நல்லவேளை… இவரெல்லாம் திருக்குறளுக்கு உரை எழுதல….!
சில புன்னகைகள் மிகவும் அர்த்தமுள்ளவை. அதே நேரத்தில் இயலாமைக்கு உரியவையும் கூட! நேற்று புலவர் புலமைப்பித்தன் அவர்களின் சிரிப்பும் அப்படிதான் இருந்தது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் போர்ப்படை தளபதிகளில் மிக முக்கியமானவர் புலமைப்பித்தன். அரசவை கவிஞராகவும் மேலவை தலைவராகவும் அவரை வைத்திருந்து அழகு பார்த்தார் எம்ஜிஆர். சரி… புன்னகைக்கு வருவோம்.
அவரது பேரன் திலீபன் ஹீரோவாக அறிமுகமாகும் படம் ‘எவன்’. இந்த படத்தில் ஒரு அருமையான கருத்தாழமிக்க பாடல் ஒன்று இருக்கிறது. கானா பாலா எழுதி பாடிய ‘ச்சீ போ நாயே பொறுக்கி’ என்கிற பாடல்தான் அது. ‘ஐயா… உங்க பேரன் அறிமுகமாகும் படத்தில் இப்படியொரு பாட்டு வருதே, எப்படிங்க?’ என்றொரு கேள்வி எழுப்பப்பட்டது அவரிடம். அதற்குதான் மெல்லிய புன்னகையை மட்டும் பதிலாக்கிவிட்டு கடந்தார் புலவர்.
புலவரின் பேரன் இந்த படத்தில் நடிக்க வந்தது ஏதோ அதிர்ஷ்டத்தால் வந்ததல்ல. திறமையால்தான். அடிப்படையில் பைக் ரேஸர்தான் இந்த திலீபன் புகழேந்தி. இரண்டு முறை தமிழ்நாடு லெவலில் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றிருக்கிறார். நடிப்பின் மீதும் ஆசை வந்தது அவருக்கு. கூத்துப்பட்டறையில் நடிப்பு கற்றுக் கொள்ள போன இடத்தில்தான், இந்த வாய்ப்பு. கடந்த இரண்டு வருஷங்களாகவே தனது கதைக்கேற்ற ஹீரோவை தேடிக் கொண்டிருந்தாராம் டைரக்டர் கே.எம்.துரைமுருகன். இவர் சமீபத்தில் வெளிவந்த வெற்றிப்படமான கோலிசோடா படத்தின் இணை இயக்குனர். கூத்துப்பட்டறைக்கு வருகிற இளைஞர்களில் ஒருவரை தேடுவோம் என்று அங்கு வந்தவருக்குதான் புலவரின் பேரன் கண்ணில் பட்டார். ‘நான் அவரை ஹீரோவா பிக்ஸ் பண்ணும்போது தெரியாது, அவருக்கு இவ்வளவு பெரிய பேக்ரவுண்ட் இருக்கும்னு. புலவரின் பேரன்னு தெரிஞ்சதும் எனக்கு இன்னும் மகிழ்ச்சி’ என்றார் துரைமுருகன்.
காதலர்களை சேர்த்து வைப்பதற்காக நண்பர்கள் போராடுகிற கதை நிறைய வந்திருக்கிறது இங்கே. மகனை அம்மாவோடு சேர்த்து வைக்க ஒரு காதலி முயல்கிறாள் என்பதுதான் இந்த படத்தின் கரு. படத்தில் அம்மாவை பற்றியும் ஒரு அற்புதமான பாடலை உருவாக்கியிருக்கிறோம் என்றார் டைரக்டர்.
பேச்சு மீண்டும் ‘ச்சீ… போ… நாயே… பொறுக்கி’க்கு வந்தது. இந்த பாடலை எழுதி கொடுத்துவிட்டு போன பாலா, அந்த ட்யூனை கேட்டுவிட்டு இதை நல்லா கரெக்ஷன் பண்ணி வேற ட்யூன் கொடுங்க என்று கூறிவிட்டாராம். இப்படியே நாலைந்து முறை திருத்த சொல்லி, முழு திருப்தி ஏற்பட்ட பிறகே பாடினாராம்.
நல்லவேளை… இவரெல்லாம் திருக்குறளுக்கு உரை எழுதல….!