லிங்கா விஷயத்தில் கள்ளக்கணக்கு? குட்டு உடைந்த அதிர்ச்சியில் விநியோகஸ்தர்கள்
லிங்கா வசூல் நிலவரம் பற்றி தனியாக துப்பறியும் இலாகாவை வைத்து உண்மை அறிந்தால்தான் உண்டு போலிருக்கிறது. மிளகாய் அரைக்க ஒரு நல்ல தலை கிடைச்சுதுடா… என்கிற அளவுக்கு வெறி கொண்டு கிளம்பிய விநியோகஸ்தர் வட்டாரம், ரஜினியின் தலையை தடவ கிளம்பி வந்ததை நாடே அறியும். கூட்டி கழிச்சு கணக்கு போட்டாலும் உதைக்குதே… உதைக்குதே… என்று ரஜினி ரசிகர்களும், பொதுவான கணக்காளர்களும் கூறிக் கொண்டிருக்க, பத்து கோடி போச்சே… பதினாலு கோடி போச்சே என்று எழுந்த கூக்குரல் இன்னும் அடங்கியபாடில்லை. சரி… உங்க கணக்கு வழக்குதான் என்ன? கொடுங்கப்பா என்று வாங்கிய லிங்கா வட்டாரத்திற்கு பலத்த அதிர்ச்சியாம்.
ரிலீசுக்கு முதல் நாளே இரவு 1 மணி ஷோ தமிழகம் முழுக்க அரங்கேறியிருக்கிறது. இதில் விற்கப்பட்ட டிக்கெட்டுகளின் ரேட் நாம் சொல்ல தேவையில்லை. போனவர்களுக்கு புரிந்திருக்கும். கேள்விப்பட்டவர்களும் வியந்திருப்பார்கள். விநியோகஸ்தர்கள் காட்டிய கணக்கில் இந்த ஷோவையே மறைத்துவிட்டார்களாம். அது மட்டுமல்ல, 300, 400 க்கு விற்கப்பட்ட டிக்கெட்டுகளின் ரேட்டை கூட, வெறும் 100 ரூபாய் என்றுதான் கணக்கு காட்டியிருக்கிறார்களாம். அட… இதென்னப்பா போங்கு ஆட்டம் என்று அதிர்ச்சியாகி கிடக்கிறது வேந்தர் மூவிஸ்.
அப்படியே இன்னொரு தர்மசங்கடம். ‘அவ்வளவுதான் லிங்கா. ஓடி முடிச்சாச்சு’ என்று கணக்கு போட்ட தியேட்டர்காரர்களுக்கு இன்ப அதிர்ச்சி. கடந்த வியாழன் வெள்ளி சனி ஞாயிற்று கிழமைகளில் மீண்டும் கூட்டம் ஏற ஆரம்பித்துவிட்டதாம். படம் தேறாது என்று நம்….ம்பி. வேறு படங்களை திரையிட முடிவெடுத்தவர்கள், இப்போது கிறிஸ்துமஸ் லீவு வருகிற இந்த நேரத்தில் லிங்காவை எடுக்க வேண்டுமா? என்று குழம்பி போயிருப்பதாகவும் தகவல்.
இருந்தாலும், கால்குலேட்டரையே கன்பியூஸ் ஆக வைச்சு, ரஜினியிடம் இருந்து கறக்காமல் விட மாட்டார்கள். அது வேறு விஷயம். ஆனால் பொய்யின் பாசாங்கு ஆட்டத்திற்கு இன்னும் எத்தனை நாளைக்குதான் உண்மை உதறலெடுத்து ஆடுமோ?