வேட்டைக்கு போன ராஜாவுக்கு வேட்டியெல்லாம் ரத்தக்கறை?

வேட்டைக்கு போன ராஜாவுக்கு வேட்டியெல்லாம் ரத்தக் கறைன்னா அது பெருமை! ஆனால் ‘ரகசிய’ வேட்டைக்கு போன மந்திரிக்கு அதிசயமா ஒரு அனுபவம் வாய்ச்சா அதுக்கு பெயரென்ன? பச்சக் பச்சக்னு ‘முத்தம்’ விழும்னு போன அந்த மந்திரிக்கு, பொளேர் பொளேர்னு ‘சத்தம்’ விழுந்த ஸ்டோரி இது! ராஜா உட்கார்ந்தால்தான் சிம்மாசனம். அதுவே, நரி உட்கார்ந்தால் அது சர்க்கஸ் நாற்காலி! ஒரு சிம்மாசனம் ஏன் சர்க்கஸ் நாற்காலியானது? அந்த அண்டை நாட்டு அசிங்கத்தை சொந்த நாட்டில் ‘சூயிங்கம்’ போல மென்றார்களே, அதன் பின் கதை முன் கதை என்ன?

வாங்க பழகலாம்…

அண்டை நாட்டு மந்திரி என்கிறார்கள் அவரை. சம்பவம் நடந்த காலம், ராமாயண காலமல்ல! …ந்தா ரெண்டு வருஷத்துக்கு முந்திய காலம்தான். நாலு சுவற்றுக்குள் நடந்த ரகசிய அலம்பலை ஊர் முழுக்க பரப்பிய அந்த வரலாற்று யுவான் சுவான்குகள் மந்திரி பெயரை மட்டும் மனசின் அடியாழத்துல தள்ளி, ஆறேழு பூட்டை போட்டு, சாவியை நிலாவில் எறிந்துவிட்டு நிம்மதியாகிவிட்டார்கள். அடுத்ததொரு ஆம்ஸ்ட்ராங் வந்து சாவியை எடுக்கிற வரைக்கும் மந்திரி பெயரும் தெரியாது. அவர் மார்ல இருந்த மச்சமும் தெரியாது. ஆனால் நடந்த சம்பவம்…. குத்த வச்சு உட்கார்ந்து குமுறி குமுறி அழுதாலும் அவரால் மறக்கவே முடியாத சம்பவம்.

மல்லாக்கொட்டைய உடைச்சா அதற்குள் மாங்கொட்டையா இருக்கும்? ‘மாம்ஸ்’களோடு ஏற்படுகிற பழக்கம், வெறும் மீம்ஸ்களோடு முடிந்தால் பிரச்சனையில்லை. நாய் தலையில் சொம்பு மாட்டிய கதையாய், நாலாபுறமும் ஓட வைக்குதே?

வட்டச் செயலாளர் வண்டு முருகனெல்லாம் கூட, முன்னால் ஒரு சைரன், பின்னால் ஒரு சைரன் சகிதமாக வந்து மார்க்கெட், கடைத்தெரு, கோவில், கொல்லைபுறம் என்று எல்லா இடத்திலும் வசூல் பண்ணி வருகிற காலத்தில், தான் மந்திரி என்கிற கோதாவே இல்லாமல் சென்னை வந்தார் அந்த மினிஸ்டர்.

அரசு முறை பயணமாக வர வேண்டிய அந்த அண்டை நாட்டு மந்திரி, ரகசியமாக சென்னை வந்ததில் ஒன்றும் வியப்பில்லை. அவ்வப்போது இப்படி நடப்பதுண்டு. தனது சொந்த விஷயங்களுக்காக கிளம்பி வரும் சிலர் தன்னை மந்திரி என்று சொல்லிக் கொண்டு ரகளை கிளப்புவதில்லை. இங்குள்ள காவல் துறை அதிகாரிகளுக்கே கூட தெரியாமல் வருவார்கள். வந்த வேலையை முடித்துவிட்டு கிளம்பியும் விடுவார்கள். ஏதாவது சிக்கல் ஏற்பட்டாலொழிய தனது பராக்கிரமங்களை அவிழ்ப்பதில்லை.

