கோலிசோடா2 / விமர்சனம்

‘முட்ட வர்றது எருமையா இருந்தாலும், மூடிட்டு ஓடுறது பெருமையில்ல!’ அதுவும் சும்மா போறவன் மேல வந்து முட்டுனா? “விடாதே…” என்கிறது கோலிசோடா2 ன் தத்துவம்!

கோயம்பேடு மார்க்கெட்டில் கொந்தளித்த பசங்களெல்லாம் இன்னும் கொஞ்சம் பெரியவனாக வளர்ந்திருந்தால்? அப்படிதான் கற்பனை செய்திருக்கிறார் கோலிசோடா ஒன்று மற்றும் இரண்டின் இயக்குனர் விஜய் மில்டன். முதல் பகுதிக்கும் இந்த இரண்டாம் பகுதிக்கும் சற்றும் சம்பந்தமில்லாவிட்டாலும், ‘அநீதி கண்டு பொங்குவாய்’ என்ற ஒற்றை மந்திரச் சொல், ஒன்று சேர்த்திருக்கிறது இரண்டையும்.

அவரவர் வாழ்க்கையை வாழ ஆசைப்படும் மூன்று இளைஞர்கள்தான் பாரத் சீனி, வினோத், இசக்கி பரத்! ரவுடியிடம் வேலை பார்க்கும் சீனிக்கு எப்படியாவது அந்த வேலையை விட்டுவிட்டு நல்ல தொழில் ஏதாவது பார்க்க ஆசை. வினோத்தின் ஆசை ஆட்டோவை விற்றுவிட்டு நல்லதாக ஒரு வேன் வாங்க வேண்டும். இசக்கி பரத்துக்கு ஓட்டல் வேலையை விட்டு பேஸ்கட் பால் பிளேயர் ஆக வேண்டும். இம் மூவரின் லட்சியத்தையும் கொத்தி கூறு போடுகிறார்கள் மூன்று அக்யூஸ்டுகள்.

மூவருமே சமூகத்தில் பெரிய மனுஷன்களாக இருக்க… அவ்ளோ பெரிய முதலைகளை தம்மாத்துண்டு பசங்க எப்படி புரட்டியெடுத்தார்கள் என்பது க்ளைமாக்ஸ்! மேலோட்டமாக பார்ப்பதற்கு ‘அரைத்த மாவு’ போலிருந்தாலும், நுரைத்த கோபத்துடன் வசனங்களையும் காட்சிகளையும் வடித்திருக்கிறார் விஜய் மில்டன். ஆங்காங்கே புதுப்புது சிந்தனைகள் எட்டிப்பார்ப்பதால், சோடா தொண்டைக்குள் இறங்கி, வயிற்றுக்குள் செரிக்கும் வரை விறுவிறுதான்! அதிலும் முதல் பாதி ஜெட் வேகம்!

மூன்று பசங்களுமே நடிக்கதான் வந்திருக்கிறோம் என்பதையும் மறந்து வெடிக்கிறார்கள். தனித்தனியாக பாதிக்கப்படும் மூவரும், ஒரு புள்ளியில் ஒன்றிணைகிற அந்த காட்சி, அசத்தல்! ஆனால் அதன் நீளம்தான் நெளிய விடுகிறது.

இசக்கி பரத், நல்ல ஹைட்! இவருக்கும் க்ரிஷாவுக்கும் முகிழ்க்கிற லவ், மனசை அள்ளிக் கொண்டுபோகிற ‘லைவ்’! கல்யாணம் முடிந்தது என்கிற சந்தோஷத்தை இரண்டு புன்னகை கடந்துவிடுகிற நேரத்தில் பறித்துக் கொள்கிற ஜாதி தலைவனை வெட்டி கொன்னால்தான் என்ன என்கிற முடிவை ரசிகன் எடுக்கிற அதே நேரத்தில், இசக்கியும் நண்பர்களும் எடுப்பதுதான் சூப்பர்.

