சேச்சே… நான்தான் வாய்ப்பு கேட்டு நடிக்கிறேன்…? ஆர்யா என்கிற அற்புத மனுஷனின் முகம்!
ப்ளே பாய், எல்லா நடிகையுடனும் சுற்றுவார்… என்பதை தவிர, வேறொரு பிம்பமும் இல்லை ஆர்யாவுக்கு. ஆனால் ஈகோவை தலையில் சுமந்து கொண்டிருக்கிற அத்தனை நடிகர்களும் பாடமாக படிக்க வேண்டிய ஒரு புத்தகமாக இருக்கிறார் அவர். அவரை தொடர்ந்து கவனிப்பவர்களுக்கும் விசாரித்து அறிந்து கொள்பவர்களுக்கும் அவர் ஒரு விசித்திரம்தான். அந்த விசித்திரம் நேற்று நடந்த யட்சன் பிரஸ்மீட்டிலும் வெளிப்பட்டது.
இந்த படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவர் ஆர்யா. இன்னொருவர் கிருஷ்ணா. விஷ்ணுவர்த்தனின் தம்பி, சற்றே ஆர்வக் கோளாறு போல நடந்து கொள்பவரும் கூட! ஒன்றிரண்டு ஹிட்டுகளை கொடுத்திருந்தாலும், பெரும்பாலும் தோல்விதான் தம்பிக்கு. இந்த நிலையில் யட்சனில் இவர் இன்னொரு ஹீரோவாக நடிப்பதற்கு ஆர்யா ஒப்புக் கொள்ள வேண்டுமல்லவா? மைக்கை பிடித்த கிருஷ்ணா, ‘இந்த படத்தில் நானும் நடிக்கறதுக்கு சம்மதித்த ஆர்யாவுக்கு என்னோட நன்றி’ என்றார். உடனே மேடையிலிருந்த ஆர்யா, ‘சேச்சே… மச்சான் அப்படியெல்லாம் சொல்லாத. நான்தான் இந்த படத்துல சான்ஸ் கேட்டு வாங்கி நடிச்சுருக்கேன்’ என்றார் பெருந்தன்மையாக!
வேறொருமுறை ஆர்யாவின் பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த கேள்வி கேட்கப்பட்டது அவரிடம். ‘நீங்க ஏன் எல்லா படத்துலேயும் ஒரு கெஸ்ட் ரோல்ல வர்றீங்க? அப்புறம் சோலோவா நடிக்கும் போது அந்த பெப் இருக்காதே?’ இதுதான் கேள்வி. அதற்கு பதிலளித்த ஆர்யா, ‘எல்லாரும் பிரண்ட்லியா கூப்பிடுறாங்க. நான் அந்த படத்தில் இருக்கறதால ஏதோ ஒரு வகையில் அவங்களுக்கு உதவியாகவும் இருக்கு. என்னால ஒரு பெனிபிட் அவங்களுக்கு வருதுன்னா மனப்பூர்வமா செஞ்சு கொடுக்கறதுதானே சரி?’ என்றார். (சே… என்ன மனுஷன்யா?) அதுமட்டுமல்ல, இவர் படங்கள் வெளியாகும்போது டெபிசிட் ஏற்பட்டால் சம்பளத்தை விட்டுக் கொடுக்கிறார் அல்லவா? அதை அவர்களாக திருப்பிக் கொடுத்தால் சரி. இல்லையென்றால் அதை கேட்பதும் கிடையாதாம்.
சரி… யட்சன் விஷயத்திற்கு வருவோம். இங்கேயும் ஆர்யா ஓப்பனாகதான் பேசினார். ‘என்னைநடிக்க வைத்து யூடிவியில் பலபடங்கள் எடுத்த போதும் தொடர்ந்து வாய்ப்பு தருகிறார்கள். எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறார்கள். விஷ்ணுவர்தனிடம் நான் கதை கேட்பதில்லை. அவர் சொல்ல ஆரம்பித்தால் ஆறேழு மணிநேரம் போகும். அதனாலேயே நான் கேட்கறதில்ல. அவரு நடிக்க கூப்பிட்டா வந்துருவேன். அவ்வளவுதான் என்றார்.
நல்லவேளை… ஆர்யாவிடம் போய் யட்சன் என்றால் என்ன அர்த்தம்? என்று மற்றவர்கள் கேட்பதற்கு முன்பே, அப்படின்னா குபேரன், இயக்குபவன் என்று அர்த்தம் என்று விளக்கமளித்து ஆர்யாவை காப்பாற்றினார் யுடிவி தனஞ்செயன்.
கலெக்ஷனும் குபேரன் கோவில் உண்டியல் மாதிரியே நிரம்பட்டும்…
அவ்வளவு உத்தம சிகாமணியா இருந்தா இன்னமும் ஏன் படித்துறை படத்தை பண்ணாம சுகாவின் வயத்திலே அடிக்கிறான்? அட்லீஸ்ட் பாடல்களையாவது ரிலீஸ் பண்ணலாமே?