அப்படிதான் அவரும் வந்தார். அண்டை நாட்டு மீது அளவுக்கதிகமாக கோபம் இருந்தாலும், தலையில் துண்டை போட்டுக் கொண்டு உறவை வளர்த்துக் கொள்வதில் கோடம்பாக்கத்துக்கு நிகர் கோ.பாக்கமேதான். இங்கிருக்கும் பலருக்கு, அங்கிருக்கும் பலர் தோஸ்த்! உள்ளூரில் உண்ணாவிரதம் இருப்பார்கள். அதற்கடுத்த நாளே அங்கிருக்கும் நட்புகளுடன் ரகசியமாய் கை நனைப்பார்கள். இப்படி ரகசிய பிரண்ட்ஷிப் வைத்திருந்த ஒரு கோடம்பாக்க பிரமுகர், மந்திரி வந்த மணி நேரத்திற்குள்ளேயே கத்திரிப்பூவாய் மலர்ந்தார். இவர் வந்து ஜால்ரா கச்சேரியை ஆரம்பிக்கும முன்பே சென்னையில் பிரபல நட்சத்திர ஓட்டலில் ரூம் போட்டுவிட்டார் மினிஸ்.

“தலைவரே… நீங்க பாட்டுக்கு இங்க வந்து ரூம் போட்டுட்டீங்க. நாலு பேரு வந்து போற இடம். நீங்க பார்க்க வேண்டியது நிறைய இருக்கு. அதுக்கு இந்த இடம் சவுரியப்படாதே?” என்று சலங்கை கட்டினார் பிரமுகர். “என்னவோ சமிக்ஞை கொடுக்குறான்…. ஏதுக்குன்னு புரியலையே?” என்று ஜர்க் ஆனார் மந்திரி. “என்னய்யா சொல்ற, கொஞ்சம் விளக்கமா சொல்லு” என்று கேள்வி நேரம் ஆக்கினார் தன் சந்தேகத்தை. அதற்கப்புறம் விலாவாரியாக விளக்கினார் மிஸ்டர் கோடம்பாக்கம். கண்களில் மானாடியது மயிலாடியது மினிஸ்டருக்கு!

“யோவ்… இதுக்கு முன்னே எத்தனையோ முறை வந்திருக்கேன். ஒவ்வொரு முறையும் குடிக்கிறதையும், குடிக்கறதுக்கு சைட் டிஷ்ஷா கடிக்கறைதையும் காட்டுன. இப்படி குடியும், கடியும் தாண்டிய ‘மடி’ சமாச்சாரத்தை மறைச்சே வச்சுட்டீயே…?” என்று மலர்ந்தார் மினிஸ். “நான் இப்ப என்ன செய்யணும்?” என்று அவர் கேட்ட அடுத்த வினாடியே, அவரை மொத்தமாக ‘கொள்முதல்’ பண்ணிக் கொண்டு கிளம்பினார் கோடம்பாக்கப் பிரமுகர்!

நட்சத்திர ஓட்டலில் இருந்து ஒரு அடையாளம் தெரியாத கெஸ்ட் ஹவுசுக்கு இடம் பெயர்ந்தார்கள். இன்பம் பொங்கும் வெண்ணிலாவையெல்லாம் இடுப்பு சாவி போல, தனது போன் மெமரியில் தொங்க விட்டிருந்த கோடம்பாக்க பிரமுகர், காரிலிருந்தபடியே எல்லாரையும் கரெக்ட் பண்ணிக் கொண்டு வர, இன்னும் கொஞ்ச நேரத்தில் இஞ்சி இடுப்பழகிகளும், மஞ்ச சிவப்பழகிகளும், நம்ம பக்கத்திலா? நினைக்கும் போதே சிரிப்பு சிரிப்பாய் வந்தது மினிஸ்சுக்கு.

சில நிமிஷங்களுக்கு பிறகு நடமாடும் அகல் விளக்குகளும், நாட்டியமாடும் கலர் பல்புகளும் வந்து சேர, அந்த பெரிய ஹாலெங்கும் பேரழகு வழிந்தது. மினிஸ் ஒன்றும் பேரழகன் அல்ல. ஒரு இத்துப்போன இட்லி பானையை மல்லிகை பூவால் அலங்கரித்தால் எப்படியிருக்கும்? அப்படியிருந்தார் அவர்.! காலில் ஒன்று, தோளில் ஒன்றுமாய் தொங்கிக் கொண்டார்கள். எங்கிருந்தோ வந்த இன்னிசையும், இதற்காகவே தருவிக்கப்பட்ட அயல்நாட்டு அமுதங்களுமாக ‘வாழ’ ஆரம்பித்தார் மினிஸ்.

