போகாதீங்க போகாதீங்க விருது ஏரியாவில் ஒரு வெட்டி பட்டினி?

உள்ளூர்ல கிடைச்சா வெறும் குடை, அதுவே வெளிநாட்ல வாங்குனா வெண்கொற்றக் குடை என்கிற நினைப்பு பல முன்னணி ஹீரோக்களுக்கும் இயக்குனர்களுக்கும் இருக்கு. அதிலும் அந்த நினைப்பு இயக்குனர்களுக்கு சற்று அதிகமாகவே இருக்கு. ‘நீங்கள் சந்திக்க விரும்பும் ஹீரோ செம கடுப்பில் இருப்பதால், முணு, நாலு வருசம் கழிச்சு தொடர்பு கொள்ளவும்’ என்று மூக்கின் மீது அறிவிப்பு பலகையை தொங்கவிட்டுக் கொள்ளும் அநேக ஹீரோக்களுக்கு ஒரு ஐஎஸ்டி கால் மட்டும் வரட்டுமே, வதனமே சந்திர பிம்பமாகிவிடுவார்கள். பேன் சீப்பு வாங்கினா கூட அது வெளிநாட்ல வாங்குறதுதான் விசேஷம்னு நினைக்கிற இந்த சீப்பான போக்கு, வயிற்றுப்போக்கை விடவும் மோசமானது! இந்த சிக்கலான அனுபவத்தை அந்த நாட்டுக்கு நேரே சென்று விருது வாங்கி வரும் அத்ததனை விஐபிகளும் ‘அனுபவித்து’ வருவதால், உள்ளூர் விருதே உசத்தி என்கிற சிந்தனை வருடா வருடம் வளர்ந்து வருகிறது கோடம்பாக்கத்தில்.

எந்த நாடுவே அது? என்றுதானே கேட்கிறீர்கள்? டார்வே என்றொரு புலம்பெயர்ந்த தமிழர்களின் பூமிதான் அது. (மேப்பை பிரிச்சு போட்டு அந்த நாடு எங்கயிருக்கு என்று மேய வேண்டாம். நீங்கள் தேடிய கறை? தேடினாலும் கிடைக்காது. ஏன்னா நான்தான் பெயரை மாத்திட்டேனே?) ஒரு இலங்கை தமிழர்தான் இதை சில வருடங்களாக நடத்தி வருகிறார்.

யார் விருது கொடுத்தாலும் கொடுப்பவர் யார்? கொடுக்கப்படும் நிறுவனத்தின் தகுதி என்ன? பாரம்பரியம் என்ன? என்று எதையுமே அலசாமல், ‘பச்சை பசேல்னு இருக்கு. யோசிக்காதே… மேய்ஞ்சுடு’ அவசரத்தோடுதான் அணுகுகிறது நட்சத்திர கூட்டம். போக வர இலவச டிக்கெட். அடுத்தவர் பணத்தில் ஊர் சுற்றி பார்த்தல் என்பதையெல்லாம் தாண்டி, எனக்கு அந்த நாடே வரவழைச்சு விருது கொடுத்துருக்கு பார்த்தியா? என்று பெருமை பீற்றிக் கொள்ளும் மனசுதான் இந்த அவசரத்திற்கு காரணம்.

இப்படியெல்லாம் விழுந்தடித்துக் கொண்டு ஓடுகிற இந்த கன்னுக்குட்டிகளுக்கு மடிப்பால் அல்ல, துளிப்பால் கூட கொடுக்காமல் பசியும் பட்டினியுமாக அனுப்பி வைக்கும் விழா ஏற்பாட்டாளர்கள், அடுத்த முறை வேறொரு கன்னுக்குட்டிக்கு மடிப்பால் ஆசை காட்டுவதும், கன்னுக்குட்டிகள் பின்னாலேயே ஓடுவதுமாக வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் விருது விழாவை. ‘அதென்ன விழாவா? இல்ல கார்ப்பரேஷன் குழாவா? இவ்வளவு வறட்சியா இருக்கே’ என்று போய் வந்தவர்கள் ஃபீல் பண்ணினாலும், வெளியே சொன்னா வெட்கக் கேடு என்று அமுக்கியே வாசிப்பதுதான் ‘அட போங்கப்பா’ சமாச்சாரம்.

