எங்களுக்கு ஒரு விஜய் போதுங்ணா… ரசிகர்களின் அலுப்பால் திருந்திய பரத்!
ஐந்தாம் தலைமுறையிலாவது ‘சின்ன தளபதி’ பரத், ‘இளைய தளபதி’ விஜய் ஆக முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் அவரது பிடிவாதத்தையெல்லாம் அவரே வெடி வைத்து தகர்த்துக் கொண்ட படம்தான் ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’. ஆக்ஷன் ஹீரோவாகிவிட்டால் தமிழ்சினிமாவில் ஒரு ஐம்பது அறுபது ஏக்கர் மரியாதையையும் பணத்தையும் வளைத்துப் போட்டுவிடலாம் என்று அவருக்கு யார் சொல்லிக் கொடுத்தார்களோ?
தொடர்ந்து விஜய் டைப் கதைகளாகவே செலக்ட் பண்ணி நடித்துக் கொண்டிருந்தார். விளைவு? ‘எங்களுக்கு ஒரு விஜய் போதுங்ணா…, நீங்க வேற எதுக்கு முடியாம கெடந்து முக்குறீங்க?’ என்று பரத்திற்கு கட்டாய லீவு கொடுத்து அனுப்பிவிட்டார்கள் ரசிகர்கள். நரிக்கு கொலை பசியெடுக்கும் போது, புளிக்கிறது திராட்சையா? ஆப்பிளான்னு ஆராயவா முடியும்? கிடைத்ததை லபக்கென பிடித்துக் கொள்ள வேண்டியதுதான். பரத்தும் அந்த முடிவுக்குதான் வந்தார். அந்த நேரத்தில் வந்ததுதான் இந்த ‘சித்த வைத்திய சிகாமணி’. நல்லவேளையாக இது நகைச்சுவை படமாக அமைந்து, பரத்தின் அதல பாதாள சறுக்கலை தேசிய பேரிடர் மீட்பு குழுவை போல ஓடி வந்து காப்பாற்றியிருக்கிறது. படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் எல்லாமே வெரிகுட் ரகம்! (முக்கியமான விஷயம், இந்த படத்தில் தன்னை சின்ன தளபதி என்று குறிப்பிட வேண்டாம் என்று இயக்குனரை கேட்டுக் கொண்டிருக்கிறார் பரத்)
இந்த படத்தை தயாரித்திருப்பது பாலசந்தரின் கவிதாலயா என்பது இன்னொரு கூடுதல் தகுதியாகவும் அமைந்திருக்கிறது. பொதுவா எனக்கு குத்துப்பாடல்கள் பிடிக்காது. ஆனால் இந்த படத்தில் வரும் குத்துப்பாடலை பார்த்துட்டு எனக்கே ஆடணும் போல இருக்கு என்றார் பாலசந்தர். (ஹ்ம்ம்… இயக்குனர் சிகரத்திற்கு இப்படியும் ஒரு ஆசை) அப்படியே அவர் சொன்ன இன்னொரு விஷயம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது. தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி இதுவரைக்கும் 86 டைரக்டர்களை அறிமுகப்படுத்தியிருக்காரு. நானும் நிறைய பேரை அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்றதுதான்.
நல்லா கேட்டுக்கங்க தயாரிப்பாளர்களே…. !