கடனுக்கு போன கார்… பைக்கில் சுற்றும் பிரபலம்? இதுதான்டா சினிமா!
‘அகல கால் வைச்சா அண்ட்ராயரில் தையல் விடும்’ என்பது அனுபவ மொழி! இது புரியாத சிலர்தான் கால் கிரவுண்ட் நிலத்தில் காஸ்மோபாலிட்டன் கிளப் கட்டலாமா என்று யோசிப்பார்கள். கிட்டதட்ட அப்படியொரு அகலமான திட்டத்தோடு செயலில் இறங்கிய இயக்குனர் அவர்.
ஒரே நேரத்தில் மூன்று படங்களை தயாரித்து அவற்றை இயக்கியும் வருகிறார். எல்லாமே முழுசாக முடியாமல் கிடக்கிறது. அதுபோக படத்தில் பணியாற்றிய பலருக்கும் சம்பள பாக்கி. முன்னணி ஹீரோக்களை வைத்து அப்படங்களை தயாரித்திருந்தாலும், எதையாவது ஒன்றை முடித்தால்தானே பணம் ரொட்டேஷன் ஆகும்? நாலாபுறத்திலும் நசுங்கிக் கொண்டிருக்கும் அவருக்கு, கடந்த வாரம் கடும் சோதனை.
தவணை வாங்கிய அவரது சொகுசுக் காரை பைனான்ஸ் காரர் பறிமுதல் செய்துவிட்டாராம். இத்தனைக்கும் அவரிடம் இன்னொரு கார் இருக்கிறது. சொல்லி வைத்தாற் போல அதையும் ஜப்தி செய்துவிட்டார்கள். என்னதான் செய்வார் பாவம்?
பைக்தான் அவரது பயணத்திற்கு உறுதுணையாக இருக்கிறது இப்போதெல்லாம்! தலையில் ஹெல்மெட் அணிந்தபடி முக்கிய இடங்களுக்கு வருகிறார். முதலில் யாரோ என்று நினைக்கும் பலரும், அவர் ஹெல்மெட்டை கழட்டியதும் அச்சச்சோ ஆகிவிடுகிறார்கள்.
காதோர நரை, கம்பீர லுக், மிலிட்டரி முறைப்பு என்று எல்லாவகையிலும் அட்ராக்ஷன் பண்ணி வந்த இவருக்கு, இப்படியொரு சோதனையா என்று நினைத்த நண்பர்கள், என் காரை யூஸ் பண்ணுங்க என்று கார் சாவியை நீட்டினாலும், நோ தேங்க்ஸ் என்று கூறி விடுகிறாராம். ஏன்? வைராக்கியம் இருந்தால்தான் வெல்ல முடியும் என்பதால்.
மீண்டு வாங்க மிலிட்டரி மேன்!