மிஷ்கின், பாலா, லிங்குசாமி, மற்றும் நடிகர்களில் விஜய்சேதுபதி, ஆர்யாவெல்லாம் போய்வந்த விருது விழாதான்!! ஆனால் போனவர்கள் தங்கள் அனுபவத்தை சொல்லி அலாரத்தை அடித்தால்தானே பின்னலேயே டூர் கிளம்புகிற புண்ணியவான்களுக்கு விபரம் புரியும்? ஆனால் ஏனோ எல்லாரும் கப்சிப்!

இந்த நேரத்தில் இன்னொரு சோகத்தையும் சொல்லியே ஆக வேண்டும். அப்படி சொல்லும்போதுதான் நம்ம ஊர் விருதுகளை இவர்கள் எந்தளவுக்கு அலட்சியப்படுத்துகிறார்கள் என்பதே புரியும். தமிழில் வெளிவரும் பாரம்பரிய பத்திரிகை ஒன்று வருடா வருடம் விருதுகள் கொடுக்கிறது. இந்த விருதுகளை அறிவிக்கும்போது சந்தோஷப்படும் கலைஞர்கள் யாரும், ‘உங்க ஆபிசுக்கு நானே நேர்ல வந்து வாங்கிக்கிறேன். அதுதான் மரியாதை’ என்று சொல்வதேயில்லை. விருது கொடுக்கணும் என்று தன்னை அணுகும் பத்திரிகை நிர்வாகத்திடம், ‘ஷுட்டிங்ல பிசியா இருக்கேன். உங்க நிருபரிடம் கொடுத்து விட்ருங்களேன்’ என்கிறார்கள். ஷுட்டிங்குக்கு வழியில்லாத வேலையில்லா படைப்பாளிகள் கூட, ‘டிஸ்கஷன்ல இருக்கேன்’ என்று சமாளிக்கிறார்கள். அப்படி போகும் நிருபர்களையும் சில நேரங்களில் கால் கடுக்க நிற்க வைத்து, பின்புதான் அந்த விருதை பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அப்போது எடுக்கப்படும் போட்டோவில் மட்டும், ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா?’ லுக் இருக்கும் அவர்களிடம்.

சரி.. நாம் ஆரம்பித்த டார்வே விஷயத்திற்கு வருவோம்.

இந்த வருடம் போட்டியில் கலந்து கொள்ளும் படங்கள் என்று இவர்கள் அறிவிக்கும் கோதா என்ன? வென்றவர்கள் விபரம் என்று லிஸ்ட் போடும் லாவகம் என்ன? அடேயப்பா… விஜய் டி.வி அவார்ட்ஸ்சையெல்லாம் மிஞ்சுகிற அளவுக்கு இருக்கும். கடந்த வருடம் அப்படி தேர்வு செய்யப்பட்டவர்களில் ஒரு பாடலாசிரியரும் இருந்தார். நல்லவேளை… அவரை டார்வே அழைத்தபோது ‘இருங்க… ரெண்டு நாள்ல சொல்றேன்’ என்று பதிலளித்துவிட்டு, இதற்கு முன் போய் (வெ)வந்தவர்களுக்கு போன் போட்டார். ‘அண்ணே… டார்வேயிலிருந்து பத்து முறை போன் அடிச்சிட்டாங்க. நம்பி போவலாமாண்ணே…’ என்றார் தனக்கு நெருக்கமான இயக்குனரிடம்.

