் என்றால் அது ரொம்ப முக்கியம்.

மற்றபடி உள்ளம் கவரும், என்னை அறிந்தால்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஆயிரம் ரோசாப் பூ… ஆயிரம் மன்னிப் பூ! -ஆர்.எஸ்.அந்தணன்

கிளி ஜோசியம் கண்டு பிடிச்சவன் எவனோ, அவன்தான் பிராணிகள் வதை சட்டத்தின் முதல் தண்டனை குற்றவாளி. ஒரு நெல்லுக்காக அது பார்க்குற ஓவர் டைம் இருக்கே... அடாடாடா...!...

Close