கணவன் மனைவி சண்டையா? இதை கொஞ்சம் பாருங்க…

காதலின் நிலைகளை அலசும் குறும்படம் ‘மேஜிக்’

குறும்பட உலகத்திலிருந்து பெரும்பட உலகமான திரையுலகத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம் .எனவே குறும்படங்களை வெறும் படங்கள் என்று ஒதுக்கி விடமுடியாது .அவை மீதும் இப்போது கவனம் குவிந்து வருகிறது.
அவ்வப் போது வெளியாகும் சிலகுறும்படங்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன; கவன ஈர்ப்பையும் பெறுகின்றன.

அப்படி ஒரு குறும்படமாக உருவாகியுள்ளதுதான் ‘மேஜிக்’ இது முழுக்க ஒரு காதல் கதைதான்.

இயக்கியிருப்பவர் டி.விஜயசுந்தர்.இவர் ஏற்கெனவே ‘யூ-ஏ.’ ‘ஒபாமா’ போன்ற குறும்படங்களை இயக்கியவர் .விஜே சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பி.ஹேமந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். விக்னேஷ் ,ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்துள்ளனர். ஷரன் சூர்யா இசையமைத்துள்ளார். இவர் இசையமைத்துள்ள 90வது குறும்படம் இது. ஸ்பெஷல் எபெக்ட்ஸ் மோசஸ்.

பாலாஹாசன் நாயகனாக நடித்துள்ளார். திவ்யா பானுச்சந்திரன் நாயகி. இவர் ‘ஜி’ தமிழ் டிவியில் ‘கொஞ்சம் காபி நிறைய சினிமா’ நிகழ்ச்சித் தொகுப்பாளர். இவர்கள் தவிர வேறு சில பாத்திரங்களும் உண்டு.அவர்களையும் சுற்றிச் சுழல்கிறது கதை.

அப்படி என்னதான் கதை?

அவனுக்கு ஒரு கனவு வருகிறது.

அவர்கள் உருகி உருகி காதலிக்கிறார்கள்.அவர்களுக்குள் பிரிவு வரச் சாத்தியமே இல்லை.அந்த அளவுக்கு அன்பும் அனுசரணையும் நிரம்பி வழிகிறது.உலகில் மகிழ்ச்சியானவனாக அவன் தன்னை உணர்கிறான்.அவர்களுக்குள் கோபமோ ஈகோவோ இல்லை.அப்படிப்பட்ட அந்தக்காதலிக்கு திருமணம் நிச்சயமாகிறது.அவளின் சூழல் புரிகிறது.மனதில் எல்லாவற்றையும் புதைத்துக்கொண்டு எங்கிருந்தாலும் வாழ்க என்கிறான்.விழித்துக்கொள்கிறான்.

அவளுக்கும் ஒரு கனவு வருகிறது.

உள்ளம் உருகித்தும்பும்  நேசம் நிரம்பி வழியும் அப்படி ஒரு காதலுடன் உள்ளார்கள்.மதிப்பதும் மன்னிப்பதும்தான் வாழ்க்கை என்றிருக்கிறார்கள்.விழித்துக் கொள்கிறாள்.

நிஜத்தில் நினைவு நிலையில் கணவன் மனைவி இருக்கிறார்கள்

.அவர்கள் காதலித்து மணம் செய்தவர்கள்.ஆனாலும் நாளொரு பிணக்கு, பொழுதொரு சண்டை என இருக்கிறார்கள்.எதற்கெடுத்தாலும் ஈகோ தலைதூக்கி சண்டையில் முடியும் சூழல் வந்துகொண்டே இருக்கிறது.

வந்த கனவு அவர்களைப் புரட்டிப்போடுகிறது.சில கனவுக்காட்சிகள் நிஜத்தில் நடக்கின்றன.நாம் ஏன் இப்படி இருக்கிறோம் ? கனவு போலவே வாழ்க்கை மாறி வராதா? எனக்கேள்விகள்..! முடிவு என்ன என்பதே க்ளைமாக்ஸ்.

காதலை இப்படத்தில் மாறுபட்ட கோணத்தில் கையாண்டுள்ளார் இயக்குநர். காதலின் பல நிலைகளை இதில் காட்டியுள்ளார்.கனவுக்கும் நனவுக்குமான உளவியல் தொடர்பை அழகாகக் கூறியுள்ளார். இது ஒரு மாறுபட்ட முயற்சிதான்.

காட்சிகளை அழகுணர்ச்சியோடும் நேர்த்தியோடும் எடுத்துள்ளார் ஒளிப்பதிவு செய்துள்ள பி.ஹேமந்த்  . மென்பொருள் உலகப் பின்னணியில் இது சென்னையில் நடக்கும் கதை.

பாலாஹாசன் நாயகனாக நடித்துள்ளார். திவ்யா பானுச்சந்திரன் நாயகி.இருவருமே  பாத்திரத்துக்கேற்ற முகங்கள்.நாயகனும் நாயகியும் 4விதமான தோற்றங்களில் வருகிறார்கள். விறுவிறுப்பான திரைக்கதையில் விழும் எல்லா முடிச்சுகளும் க்ளைமாக்ஸில்தான் அவிழ்கின்றன. .

ஒரு முழுநீள சினிமாவின் வீரியத்தோடு  50 நிமிடத்தில் குறும் படமாக்கியுள்ளனர்.  ‘யாரோ இவள்? யாரோ இவள்? உயிரோரம் வழிந்தோடும் பனிக்கூழோ இவள் ?காலைவரை எந்தன் மனம் பாலைவனம் ‘ என்கிற ஒரு பாடலும் உள்ளது. எழுதியுள்ளவர் கார்த்திக்.அந்த ஒரு பாடலும் ஒரு திரைப்படப்பாடலுக்கான முழு தகுதியோடு உள்ளது. இயக்குநர் உதவியாளர்கள் என்று இந்த படக்குழுவில் பலரும் பொறியியல் பட்டதாரிகள்.

அட..! படித்தவர்கள் கையில் சினிமா போய்க்கொண்டிருப்பதன் அறிகுறி இது.

குறும்படம் தங்கள் திரைப்படக்கனவுக்கான ஒரு படிக்கட்டு என்கிற  என்கிற  வகையில் இதை உருவாக்கியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சூர்யா, ஹன்சிகா படங்கள்! வலை போட்ட ஈராஸ்!

படம் எடுப்பதென்பது பத்து மீட்டர் ஓட்டப் பந்தயம்தான். ஆனால் எடுத்த படத்தை ரிலீஸ் செய்யுற வேலை இருக்குல்ல? அதுதான் ஆயிரம் மீட்டர் ஓட்டம்! முழு ரவுண்டையும் முடிப்பதற்குள்...

Close