ஒரு நிமிஷத்தில் முருகன் மயிலேறி அறுபடை வீட்டை சுற்றி வந்த மாதிரி, நினைவுகளை ரிவர்சில் ஓட்டினார் இயக்குனர். ‘தம்பி… போயிராதீங்க. பட்டினி போட்டே கொன்னுடுவானுங்க. வண்டலூர் பூங்காவுல சிக்குன வனவிலங்கு மாதிரி ஆகிருவீங்க. பார்த்துக்கங்க’ என்றார் திகில் விலகாமல். அப்படியே நாலைந்து பேரிடம் விசாரணையை போட்ட பாடலாசிரியர், போனை கீழே வைக்கும்போது, மிஷ்கின் நடித்த நாலு படத்தை ஒரே நேரத்தில் பார்த்த பீலிங்ஸ்சுக்கு வந்திருந்தார். அதற்கப்புறம் டார்வேயிலிருந்து போன் வந்தபோது, நிஜமாகவே இவருக்கு அண்டீசன்ட் லெவல் டிசன்ட்ரி. எல்லாம் அண்ணன்மார்கள் சொன்ன ‘பணய’கட்டுரையால் வந்ததுதான்.

போக வர டிக்கெட் செலவே சுமார் ஒரு லட்சத்தை நெருங்குகிறது. இந்த செலவை கம்பெனியே ஏற்றுக் கொள்ளும். ஆனால் ஒரு கண்டிஷன்ஸ் அப்ளை! நாலு பேருக்கு தெரிஞ்ச முகமாக இருக்கும் பேமஸ் பிரமுகர்களுக்குதான் இந்த சலுகை. இல்லாதவர்கள் அவரவர் சொந்த காசில்தான் வர வேண்டும். ‘தங்குகிற செலவு, சாப்பாட்டு (?) செலவு மட்டும் எங்கள் பொறுப்பு’ என்கிறார்கள் இந்த ‘சுமார்’ அந்தஸ்தர்களிடம்.. இதில் பெரும்பாலும் சிக்கி சீரழிவது, அந்தந்த வருட அறிமுகங்களும் அதட்டல் உருட்டல் தெரியாத அப்பாவி இயக்குனர்களும்தான்.

‘காதல்’ என்ற வார்த்தைக்கே தனி அந்தஸ்து கொடுத்த அந்த மென்மையான இயக்குனர் கூட ஒருமுறை போயிருந்தார் அங்கே. இவருடன் பறவையின் பெயரில் வெற்றிப்படம் தந்த இயக்குனர் ஒருவரும் சென்றிருந்தார். நான்கு நாட்கள் தங்கியிருப்பதாக ஏற்பாடு. டார்வே போயிறங்கிய இவர்களை சிட்டியை விட்டு சுமார் ஐம்பது கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் ஒரு ஓட்டலுக்கு கொண்டு சென்றது விருது குழு. சென்னையில் விழா என்றால், செங்கல்பட்டில் தங்க வைத்தால் எப்படியிருக்கும். திருவல்லிக்கேணி குறுக்கு சந்துகளில் இறக்கிவிடப்பட்ட சின்னாளப்பட்டி ஆசாமி மாதிரி, தலை கிறுகிறுத்துப் போனது இவர்களுக்கு. ‘வண்டி இவ்ளோ தூரம் போவுதேய்யா…’ என்றானார்கள் முதல் நாளே.

அட… வாடகை சீப்பா இருக்கும் போலிருக்கு. விடுங்க. படுக்க, சாப்பிட, ஓய்வெடுக்க ஒரு இடம் தேவை. இருந்துட்டு போவட்டுமே என்ற மனநிலைக்கு வந்திருந்தார்கள். ஐம்பது கிலோ மீட்டர் கூட ஒரு பொருட்டல்ல. அதற்கப்புறம் வந்ததய்யா ஒரு இருட்டும் இக்கட்டும்! ‘ரூம்லேர்ந்து யார் போன் பண்ணி எது ஆர்டர் பண்ணினாலும் பணம் வாங்கிட்டு கொடுங்க. இல்லேன்னா கொடுக்காதீங்க’ என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டது அந்த பொல்லாத ‘விருந்தினர் பாதுகாப்பு குழு’.