பாரத் சீனிக்கும் சுபிக்ஷாவுக்கும் இடையேயான காதலில் எக்கச்சக்க குறும்பு. காதலும் ஆக்ஷனும் சரிபாதி விகிதத்தில் கலந்திருந்தாலும், ஆக்ஷனில்தான் அட்ராக்ட் பண்ணுகிறார் சீனி. (சுபிக்க்ஷாவும் சீனியும் எப்போ? எங்கே? அந்த சீனை காட்டவேயில்லையே டைரக்டர் சார்? ஹிஹி)

வினோத் மட்டும்தான் ஒண்டிக்கட்டை என்று நினைக்கிற நேரத்தில், தாத்தாவின் பேத்தி என்று ஒருவரை கோர்த்துவிடுகிறார்கள். இந்த காதலில் ஜீவன் கம்மி. இருந்தாலும் ஆக்ஷன் ப்ளஸ் அழுகை ப்ளஸ் சென்ட்டிமென்ட்டில் தெறிக்க விட்டிருககிறார் வினோத். இவருக்கு ரோல் மாடலாக ஒரு நிஜ ஆட்டோக்காரர். ஒரு சீனில் அவரையும் காட்டியிருப்பது விஜய் மில்டனின் பெருந்தன்மை!

தன் காதல் போலவே தன் மகளின் காதலும் அமைய… வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு இருவரையும் கண்காணிக்கும் அம்மா ரோகிணிக்கும் ஒரு ஆஹா.

எல்லா நெருப்புத் துண்டுகளையும் அள்ளி தன் பாக்கெட்டில் போட்டுக் கொள்கிற கேரக்டரில் சமுத்திரக்கனி. ஏன் இவர்களுக்காக அவர் அலை பாய்கிறார். தலை சாய்கிறார். வெட்டு படுகிறார். விசிறியடிக்கப்படுகிறார் என்பதெல்லாம் புரியாத புதிர் என்றாலும், நெகிழ்கிறது தியேட்டர். தனியே தன்னந்தனியே சரக்கடிக்கும் சமுத்திரக்கனியின் ஸ்டைல், ஆபத்து பெருசுகளா!

இரண்டாம் பாதியில் வில்லன்களை கொத்தாக தட்டியெறிய கிளம்பும் மூவரும், பேய் கூச்சல் போடுவதும், சுமார் 100 பேரை ஒரே நேரத்தில் சமாளிப்பதும் ஐம்பது ரஜினிகளும், ஆறேழு விஜய்களும், ஏழெட்டு அஜீத்களும் வந்தால் கூட நடக்காத சமாச்சாரம். சின்னஞ்சிறு பிரபலமற்ற ஹீரோக்களை வைத்துக் கொண்டு இப்படியா துணிவது? ஸாரி… மில்ட்டன்! மொத்த படத்திற்கும் இதுவே திருஷ்டி.

கவுதம் வாசுதேவ் மேனன்தான் போலீஸ் அதிகாரி. அந்த முட்டைக்கண் பெரிதாகவே உதவுகிறது கம்பீரத்திற்கு. சில காட்சிகளே வந்தாலும், ‘ஒரு பெரிய ரோல்ல வாங்க சார்…’ என்று அழைக்கும்படியான ஈர்ப்பு.

திரைக்குப்பின் தானும் ஒரு ஹீரோவாக கெத்து காட்டுகிறது தீபக்கின் எடிட்டிங்! காட்சிகள் மிக்ஸ் ஆகும் அந்த ஸ்டைல், சோர்வே தராத சூப்பர் ஸ்டைல்! அச்சுவின் இசையில் ‘ஆத்தோர பேரழகி’ இந்த வருடத்தின் சூப்பர் ஹிட். சந்தேகமேயில்லை. பின்னணி இசையும் மிரட்டல்!

கழுத்தை திருகிவிடுகிற ஆக்ஷன், கண்ணை விட்டு அகலாத காதல், இவ்விரண்டையும் சரி சமமாக மிக்ஸ் பண்ணிய சோடா இது.

பொங்குற சோடா, மனசிலேயே தங்குற சோடாவனதுல ஒண்ணும் வியப்பில்லையே?

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த 2.0

https://www.youtube.com/watch?v=LdfeJHaNbNA&t=5s

Close