வேணும்னா இன்னொரு படம் பண்ணுவோமா? வடிவேலுவின் செத்து செத்து விளையாடலாமா விளையாட்டு!

எலிக்காய்ச்சலுக்கு புளிக்காய்ச்சல்தான் சிறந்த மருந்து என்று சித்த வைத்தியனும் சொல்ல மாட்டான். செத்த வைத்தியனும் சொல்லியிருக்க மாட்டான். ஆனால் எலி ஹீரோ வடிவேலுவின் வைத்தியம், கேட்ட மாத்திரத்திலேயே கிலி பிடிக்க வைத்திருக்கிறது தயாரிப்பாளர் சதீஷ்குமாரை. ஏற்கனவே எலி படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தாலும், கடன் தொல்லையாலும், கடன் காரர்களின் மிரட்டலாலும் மனம் நொந்திருக்கும் அவரிடம் போய், “இன்னொரு படம் பண்ணலாம் வாங்க. கால்ஷீட் ப்ப்ப்பிரியா தர்றேன்” என்றால் எப்படியிருக்கும்?

வடிவேலுவின் இந்த செத்து செத்து விளையாடலாமா? பதிலால் பேரதிர்ச்சிக்கு ஆளாகிவிட்டார் அவர். நேற்று கமிஷனர் அலுவலகத்தில் வடிவேலு மீது புகார் கொடுத்துவிட்டு வந்தாரால்லவா? அதற்கு உடனே விளக்கம் கொடுத்திருக்கிறார் வடிவேலு. அதில்தான் இப்படி…

வடிவேலு எப்போது ஹீரோவாக நடித்தாரோ, அன்றிலிருந்தே அவரது டப்பா மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களின் டப்பாவும் டான்ஸ் ஆடி வருகிறது. இம்சை அரசன் படத்திற்கு பிறகு அவர் ஹீரோவாக நடித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன், தெனாலிராமன், எலி ஆகிய மூன்று படங்களுமே செம்ம பேக்கப்! இருந்தாலும் அதை ஒருபோதும் ஒப்புக் கொள்ள அவரது ஈகோ தயாராக இல்லை. எலி படத்தை பற்றி நியாயமான விமர்சனம் எழுதியவர்களை கூட, ‘‘அவனுங்க எல்லாம் பிரஸ்சே இல்ல. டூபாக்கூருங்க… சிரிக்க தெரியாதவனெல்லாம் விமர்சனம் எழுத வந்துட்டானுக…” என்று பொத்தாம் பொதுவில் விமர்சனம் செய்திருந்தார் வடிவேலு.

அவருக்கான இடம் அப்படியே இருக்கிறது. அது யாராலும் நிரப்பப்படாமலிருந்தாலும், மீண்டும் அதில் பொருந்துவதற்கு வடிவேலுவுக்கே பொருத்தம் இல்லாத சூழ்நிலை நிலவிவருகிறது. வடிவேலு பெயரை சொன்னாலும் இனி பைனான்ஸ் கிடைக்காது. விநியோகஸ்தர்களோ, தியேட்டர்காரர்களோ வடிவேலு படம் என்றாலே, ‘ஊருக்கு போயிட்டு ஒரு வருஷம் கழிச்சு வர்றேன்’ என்று ஓடுகிற அளவுக்குதான் இருக்கிறது யதார்த்தம். இந்த நிலைமையில், “நான் ப்ரீயா கால்ஷீட் தர்றேன். என்னை வச்சு இன்னொரு படம் பண்ணிக்கோ” என்று வடிவேலு கூறுகிற பதிலால் ஒரு மண்ணாங்கட்டியும் நடக்கப் போவதில்லை.

எலிக் காய்ச்சலுக்கு எலிதான் சிறந்த மருந்து. பொறியில தள்ளிட்டு பொருளை அள்ளிட்டு வாங்கப்பா!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அழுக்கை அழகாக காட்டுகிறார் சுசீந்திரன் – வைரமுத்து வர்ணனை

வில் அம்பு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. ஸ்ரீ மற்றும் ஹரிஷ் கல்யான் கதையின் நாயகர்களாகவும் ஸ்ருஷ்டி டாங்கே ,  சம்ஸ்கிரிதி ஷெனாய் ஆகியோர்...

Close