மரத்தடி வடைன்னா ஒரு ரேட்டு. மாடி ஓட்டல் வடைன்னா ஒரு ரேட்டு. ஆனந்த பவன்னா ஒரு ரேட்டு, அடையார் கேட்டுன்னா ஒரு ரேட்டுன்னு ஒரு ஓட்டை வடைக்கே அவ்வளவு ரேட் பிக்சிங் இருக்கும் போ-து, டார்வே நாட்டிலிருக்கும் ஒரு நடுத்தர ஓட்டலில் இண்டியன் தோசைக்கோ, இண்டியன் சப்பாத்திக்கோ இருக்காதா என்ன? அங்குள்ள விலைப்பட்டியலை அறிவதற்கு முன் ஒருமுறை நெஞ்சை பிடித்துக் கொண்டு வாசியுங்கள் மக்களே… ஒரு தோசை நம்ம ஊர் பணத்திற்கு இரண்டாயிரம் ரூபாய். ஆர்டர் பண்ணியவர்களிட்ம் இந்த டேரிப் நீட்டப்பட, அதிலிருக்கும் விலையை பார்த்தவர்கள், குப்புறடித்து படுத்துக் கொண்டார்கள். ‘போன் அடிச்சு என்னன்னு கேளுய்யா… இவ்ளோ தொலைவு கூப்பிட்டு வந்து வவுத்துல ஈர துணிய போட்டுருவானுங்க போலிருக்கே’ என்று மிரண்டவர்களுக்கு, கூலாக பதில் வந்தது அவர்களிடமிருந்து.

‘எதுக்கும் கவலைப்படாதீங்க. நாங்களே சாப்பாடு எடுத்துகிட்டு வர்றோம். அதுவரைக்கும் பசி பொறுத்துக்கங்க’ என்று!

சொன்ன மாதிரியே வந்தார்கள். அதுவும் உணவு பொட்டலத்தோடு. ஆளுக்கு இரண்டு இட்லி. ஒரு ஸ்பூனில் பொங்கல் என்று கால்வயிற்று சாப்பாட்டோடு காலை வணக்கம் முடிந்தது. ‘காசு வேணும்னா கூட வாங்கிக்கங்கய்யா… நானெல்லாம் பசி தாங்க மாட்டேன். இன்னும் ரெண்டு தோசையோ, இட்லியோ வச்சுட்டு போங்க’ என்று கேட்ட பறவை இயக்குனருக்கு, ‘ஸாரி சார். அவ்ளோதான் வீட்லேந்து கொண்டு வந்தோம். மதியம் வரைக்கும் வயித்த இறுக்கி புடிச்சுங்கங்க. லஞ்ச்ல சேர்த்து கவனிச்சுர்றோம்’ என்று கூறிவிட்டு கிளம்பியது விருந்தினர் பாதுகாப்பு குழு. ‘இடும்பைகூர் என் வயிறே உன்னோடு வாழ்தல் அரிது’ என்றெல்லாம் ஔவையாரின் சித்தாந்தம் பேசுகிற நேரம் இதுவல்ல.

உடனடியாக பல்லாயிரம் செலவு பண்ணி வயிறார டிபன் சாப்பிடும் திட்டத்துக்கு வந்திருந்தார்கள். ஆனால் எதுவும் வாயில் வைக்கிற ரகமில்லை. பேர்தான் இண்டியன் புட். சுவையெல்லாம் எந்த கண்ட்ரிக்கும் ஏற்றதல்ல என்பதை போலவே இருக்க, ‘ஊருவிட்டு ஊரு வந்து இப்படி நாக்கு செத்து போனோமய்யா’ ஆகியிருந்தார்கள். மதியம் வந்த உணவும் கிட்டதட்ட அரை கரண்டி, கால் கரண்டி திட்டத்தில்தான் இருந்தது.

அந்த நேரத்தில் உதவிக்கு வந்து எல்லாருடைய பசியையும் பிரதிபலன் இல்லாமல் ஆற்றிய இளைஞர் ஒருவரை பின்னாளில் தமிழ்நாட்டுக்கே வரவழைத்து தன் படத்தில் வெயிட்டான ரோல் கொடுத்தார் அந்த டைரக்டர். அப்படியென்றால் புரிந்து கொள்ள வேண்டியதுதான், அந்த மொழி தெரியாத தேசத்தில் அவர் முழி பிதுங்கிய அவஸ்தையை!