அந்தபுரத்தில் ஆயிரம் நடக்கும். காவலனுக்கென்ன கவலை? மந்தகாச சிரிப்புடன், தன் தொழில் முறை நண்பன், பொறாமைக்காரன் ஒருவனுக்கு போன் போட்டார் கோடம்பாக்க பிரமுகர். “எங்கய்யா இருக்க?” கேள்வியிலேயே மிதப்பு வழிந்தது. எதிர்முனைத் தோழர், “ஏன்? ஏதாவது பிரச்சனையா? வரணும்னா சொல்லு, வர்றேன்” என்று அன்பை கொட்ட, அவர் கொட்டியது அன்பு மட்டுமல்ல, கொடுக்கு நிறைய விஷம் என்பதை அடுத்த ஒரு மணி நேரத்தில் புரிய வைத்தது நிஜம்.

இந்த பிரமுகர் தனது பெருமையை காட்டுவதற்கு இப்படியாக ஆரம்பித்தார். “என்னை என்ன சாதாரண ஆளுன்னு நினைச்சியா?” அண்டை நாட்டு அமைச்சரின் பெயரை சொல்லி, “அவரே என் பாக்கெட்லதான்… தெரியும்ல?” என்றார். “இப்ப கூட இந்த இடத்துல நம்ம கெஸ்ட்டாதான் இருக்கார். அவரு உள்ளயிருக்காரு. நான் வெளியே உட்கார்ந்திருக்கேன். உனக்கு அந்த நாட்ல என்ன வேணும், சொல்லு. முடிச்சுரலாம். அந்த கவருமென்டே நம்ம கையிலதான்” என்றார் பெருமை வழிய. அடுத்தவன் சட்டை வெள்ளையா இருந்தாலே, அதில் காக்காய் எச்சம் போடாதா என்று உச்சியையே பார்த்துக் கொண்டிருக்கிற போட்டியாளர்கள் நிறைஞ்ச உலகம் இது. அப்படியொரு நிறைஞ்ச மனசுக்காரரிடம் இப்படியெல்லாம் பெருமையடித்தால் விடுவாரா?

“ஓ.கே யா… நான் அங்க வர்றேன்” என்று கூறிவிட்டு போனை வைத்தார் தோழர். அடுத்த நிமிஷமே லோக்கல் போலீசுக்கு போன் அடித்து, சம்பந்தப்பட்ட இடத்தின் அட்ரசை புல் ஸ்டாப் விடாமல் போட்டுக் கொடுத்தார். “அந்த இடத்துல பிராஸ்ட்யூஷன் நடக்குது. உடனே போனா புடிச்சுரலாம்” என்று கூறிவிட்டு போனை கட் பண்ணினார். அப்புறமும் சும்மாயிருக்குமா காவல்? அதிரடியாக சென்று இடத்தை வளைத்துவிட்டார்கள்.

“அடப்பாவி… எவனோ தேன் கூட்டுல தீயை வச்சுட்டானே” என்று முதலில் பதறிய பிரமுகர், உள்ளேயிருக்கிறது மினிஸ் ஆச்சே. அதுவும் அதிகாரபூர்வமா வராம ஆஃப் லைன்ல வந்திருக்காரே… இப்ப என்ன பண்ணுறது என்று குழம்பிப் போனார். அதற்குள், “யோவ்… நீ அந்தாளுதானே? உனக்கு இங்க என்ன வேலை” என்றெல்லாம் சுருக்கு போட்டார் காவல் அதிகாரி. உள்ளே பாய்ந்து கதவை தட்டிய இன்னபிற காவலர்கள், முக்கியஸ்தரை ‘முக்கியமான’ நிலையிலேயே வளைத்துப் பிடித்துக் கொண்டு வந்து நிறுத்தியிருந்தார்கள்.

இடுப்பிலிருக்கிற துண்டை இடது கையால் பற்றிக் கொண்டு, கழுத்திலிருக்கிற மல்லிகை பூவையெல்லாம் கையால் தட்டிக் கொண்டிருந்தார் அவர். தொண்டை வரைக்கும் வந்த தன் அந்தஸ்தை, கஷ்டப்பட்டு உள்ளே தள்ளிக் கொண்டிருந்தது அவரது மூளை.

அதுவரை அவரை வலைபோல சூழ்ந்திருந்த பாசம் வச்ச பச்சக்கிளியெல்லாம், பச்சத்தண்ணியில குளிச்ச மாதிரி பதறிப் போய் நிற்க, “அவ்வளவு பேரையும் ஜீப்ல ஏத்து” என்றார் அதிகாரி. அதற்குள், “அவரு யாரு தெரியுமா?” என்று வாயை திறந்தார் பிரமுகர். கண நேரமும் தாமதிக்காமல் வாயிலேயே ஒன்று விழுந்தது. இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டு நின்ற மினிஸ்சை, அவர் மினிஸ் என்று தெரியாமலே கன்னத்தில் ஒன்று போட்டார் அதிகாரி. “நீ என்ன பெரிய பப்பாளியா?” என்ற அடிஷனல் தீச்சொல் வேறு.

