சினிமாவுக்கு முழுக்கு? கானா பாலா முடிவு!
அட்டக்கத்தி படத்திலிருந்துதான் அப்படியொரு குரல் இருப்பதை கண்டு கொண்டது திரையுலகம். அதை தேடிக் கொண்டு வந்த டைரக்டர் ரஞ்சித்துக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழ் திரையுலகத்திற்கே உழைத்து உழைத்து ஓடாகிவிட்டார் கானா பாலா. எந்த படத்தை பார்த்தாலும், அதில் கானா பாலாவின் பாடல் இருக்கும். செட் பிராப்பர்ட்டி போல தவிர்க்க முடியாத நபரானார் அவர். ஒரு கட்டத்தில் குரலோடு ஆளையும் சேர்த்து அமுக்கிக் கொண்டு வந்து ஸ்கிரினில் நடக்க விட்டார்கள். பாட விட்டார்கள். ஆட விட்டார்கள். ஓவராக ஊறுகாயை தின்றதை போல, ஒரு கட்டத்தில் புளிச் ஆனது ரசிகர்கள் மனசு. சட்டென உஷாராகிவிட்டார் மனுஷன். அதனால்தான் இப்படியொரு அறிவிப்பு.
ஆனால் அதற்கு அவர் சொன்ன காரணம் வேறு. சார்… நான் எங்கேயோ இருந்தேன். ரஞ்சித்தண்ணே என்னை அழைச்சுட்டு வந்து பாட வச்சாரு. 75 பாட்டு எழுதியிருக்கேன். 300 பாட்டு பாடியிருக்கேன். நிறைய சம்பாதிச்சு நிம்மதியா இருக்கேன். என்னை எங்கே பார்த்தாலும் ரசிகர்கள் சூழ்ந்துக்கிற அளவுக்கு புகழோடு இருக்கேன். போதும் இந்த சந்தோஷம். என்னை மாதிரி எனக்கு பின்னால் இன்னும் நிறைய பேர் இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் வாய்ப்பு கொடுங்க. பாட வைங்கன்னுதான் டைரக்டர்களை கேட்டுக்கிறேன். தினமும் ஒருத்தரை அழைச்சுட்டு போய் ஸ்ரீகாந்த் தேவா, ஜி.வி.பிரகாஷ் மாதிரி மியூசிக் டைரக்டர்களுக்கு அவங்களை அறிமுகப்படுத்தி வைக்கிறேன். அப்படி வர்ற வாய்ப்பை அந்த பாடகர்கள் முறையா பயன்படுத்திக்கணும். அதுதான் என்னோட ஆசை.
இனிமேல் நாந்தான் வேணும்னு வற்புறுத்தி பாட அழைச்சா மட்டும்தான் நான் பாடுவேன். எழுதுவேன். இல்லேன்னா அவங்களைதான் ரெகமண்ட் பண்ணுவேன் என்றார் உறுதியாக.
சினிமாவிலிருந்து விலகி வேறென்ன செய்யப் போகிறாராம்? கடந்த பல வருஷமா வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு நடந்தே போவேன். இப்போ மாதாவ பற்றி ஒரு ஆல்பம் தயாரிச்சுட்டு இருக்கேன். அதுக்கப்புறம் நாகூர் தர்காவை பற்றி இன்னொரு ஆல்பம் தயாரிப்பேன் என்றார். நிறைய ஆல்பங்கள் தயாரிக்கிற முயற்சியில் இறங்கிவிட்டாராம்.
கானா பாலா இடத்திற்கு இன்னொரு ஓணான் பாலா கூட வரட்டும்…. ஆனால் அவரது கம்பீர குரலுக்கு இருக்கிற மவுசு இன்னும் பல இயக்குனர்களை அவர் பக்கம் இழுக்கும். அவ்வளவு சீக்கிரம் விட்டுவிடாது என்பதே நமது கன்குளூஷன்!