சரி… விடுங்கய்யா. ஒரு கலைஞன் பசி மறக்குற இடம் ஒண்ணு இருக்கு. அதுதான் ஜனங்களின் கைத்தட்டல். திரண்டிருக்கிற பல்லாயிரக்கணக்கான சொந்தங்களையும் அவங்களோட கைத்தட்டல்களையும் காதார கேட்டு கண்ணார பார்த்தா போதும். பசியாவது ஒண்ணாவது என்று சமாதானப்படுத்திக் கொண்டு அந்த இனிய மாலைக்காக காத்திருந்தது கலைஞர்கள் மனசு. டாண் என்று சொன்ன நேரத்தில் வண்டி வந்து இவர்களை ஏற்றிக் கொண்டு கிளம்ப, மீண்டும் ஐம்பது கிலோ மீட்டர் தூர வீல் பயணம்.

காலை வைத்தால் ஐஸ் கட்டியில் வைக்கிறளவுக்கு குளிர். நல்லவேளையாக எல்லாரும் கோட், சூட் சகிதம் இருந்தார்கள். மிகுந்த சந்தோஷத்தோடு அரங்கத்திற்குள் நுழைந்தால், அட சப்…! கூட்டமா எண்ணினாலும் நூறை தாண்டாது. தனித்தனியா எண்ணினாலும் தொண்ணூறை தாண்டாது. ‘இந்த கைத்தட்டல்களுக்கா இவ்வளவு தொலைவு வந்தோம்?’ என்று கிறுகிறுத்துப்போனது மனசு.

எப்படியோ விழா முடிந்து அறைக்கு திரும்பியவர்களுக்கு விழா நடக்கும் வரை இருந்த மரியாதை கூட இல்லை. கொஞ்சம் கொஞ்சம் வந்து கொண்டிருந்த குழாய் தண்ணீரும் சொட்டு சொட்டாகதான் வந்தது. அதற்கப்புறம் சொந்த பணத்திலேயே பசியாறியவர்களுக்கு, பிளைட் கிளம்புகிற நேரம் வரைக்கும் டென்ஷன். அறை வாடகையை கொடுத்தால்தான் அனுப்புவேன் என்று ஓட்டல்காரன் சொல்ல, பிளைட்டுக்கு நேரமாச்சே… ஏர் போர்ட் போகவே ஒன்றரை மணி நேரம் ஆகுமே என்று இவர்கள் பதற, இந்த டைரக்டர்கள் எடுத்த படத்தில் வரும் க்ளைமாக்ஸ் பரபரப்பை விட அதிக பரபரப்பை ஏற்படுத்திய நேரம் அது.

எப்படியோ தப்பித்து பிளைட் பிடித்து சென்னை வந்து சேர்ந்தார்கள். ஏழு கடல் தாண்டி கிளி றெக்கையில் உசுரு இருக்கு என்று பார்க்கப் போனால், அங்கு என்ன உசிரா இருந்தது? ம்க்கூம்….!

(குமுதம் ரிப்போர்ட்டரில் ஆர்.எஸ்.அந்தணன் எழுதி வரும் ‘கோடம்பாக்கம் செக்போஸ்ட்’ தொடரிலிருந்து)

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஏ.ஆர்.ரஹ்மான் மாதிரி என்னால முடியாது! யுவன்ஷங்கர் ராஜா அமர்க்களமான பதில்

தள்ளி தள்ளிப்போன நெல்லை அமர்க்களம் மே மாதம் நடந்துவிடும் போலிருக்கிறது. யுவன்சங்கர் ராஜா இசை நிகழ்ச்சி திருநெல்வேலியில் நடப்பதாக சில முறை சொல்லி அது கடைசி நேரத்தில்...

Close