ம்ஹூம் இதற்கப்புறமும் தாமதித்தால், இரு நாட்டு உறவு கெடுதோ இல்லையோ? நம்ம உறவு அந்துரும் என்பதை உணர்ந்த கோடம்பாக்க பிரமுகர், “சார்…அவர் இன்னாரு சார் ” என்றார் இரு கைகளை ஒரு சேரக் கூப்பி. சடக்கென்று தொப்பியை சரி செய்து, படக்கென்று ஒரு சல்யூட் அடித்த அதிகாரி, “ஏன் சார்… நீங்களே இப்படி பண்ணலாமா? பெரிய ஸ்டார் ஓட்டலில் தங்க வேண்டியதுதானே? இங்க எதுக்கு வந்தீங்க?” என்றார் சற்று முன் அறை கொடுத்த அந்த கையை துடைத்துக் கொண்டே.

“இல்ல. நான் அந்த ஓட்டல்லதான் ரூம் போட்ருக்கேன். ஒரு சேஃப்டிக்காகதான் இங்க வந்தேன்” என்றார் மினிஸ். “சரி… சரி… வேட்டிய கட்டிகிட்டு கிளம்புங்க சார். உங்களை அங்கேயே கொண்டு போய் விட்டுர்றோம்” என்றார் அதிகாரி.

அதற்குள் போலீசுக்கு போன் போட்டு சொன்ன அந்த நட்பு சூறாவளி, அப்படியே மீடியாவுக்கும் போன் போட்டு விஷயத்தை கசிய விட்டிருந்தார். இரண்டு எறும்புகள் சண்டை போட்டாலே மைக்ரோ லென்ஸ் போட்டு மாநிலம் முழுக்க காட்டி, டிஆர்பி யை ஏற்றிக் கொள்ளும் சேனல்கள், விழுந்தடித்துக் கொண்டு வந்து சேர்ந்தன. “ஐயோ… இதென்ன கொடுமை. இவனுங்ககிட்டயிருந்து வேற மினிஸ்சை காப்பாற்றணுமே?”

மறுபடியும் கெஸ்ட்ஹவுசுக்குள்ளேயே தள்ளிக்கொண்டு போய் ஒரு பீரோவுக்கு பின்னால் ஒளிய விட்டார்கள் அவரை. “ஏண்டா… வெல்லம் திங்க வான்னு கூப்பிட்டுட்டு, இப்படி வேப்பிலைய திணிக்கிறீங்களேடா…” என்று மனசெல்லாம் ஜலம் வச்சுண்டார் மினிஸ்.

ஒண்ணுமில்ல… இங்க கேள்விப்பட்டு வர்றதுக்குள்ள பார்ட்டி மிஸ்சிங். இவங்கதான் சிக்குனாங்க என்று மான்களையும் மயில்களையும் கணக்கு காட்டிவிட்டு மீடியாவை வெளியேற்றியது காவல். எப்படியோ… மினிஸ்சை சொந்த நாட்டுக்கு பிளைட் ஏற்றிவிட்டு நிம்மதியானார் கோடம்பாக்க பிரமுகர்.

‘உள்ளூர் குளத்துல உள் நீச்சல் கூட அடி. அதுவே அசலூர் குளம்னா, கால் கூட நனைக்காதே’ என்கிற பழமொழியை இப்போதெல்லாம் பாக்கெட்டில் வைத்துக் கொண்டே அலைகிறாராம் மினிஸ்!

(ஜனனம் இதழில் ஆர்.எஸ்.அந்தணன் எழுதி வரும் மாலை நேரத்து மயக்கம் தொடரிலிருந்து…)

1 Comment
  1. துரை says

    கலகுரிங்க அந்தனன்,முத்து டச் …..பாராட்டுகள் நகைச்சுவை கலக்கல்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Oru Naal Iravu movie Youtube Links

http://youtu.be/XWhK289BZx4 http://youtu.be/EXJceW34pTk http://youtu.be/Wdhwvwu_e3w http://youtu.be/vrkW7Kse3WQ http://youtu.be/BsLMBE47Edo http://youtu.be/otGN_aApEqk

Close